Friday, May 6, 2011

3.கல்யாணம் ஆகாதவர்களுக்குக் கல்யாணம் நடக்க

ஸ்ரீ ராமசந்த்ராய நம:
3.கல்யாணம் ஆகாதவர்களுக்குக் கல்யாணம் நடக்க


=================================================================
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
பாலகாண்டம்: ஸர்க்கம் 73
=================================================================


உமா ஸம்ஹிதா

கன்யார்தீ ச வடு: கன்யாப்யனுருப வரார்த்தி நீ !
ஸீதாவிவாஹ ஸர்கம் து படேத் ப்ராத: ப்ரயத்னத: !!
கவ்யம் நிவேதயேத் க்ஷிரம் ஸத்யோ துக்தம் ஸீசிஸ்தலே!




கல்யாணமாகாமலிருப்பது, கல்யாணமான தம்பதிகள் மனக்கசப்பினால் பிரிந்திருப்பது, நியாயமான முறையில் வாழ்க்கைக்கு இன்றியமையாத சில சுகண்கள் கிட்டாமற்போவது போன்றவை நீங்கி, தம் கோரிக்கை பூர்த்தியாவதற்கு, 'ஸீதா கல்யாண' கட்டமுள்ள பால காண்டம் 73-வது ஸர்க்கத்தைக் காலையில் பாராயணம் செய்யவேண்டும்.


நிவேதனம்: அப்போது கறந்த பசும்பால்.


ஸங்கல்பம்
ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரதசத்ருக்ன ஹனுமத்ஸமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரஸாதேன
...நாம்ன்யா:கன்யாயா: ...நாம்ன: வரஸ்ய
சீக்ரமேவ விவாஹஸித்யர்த்தம் ஸ்ரீ ஸீதா
விவாஹாத்மக ஸ்ரீமத் ராமாயண கட்ட
பாராயணம் அஹம் கரிஷ்யே!


ஸர்க்கம் 73
ஸீதா விவாஹம்


யஸ்மிம்ஸ்து திவஸே ராஜா சக்ரே கோதானமுத்தமம்!
தஸ்மிமஸ்து திவஸே ஸூரோ யுதாஜித் ஸமுபேயிவாந்!!


எந்தத் தினத்தில் தசரதர் தன் புத்திரர்களுக்கு விரத ஸமாவர்த்தனம் செய்தாரோ அன்று கேகய ராஜபுத்திரனும் பரதனுக்கு மாமனுமான யுதாஜித் மிதிலைக்கு வந்து தசரதரைக் கண்டு க்ஷேமம் விசாரித்து, "மஹாராஜா! தாமும் இன்னும் யாருடைய க்ஷேமத்தைக் கோருகின்றிர்களோ அவர்களும் சௌக்கியமென்று கேகயாதிபதி வெகுப்பிரீதியுடன் தெரிவிக்கிறார். என் சகோதரியின் மகனைப் பார்க்கவிரும்பி அயோத்யைக்கு வந்தேன். நீங்களெல்லோரும் விவாஹ காரியமாய் மிதிலைக்கு போனதாகக் கேள்விப்பட்டு இங்கே மிக வேகமாக வந்தேன்" என்றார். தனக்கு வெகு பிரியமான தன் மைத்துனனைக் கண்டு தசரதர் சந்தோஷித்துத் தகுந்தபடி உபசரித்தார்.


மறு நாள் காலையில் அவர் நித்திய கர்மங்களை முடித்துக் கொண்டு பந்து பரிவார மந்திரவர்க்கங்களுடன் மஹரிஷிகளை முன்னிட்டுக் கொண்டு யாகசாலைக்கு சமீபத்திலுள்ள விவாஹ மண்டபத்திற்கு போனார். அவருடைய குமாரர்கள் விவாஹத்திற்குப் பூர்வாங்கமான வைதிக லௌகிக காரியங்களை முடித்து வஸ்திராபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, வசிஷ்டர் முதலிய மஹரிஷிகளை முன்னிட்டுத் தசரதருடைய சமீபத்தில் உட்கார்ந்தார்கள். பிறகு வசிஷ்டர் ஜனகரிடத்தில் வந்து, "ராஜசிரேஷ்ட! அயோத்யாதிபதி தன் புத்திரர்களுக்கு சகல விவாஹ பூர்வாங்கங்களை முடித்து, கன்யாதானம் செய்யும் உமது சௌகரியத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். கொடுக்கிறவரும் பெற்றுக்கொள்ளுகிறவரும் எவ்விதத்திலும் உத்தமமானவர்களாகையால் சகல க்ஷேமங்களும் உண்டாகும். இந்த சிலாக்யமான விவாஹத்தைச் செய்து உமது வார்த்தையை நிறைவேற்றும்" என்றார். உத்தம தர்மங்களை அறிந்தவரும், வெகு கம்பீர சுபாவமுள்ளவருமான ஜனகர் அதைகேட்டு, "என் அரண்மனை வாசலில் தங்களைத் தடுக்கும் காவளாளி யார்? இங்கே வருவதற்கு யாருடைய உத்தரவைக் கேட்கவேண்டும்? தங்களுடைய கிருஹத்தில் இஷ்டப்படி சஞ்சரிக்க தடையென்ன? அயோத்யை உங்களுக்கு எவ்வளவு ஸ்வாதீனமோ அவ்வளவு இந்த மிதிலையும் ஸ்வாதீனமல்லவா? விவாஹ சம்பந்தமான சகல மங்கள காரியங்களையும் என் புத்திரிகளுக்குச் செய்து முடித்தேன். கொழுந்து விட்டெரியும் அக்னி ஜ்வாலைகளைப்போல், அவர்கள் சகல வஸ்திராபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு மங்கள வேஷத்துடன் அக்னி வேதிக்கு சமீபத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். நான் சித்தமாக இருக்கிறேன். உங்களுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அரண்மனையின் வாசலில் ஏன் தங்கவேண்டும்? காலதாமதமில்லாமல் வந்து விவாஹத்தை நடத்த வேண்டும்" என்றார். தசரதர் புத்திரமித்திர பந்து மந்திரி புரோகித மஹரிஷி பரிவாரங்களுடன் விவாஹ மண்டபத்தில் பிரவேசித்தார்.


ஜனகர் அவர்களுக்குத் தகுந்தபடி மரியாதை செய்து ஆஸனம் கொடுத்து, வஸிஷ்ட மஹரிஷியே! சகல லோகங்களுக்கும் பரமானந்தத்தைக் கொடுக்கும் ராமனுடைய விவாஹ மஹோத்சவத்தை தர்ம ஸ்வரூபியான தாங்களும் மற்ற ரிஷிகளும் நடத்தும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்" என்றார். வஸிஷ்டர் அப்படியே ஆகட்டுமென்று, விசுவாமித்திரரையும், சதானந்தையும் மற்ற மஹரிஷிகளையும் முன்னிட்டுக் கொண்டு விவாஹ மண்டபத்தின் நடுவில் விதிப்படி வேதியை அமைத்து, அதைச் சந்தனம், புஷ்பம், தங்கப் பாலிகைகள், கிண்டிகள், சங்கப்பாத்திரங்கள், முளைத்த விதைகளுள்ள மடக்குகள், தூபத்தால் நிறைந்த பாத்திரங்கள், ஸ்ருக், ஸ்ருவம், மஞ்சள் கலந்த அக்ஷதைகள், நெல் பொரிகளும் அர்க்கிய ஜலமும் நிறைந்த பாத்திரங்கள் முதலியவைகளால் அலங்கரித்தார். பிறகு அதன்மேல் ஒரே அளவுள்ள  தர்பங்களைப் பரப்பி மந்திரங்களுடன் அக்னிப் பிரதிஷ்டை செய்து தம்பதிகளின் க்ஷேமத்திற்காக ஹோமம் செய்தார்.


பிறகு ஜனக மஹாராஜா சர்வாபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சீதையை அக்னிக்கு சமீபத்தில் ராமனுக்கெதிரில் நிறுத்தி, கௌசல்யையின் ஆனந்தத்தை விருத்தி செயும் ரகுவீரனைப் பார்த்து, "இவள் பூமியிலிருந்து கிடைத்ததால் சீதை என்று பெயருள்ளவள். நான் வெகுப் பிரீதியுடன் இவளை என் பெண்ணாக வளர்த்து, சகல தர்மங்களையும் உபதேசித்திருக்கிறேன். நீ எந்த தர்மத்தை அனுஷ்டிக்க விரும்புகிறாயோ அதைத் தானும் கூட இருந்து அனுஷ்டிப்பாள். இவளை நான் உனக்குப் பார்யையாகக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள். உனக்கு சகல மங்களங்களும் உண்டாகட்டும். உன் கையால் இவளுடைய கையைப் பிடி. இவள் மஹா பதிவிரதையாக இருப்பாள். மஹா பாக்யசாலி: உன் நிழலைப் போல் உன்னை விட்டு பிரியாதவள்" என்று மந்திரங்களால் பரிசுத்தமான ஜலத்தை அவருடைய கையில் வார்த்தார். அப்பொழுது தேவர்களும் மஹரிஷிகளும் 'நல்லது, நல்லது' என்று கொண்டாடினார்கள். தேவதுந்துபி முதலிய வாத்தியங்கள் முழங்கின. ஆகாசத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தது.


பிறகு ஜனக, "லக்ஷ்மண! என்னால் கொடுக்கப்படும் ஊர்மிளையைக் காலதாமதமில்லாமல் பாணிக்கிரஹணம் செய். உனக்கு சகல மங்களங்களும் உண்டாகட்டும்" என்றார். பிறகு சத்ருக்கனனைப் பார்த்து, "பராக்கிரமசாலியே! சுருதகீர்த்தியைப் பாணிக்கிரஹணம் செய். நீங்களெல்லோரும் பிரம்மச்சரிய விரதத்தைப் பூர்ணமாய் அனுஷ்டித்தவர்கள். மதுரமான சுபாவமுள்ளவர்கள். கிருஹஸ்தாசிரமத்தை அனுஷ்டியுங்கள். காலதாமதம் வேண்டாம்" என்றார்.


உடனே அந்த நான்கு ராஜ புத்திரர்களும் வசிஷ்டருடைய அனுமதியால் அந்த நான்கு ராஜ புத்திரிகளைப் பாணிக்கிரஹணம் செய்தார்கள். பிறகு அவர்கள் அக்னியையும் ஜனகரையும் ரிஷிகளையும் பிரதக்ஷினம் செய்து தங்களுடைய ஸூத்திரப்படி தனியாய் அக்னிப் பிரதிஷ்டை செய்து விவாஹ ஹோமத்தை நடத்தினார்கள். அந்த சமயத்தில் தேவதைகள் புஷ்பமாரி பெய்தார்கள். துந்துபி முதலிய வாத்தியங்களை முழங்கினார்கள். கந்தர்வகளும் அப்ஸரஸ்களும் மதுரமாய்ப் பாடினார்கள். மங்கள  வாத்தியங்களை வாசித்தார்கள். ஆனந்தமாய் நர்த்தனம் செய்தார்கள். ரகுகுல சிரேஷ்டர்களான அந்த ராஜகுமாரர்களுடைய விவாஹ காலத்தில் இவ்விதமான ஆச்சர்யங்கள் நடந்தன. இப்படி வாத்திய கோஷங்களுடன் ராஜபுத்திரர்கள் அக்னியை மூன்று தடவை பிரதக்ஷிணம் செய்து விவாஹ ஹோமத்தை முடித்து, பத்தினிகளுடன் தங்களுடைய அரண்மனைக்குப் போனார்கள். தசரத மஹாராஜா தன் பரிவாரங்களோடும் மஹரிஷிகளோடும் அவர்களைப் பார்த்துக் கொண்டே ஆனந்தப் பரவசராய்ப் பின் சென்றார்.


அதோகார்யம் ஜக்முஸ்தே ஸபார்யா ரகுனந்தனா: !
ராஜாப்யனுயௌ பச்யந் ஸர்ஷிஸங்க: ஸபாந்தவ: !!




பாலகாண்டம்: ஸர்க்கம் 73 நிறைவுபெற்றது.


மங்கள சுலோகத்தைக்கூறி நிறைவு செய்யவும்


ஸ்ரீராம ராம ராம

Monday, May 2, 2011

2. செய்தொழிலில் தனலாபம் உண்டாக



ஸ்ரீ ராமசந்த்ராய நம:
2. செய்தொழிலில் தனலாபம் உண்டாக
=======================================================================
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்



அயோத்யா காண்டம்: சர்க்கம் 32


=======================================================================
உமா ஸம்ஹிதா
அர்தகாம: படேத் ஸர்கம் யாத்ரா தான கதாம்சகம்
    ராமஸ்யாரண்ய கமன ஸமயே து த்ரிஸந்த்யகம் !!


தாம் எதிர்பார்த்த பணம் அல்லது பொருள் தனக்குக் கை கூடாமை, உத்தியோகத்தால் சம்பள உயர்வு ஏற்படாமை, கொடுக்கல் வாங்கல்களில் தகராறு முதலிய பணக்கஷ்டங்கள் நிவர்த்தி ஆவதற்கும் பொதுவாக மேன்மேலும் பணம் விருத்தியாவதற்கும் ஸ்ரீ ராமன் காட்டிற்குப் போகுமுன் செய்த "யாத்ரா தானத்தை" விவரிக்கும் அயோத்யா காண்டம் 32-வது சர்க்கத்தை தினம் மூன்று காலங்களிலும் பாராயணம் செய்ய வேண்டும்.



நிவேதனம் : ஐந்து வாழைப்பழங்கள்.


ஸங்கல்பம்


ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் சமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரசாதன, அஸ்ம
து பாத்தேஷூ அர்த்த பரேஷூ கர்மஸூ
புஷ்கல தநாவாப்யர்த்தம் "யாத்ராதான"
த்மக ஸ்ரீமத் ராமாயண கட்ட பாராயணம்
அஹம் கரிஷ்யே1

ஸ்ரீ வால்மீகி நம:
ஸ்ரீ ஹனுமான் நம:
ஸ்ரீ ராமன் நம:

ஸர்க்கம் 32
யாத்ராதானம்


தத: சாஸநமாஜ்ஞாய ப்ராது: ஸூபதரம் ப்ரியம் !
கத்வா ஸ ப்ரவிவேஷாஸூ ஸூயஜ்ஞஸ்ய நிவேஷனம் !!


ராமன் பிராம்மணர்களுக்குத் தானம் கொடுக்கிறார் என்ற புண்ணியகரமான வார்த்தையைக் கேட்டு லட்சுமணன், தன்னை அழைத்துப் போக ராமன் சம்மதித்ததைப் பற்றி அடங்காத ஆனந்தமடைந்தார். பிறகு அவருடைய உத்திரவுப்படி ஸூயக்ஞருடைய வீட்டிற்குப் போய் அக்னிஹோத்திர சாலையில் அவரைக்கண்டு நமஸ்காரம் செய்து," மித்திரரே! வாரும். உலகத்தில் ஒருவரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்த என் தமையனுடைய வீட்டிற்கு வந்து பாரும்," என்று அழத்தார். ஸூயக்ஞர் காலையில் செய்ய வேண்டிய அக்னிஹோத்திரத்தை முடித்துவிட்டு சகல லக்ஷ்மியும் விளங்கும் ராமனுடைய அந்தப்புரத்திற்கு லட்சுமணனுடன் வேகமாகப் போனார்.


மஹா ஞானியான ஸூயக்ஞரைக் கண்டு ராமனும் சீதையும் பரபரப்புடன் எழுந்து கைகூப்பி, ஹோம அக்னியை உபசரிப்பது போல வலம் வந்து வணங்கினார்கள். உத்தமமான தங்கத் தோள் வளைகளையும், தங்கச் சரட்டில் சேர்க்கபட்ட நவரத்தினங்களையும், குண்டலங்களையும், கைவளைகளையும், புஜகீர்த்திகளையும் இன்னும் பல அபூர்வமான ரத்தினங்களையும்  ராமன் ஸூயக்ஞருக்குக் கொடுத்து உபசரித்தார். பிறகு சீதை நினைவுபடுத்தியபின் "மித்திர!, இந்த ஹாரத்தையும் தங்கக் கொடியையும் ஒட்டியாணத்தையும் தங்களுடைய பாரியைக்கு சீதை கொடுக்க விரும்புகிறாள். அதை அங்கீகரிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். மேலும், தான் வனத்திற்குப் போகும் சமயத்தில் விசித்திரமாய் வேலை செய்யப்பட்ட இந்தக் கேயுரங்களையும் தோள் வளைகளையும் தங்களுடைய பத்தினிக்குக் கொடுக்கும்படி பிரார்த்திக்கிறாள். பலவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு விலையுயர்ந்த விரிப்புடைய இந்தக் கட்டிலைத் தாங்கள் அங்கீகரிக்கவேண்டும் என்று விரும்புகிறாள். என் மாமா எனக்குக் கொடுத்த சத்ருஞ்ச்ஜயனென்ற  யானையையும் இன்னும் ஆயிரம் யானைகளையும் தங்களுக்குக் கொடுக்கிறேன்," என்றார். ஸூயக்ஞர் யானைகளை பெற்றுக்கொண்டு ராம லட்சுமணனையும் சீதையையும் ஆசிர்வதித்தார்.


பிறகு பிரம்மா தேவராஜனைக் கட்டளை இடுவது போல் ராமன் மிகுந்தப் பிரியத்துடன், "லட்சுமண, அகஸ்த்தியருடைய புத்திரரையும் விவாமித்திரருடைய புத்திரரையும் இங்கே வருவித்து, லோகத்தில் பயிர்களை ஜலத்தால் போஷித்து வளர்ப்பது  போல், அந்தப் பிராம்மண உத்தமர்களுக்கு ரத்தினங்களைக் கொடுத்துத் திருப்தி செய். அனேகமாயிரம் பசுக்களையும், தங்கம், வெள்ளி, நவரத்தினங்களையும் வேண்டியவரையில் கொடு.


"யஜூர்வேத தைத்ரீய சாகையை அத்யயனம் செய்பவர்களுக்கு ஆசாரியரான ஒரு பிராம்மணோத்தமர் ஒவ்வொரு நாளும் என் தாயின் வீட்டிற்கு வந்து, மிகுந்த பக்தியுடன் அவளுக்கு ஆசிர்வாதம் செய்துகொண்டிருக்கிறார். அவர் மஹாவித்துவான். வேதங்களின் ரகசியங்களை அறிந்தவர். வாகனங்கள், பட்டுகள், போர்வைகள், வேலைக்காரர்கள் முதலியவைகளை வேண்டியவரையில் அவர்க்குக் கொடு. நமது வீட்டில் வெகுநாளாகப் பழகிக்கொண்டிருக்கும் நமது மந்திரியும் சாரதியுமான சித்ரரதரென்பவருக்கு எண்ணிறந்த ஆடுகளையும் ஆயிரம் மாடுகளையும் ரத்தினங்களையும் வஸ்த்திரங்களையும் தான்யங்களையும் கொடுத்துத் திருப்தி செய். வேதத்தில் கடம் காலாபமென்ற பாகங்களை அத்யயனம் செய்துகொண்டு பலாச தண்டத்தைத் தரிக்கும் பல பிரம்மசாரிகள் என்னால் ஆதரிக்கப்பட்டிருக்கிறார்கள். எப்பொழுதும் வேதாத்யனம் செய்து கொண்டிருப்பதால் ஆகாரம் தேட அவர்களுக்குப் பொழுதில்லை. இயற்கையாகவே சுறுசுறுப்பு இல்லாதவர்கள். ருசியான பதார்த்தங்களில் விருப்பமுள்ளவர்கள். ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட எண்பது வாகனங்களையும், தான்யங்களைச் சுமக்க ஆயிரம் எருதுகளையும், நிலங்களை உழுவதற்கு இருநூறு மாடுகளையும், பால் தயிர் இவைகளுக்காக ஆயிரம் பசுக்களையும் அவர்களுக்குக் கொடு. மேகலையென்ற அரைநூல் மாலையைத் தரிக்கும் அனேக பிரம்மசாரிகள் தங்களுக்கு விவாகம் செய்யவேண்டுமென்று என் தாயை அண்டியிருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பசுக்களைக் கொடு. அதனால் கௌசல்யை திருப்தி அடையட்டும்," என்று கட்டளையிட்டார். ராமனால் குறிபிடப்பட்ட தனம் முதலியவைகளை அந்தப் பிராம்மணர்களுக்கு லட்சுமணன் குபேரனைப் போல தானே  கொடுத்தார்.


பிறகு தாரைதாரையாகக் கண்ணீர்ப் பெருக்கிக்கொண்டு நிற்கும் பரிவாரங்களில் ஒவ்வொருவருக்கும் சௌக்கியாகப் பிழைப்பதற்குப் போதுமான தனத்தை ராமன் தானே கொடுத்து, " நாங்கள் திரும்பி  வரும்  வருவரையில் என் அரண்மனையையும் லட்சுமணனுடைய வீட்டையும் சூன்யமாக வைக்காமல் நீங்கள் அங்கிருந்து பாதுகாக்க வேண்டும்", என்றார். பிறகு தன் பொக்கிஷத் தலைவனைத் தருவித்தும், "என் ஐசுவரியம் முழுவதையும் இங்கே கொண்டு வா" என்று உத்தரவு செய்தார். அவைகளை, வேலைக்காரர்கள் குப்பல்களாகக் குவித்தார்கள். பிறகு ராமலட்சுமணர்கள் அவைகளைப் பிராம்மணச் சிறுவர்களுக்கும் கிழவர்களுக்கும் ஏழைகளுக்கும் போதுமான வரையில் கொடுத்தார்கள்.


அப்போது கர்க்கரிஷியின் வம்சத்தில் பிறந்த ஒரு ஏழை பிராம்மணன் அங்கே வந்தார். அவருக்குத் திரிஜடரென்று பெயர். ஏழ்மைத் தனத்தால் தேகம் முழுவதும் மஞ்சள் வர்ணம் படர்ந்திருந்தது. வயல்களில் சிந்திக் கிடக்கும் நெல்லை ஒவ்வொன்றாகப் பொறுக்கி ஜீவனம் செய்கிறவர். மிகவும் வயது சென்றவர். தன் மனைவி மக்களுடன் காட்டில் வசிப்பவர்.


இளம் பெண்ணான அவருடைய மனைவி,  குழந்தைகளை அவருக்குக் காட்டி, "ஸ்வாமி, நாம் ஏழ்மைத்தனத்தை எவ்வளவு காலம் பொறுக்க முடியும்?. தங்கள் கையிலுள்ள கோடாலி, கலப்பை, மண்வெட்டி முதலியவற்றை எறிந்துவிட்டு நான் சொல்லுகிறபடி கேளுங்கள். தங்களுக்கு ஏதாவது திரவியம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால் தர்மமே அவதாரம் எடுத்திருக்கும் ராமனைத் தரிசனம் செய்யுங்கள்", என்றாள். அவர் தன் பத்தினியின் வார்த்தையை ஒப்புக் கொண்டு தன் கந்தை வஸ்த்திரத்தை மறைத்துக் கொண்டு ராமனுடைய அந்தப்புரத்திற்குப் போகும் வழியால் அங்கே வந்து சேர்ந்தார். பிறகு அங்கிரஸ் முதலிய மஹரிஷிகளுக்கு சமமான தேஜசுள்ள அந்தப் பிராம்மணரை ஐந்தாவது கட்டுவரையில் ஒருவரும் தடுக்கவில்லை. அவர் ராமனுக்கு அருகில் போய், " ராஜபுத்திர! இந்த உலகம் முழுவதையும் உன் கீர்த்தி வியாபித்திருக்கிறது. நான் பெரிய குடும்பி. அவர்களை  போஷிக்க என்னிடத்தில் வேண்டிய தனமில்லை. காட்டில் உதிர்ந்த நெல்லுகளைப் பொறுக்கி ஒவ்வொரு நாளும் ஜீவனம் செய்கிறேன். ஆகையால் என்னிடத்தில் கிருபை செய்யவேண்டும்" என்றார்.


இந்தப் பிராம்மணன் பெரிய குடும்பி, மஹாதரித்திரன். இவருக்குத் தனத்தில் எவ்வளவு ஆசை இருக்கிறதென்று பரீக்ஷிக்க விரும்பிப் புன்சிரிப்புடன் வேடிக்கையாக , "ஸ்வாமி!, எண்ணிறந்த என் பசுக்களில் ஒரு ஆயிரம் கூட இன்னும் தானம் கொடுக்கப்படவில்லையே. தங்கள் கையிலிருக்கும் கழியை சுழற்றி எறியுங்கள். அது எங்கே விழுகிறதோ அதுவரையில் இருக்கும் பசுக்கள் தங்களுடையத்" என்றார்.


உடனே அந்தப் பிராம்மணன் வெகு பரபரப்புடன் தன் வஸ்த்திரத்தை இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு, முழு பலத்துடன் கழியைச் சுழற்றி எறிந்தார். அது சரயு நதிக்கு அக்கரையில் அனேகமாயிரம் பசுக்களுக்கு நடுவில் விழுந்தது. அப்பொழுது ராமன் அந்தப் பிராம்மணரை மிகுந்தப் பிரியத்துடன் ஆலிங்கனம் செய்து, சரயு நதிக்கரையிலிருந்து அந்த மாட்டு மந்தைகள் யாவற்றையும் திரிஜடருடைய வீட்டிற்கு ஒட்டிக் கொண்டு போய்ச் சேர்க்கும்படி இடையர்களுக்கு உத்தரவு செய்து, "ஸ்வாமி!, தாங்கள் என்னிடத்தில் கோபிக்காமலிருக்கப் பிரார்த்திக்கிறேன். தங்களுடைய ஒப்பற்ற பலத்தை அறிய  விரும்பியே கழியைச் சுழற்றி எறியும்படி தங்களைச் சொன்னேன். வேடிக்கையாகச் செய்ததே தவிர வேறல்ல. இன்னும் ஏதாவது வேண்டியிருந்தால் கேட்கும்படி பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு யாதொரு தடையும் வேண்டியதில்லை. பிராம்மணர்களுடைய உபயோகத்திற்காகவே என் ஐசுவரியம் முழுவதையும் சம்பாதித்து  இருக்கிறேன். தங்களைப் போன்ற மஹான்களுக்கு அது உபயோகப்பட்டால் அது எனக்கு அளவற்ற கீர்த்தியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்", என்று அவரை சமாதானம் செய்தார். திரிஜடரும் அவருடைய மனைவியும்  அந்த மாட்டு மந்தைகளைப் பெற்றுக் கொண்டு அளவற்ற ஆனந்தமடைந்து கீர்த்தி, பலம், பிரீதி, சுகம் முதலிய மங்களங்கள் குறைவில்லாமல் விருத்தியாக வேண்டுமென்று மனப்பூர்வமாக ராமனை ஆசீர்வதித்தார்கள்.


பிறகு ராமன் தன் பராக்கிரமத்தால் தர்மமாக சம்பாதிக்கப்பட்ட அளவற்ற ஐசுவரியத்தைத் தன் மித்திரர்களுக்கும் பரிவாரங்களுக்கும் தகுந்த உபசாரத்துடனும் மரியாதையுடனும் கொடுத்தார். அங்கிருந்த பிராம்மணர்களும், மித்திரர்களும், வேலைக்காரர்களும், தரித்திரர்களும், பிச்சைக்காரர்களும் ஆக எல்லோரும் தங்களுடைய யோக்கியதைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி ராமனால் கொடுக்கப்பட்ட தானத்தால் திருப்தி அடைந்தார்கள். திருப்தி அடையாதவர்கள் ஒருவரும் இல்லை.


த்விஜ; ஸூஹ்ருத் ப்ருத்யஜனோதவா ததா
தரித்ர பிக்ஷாசரணச்ச யோ பவேத் !
ந தத்ர கச்சிந் ந பபூவ தர்பிதோ
யதார்ஹ ஸம்மாநந தான ஸம்ப்ரமை: !!
ஸர்க்கம் 32
யாத்ரா தானம் நிறைவு பெற்றது.


மங்கள ஸ்லோகங்கள் கூறி  நிறைவு செய்யவும்.

((((((((((((((((((((((((((((((((ஸ்ரீ ராம ராம ராம))))))))))))))))))))))))))))))))

மங்கள சுலோகங்கள்

ஸ்ரீமத் ராமயண பாராயணம் முடிந்த பிறகு,கீழ் காணும் சுலோகங்களை படிக்க வேண்டும்.

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய : பரிபாலயந்தாம்
ந்யாய்யேன மார்கேணமஹீம் மஹீசா : I
கோப்ராஹ்மணேப்ய : சுபமஸ்து நித்யம்
லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸூகினோ பவந்து II

காலே வர்ஷது பர்ஜந்ய : ப்ருதிவீ ஸஸ்யசாலிநீ I
தேசோயம் க்ஷோபரஹித : பராஹ்மணாஸ்ஸந்து நிர்ப்பயா : II
மங்களம் கோஸலேந்த்த்ராய மஹநீய குணாப்தயே I
சக்ரவர்த்தி த நூஜாய ஸார்வபௌமாய மங்களம் II
வேத வேதாந்த வேத்யாய மேக ச்யாமள மூர்த்தயே I
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ச்லோகாய மங்களம் II
விச்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீ பதே :
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம் I
பித்ரு பக்தாய ஸ்ததம் ப்ராத்ருபிஸ்ஸஹ ஸீதயா II
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம் II
த்யக்த ஸாகேத வாஸாய சித்ரகூட விஹாரிணே I
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம் II
ஸௌமித்ரிணா ச ஜானக்யா சாபபாணாஸி தாரிணே I
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம் I
தண்டகாரண்யவாஸாய கண்டிதாமர சத்ரவே I
க்ருத்ர ராஜாய பக்தாயா முக்திதாயாஸ்து மங்களாம் II
ஸாதரம் சபரீ தத்த பலமூலா பிலாஷிணே I
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் II
ஹநுமத் ஸமவேதாய ஹரீசாபீஷ்ட தாயிநே I
வாலி ப்ரமதநாயஸ்து மஹா தீராய மங்களாம் II
ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூல்லங்கித ஸிந்தவே இ

சித்த ராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம் II
ஆஸாத்ய நகரீம் திவ்யாம் அபிஷிக்தாய ஸீதயா  I
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம் II
மங்களாசாஸந பரை : மதாசார்ய புரோகமை : I
ஸர்வைச்ச பூர்வைராசார்யை : ஸத்க்ருதாயாஸ்து மங்களம் II

Saturday, April 30, 2011

ஸர்க்கம் 25 கௌசல்யை ராமனுக்கு மங்கள ஆசீர்வாதம் செய்தது

ஸர்க்கம் 25
கௌசல்யை ராமனுக்கு மங்கள ஆசீர்வாதம் செய்தது

ஸாபநீய தமாயஸம் உபஸ்ப்ருச்ய ஜலம் ஸூசி: !
சகார மாதா ராமஸ்ய மங்களாநி மநஸ்விநீ: !!

தன் துக்கத்தை அடக்கிக்கொண்டு, தான் அதுவரையில் அழுது கொண்டிருந்ததால் உண்டாண அசுத்தத்தைப் போக்க ஆசமனம் செய்து சுத்தமாக இருந்து கொண்டு கௌசல்யை, "ரகுகுல திலக, காட்டிற்குப் போகாமல் உன்னைத் தடுக்க முடியவில்லையே. ஆகையால் போய் வா. பதிநான்கு வருஷங்களுக்குப் பிறகு திரும்பி வந்து முன்னோர்களின் ஆசாரப்படி ராஜ்யாபிஷேகம் செய்து கொள். எந்த தர்மத்தை நீ ப்ரீதியுடன் பூர்ணமாக அனுஷ்டிக்கிறாயோ, அந்த தர்மமே உன்னைக் காப்பாற்றட்டும். நாற்சந்திகளிலும் தேவாலயங்களிலும் நீ நமஸ்கரிக்கும் தேவதைகளும் மஹரிஷிகளும் காட்டில் உன்னை ரக்ஷிக்கட்டும். விசுவாமித்திர மஹரிஷியால் உனக்கு உபதேசிக்கப்பட்ட அஸ்திரங்கள் யாவும் உத்தம குணங்களுள்ள உன்னை எப்பொழுதும் காப்பாற்றட்டும். நீ பெற்றோர்களுக்குச் செய்யும் சிச்ரூஷையும் நீ பேசும் சத்தியமும் உன்னைக் காப்பாற்றட்டும். உனக்குத் தீர்க்காயுசைக் கொடுக்கட்டும். சமித்துகள், தர்பங்கள், அக்னி குண்டங்கள், தேவ பூஜாஸ்தானங்கள், குன்றுகள், மரங்கள், செடிகள், குட்டையான மரங்கள், மடுக்கள், பக்ஷிகள், சர்ப்பங்கள்,சிம்மங்கள் உன்னைக் காப்பாற்றட்டும். சாத்யர்கள், விச்வேதேவர்கள், மருத்துவர்கள், மஹரிஷிகள், தாதாவிதாதா பூஷா பகன் அர்யமா முதலிய பன்னிரண்டு ஆதித்யர்கள், இந்திரன், யமன், வருணன், குபேரன் முதலிய லோகபாலர்கள், பக்ஷங்கள், மாஸங்கள், ருதுக்கள், வருஷங்கள், பகல், ராத்திரி, முகூர்த்தங்கள் முதலியவைகளின் அதிஷ்டான தேவதைகளும் உனக்கு எப்பொழும் மனகளைச் செய்யட்டும். தியானமும் யோகமும் வேத சாஸ்த்திரங்களில் சொல்லப்படும் தர்மமும் உன்னை நான்கு புறங்களிலும் காப்பாற்றட்டும். சனத்குமாரரும் சோமனும் பிருஹஸ்பதியும் சப்த ரிஷிகளும் நாரதரும் உன்னை எப்பொழுதும் காப்பாற்றட்டும். மஹாப்பிரசித்தியுள்ள திக்பாலர்களும் நான் செய்யும் ஸ்தோத்திரத்தால் சந்தோஷித்து உன்னைக் காப்பாற்றட்டும். கடற்கரையில் இருக்கும் மலைகளும் சமுத்திரமும் குபேரனும் வருணனும் சொர்க்கமும் ஆகசமும் பூமியும் நதிகளும் நக்ஷத்திரங்களும் கிரஹங்களும் கிரஹதேவதைகளும் ராத்திரி பகல்களுக்கு அபிமானி தேவதைகளும் இரண்டு சந்தியா தேவதைகளும் உன்னைக் காப்பாற்றட்டும். ருதுக்கள், மாதங்கள், வருஷங்கள் கலைகள், காஷ்டைகளின் அதிஷ்டான தேவதைகள் உனக்கு ஷேமத்தைக் கொடுக்கட்டும். காட்டில் நீ தபஸ்வீயாக வசிக்கும் பொழுது ஆதித்யர்களும் சாத்யர்களும் உனக்குச் சுகத்தைக் கொடுக்கட்டும். ராக்ஷர்களாலும், பிசாசங்களாலும், குரூர நடத்தை உள்ளவர்களாலும், மாம்சத்தைப் புசிக்கும் ஜந்துக்களாலும் உனக்கு பயமுண்டாக வேண்டாம். வானரங்கள், தேள்கள், காட்டு ஈக்கள், கொசுக்கள், ஊரும் ஜந்துக்கள், புழுக்கள் காட்டில் உனக்குக் கெடுதி செய்யாமல் இருக்கட்டும். பெரிய யானைகள், சிம்மங்கள், புலிகள், கரடிகள், பன்றிகள், எருமைகள், பயங்கரமான காட்டுமாடுகள் இவை உனக்குத் தீங்கு செய்ய வேண்டாம். நரமாமிசத்தை தின்னும் மற்ற பிராணிகளும் நான் செய்யும் பூஜையால் திருப்தி அடைந்து உனக்குக் கெடுது செய்ய்யாமலிருக்கட்டும். நீ போகும் வழிகளில் உனக்கு க்ஷேமமுண்டாகட்டும். உன் பராக்கிரமம் வீணாகாமல் நீ உத்தேசித்த பிரயோஜனத்தை அடைவாய். நீ விரும்பும் சகல பொருள்களும் உனக்கு வனத்தில் கிடைக்கட்டும். பூமியிலும் ஆகாசத்திலும் உனக்கு உனக்கு விரோதிகளாக இருக்கும் தேவதைகளும் உனக்கு க்ஷேமத்தை உண்டாக்கட்டும். பிருஹஸ்பதி, சோமன், சுரியன், குபேரன், யமன், அக்னி,வாயு, ஹோமப்புகை, ரிஷிகளிடத்திலிருந்து நீ அப்ஸியத்த மந்திரங்கள் இவையெல்லாம் வனத்தில் நீ ஸ்*நானம் செய்யும் காலத்தில் உன்னைக் காப்பாற்றட்டும். சகல லோகத்திற்கும் பிரம்மாவும், சகல பிராணிகளையும் போஷிக்கும் நாராயணனும், மற்ற ரிஷிகளும் வனத்தி உன்னை ரக்ஷிக்கட்டும்," என்று சொன்னபின் மாலைகளாலும் கந்தங்களாலும், அவர்களுக்குத் தகுந்த ஸ்தோத்திரங்களாலும் தேவதைகளைப் பூஜித்தாள்.

பிறகு மஹாத்மாவான ஒரு பிராம்ணனால் அகியை மூட்டி ஹோமத்திற்காக நெய், சமித்துகள், வெள்ளைக் கடுகு, வெள்ளை மாலைகள் முதலியவைகளை சம்பாதித்து, ராமனுக்கு க்ஷேமம் உண்டாவதற்காக அதில் விதிப்படி ஹோமம் செய்தாள். உபாத்தியாயரும் ராமனுக்கு சகல உபத்திரவங்களும் நீங்கி ஆரோக்கியம் உண்டாக வேண்டுமென்று ஹோமம் செய்து, மிகுந்த ஹவிஸால் ஹோமகுண்டத்திற்கு வெளியில் லோகபாலர் முதலியவைகளுக்கு பலி வைத்தார். பிராம்மணர்களுக்குத் தேன், நெய், தயிர், அக்ஷதை முதலியவைகளைக் கொடுத்து, ராமனுக்கு வனத்தில் க்ஷேம உண்டாகும்படி ஸ்வஸ்தி வாசனம் செய்வித்தாள். பிறகு உபாத்தியாயருக்கு வேண்டியவரையில் தக்ஷிணையைக் கொடுத்துக் கௌசல்யை, "குழந்தாய், தேவந்திரன் விருத்ராஸூரனைக் கொன்று சகல தேவதைகளாலும் வணங்கப்பட்ட பொழுது, அவனுக்கு உண்டான க்ஷேமம் உனக்கும் உண்டாகட்டும். கருடன் அமிருதத்தைக் கொண்டு வரப் புறப்பட்ட பொழுது அவருடைய தாயான வினதை அவருக்கு எந்த க்ஷேமத்தைப் பிரார்தித்தாளோ அது உனக்கு உண்டாகட்டும். அமிருதத்திற்காக சமுத்திரத்தைக் கடையும்பொழுது தைத்யர்களை நாசம் செய்யும் பொருட்டு இந்திரனுக்கு அதிதி எந்த க்ஷேமத்தை அனுக்ரஹித்தாளோ அது உனக்கும் உண்டாகட்டும். அளவற்ற தேஜஸூள்ள மஹாவிஷ்ணு லோகங்களை மூன்றடியால் அளக்கப் போகையில் அவருக்கு நேர்ந்த க்ஷேமம் உனக்கும் உண்டாகட்டும். ருதுக்களும் சமுத்திரங்களும் உனக்குப் பரம மங்களத்தைச் செய்யட்டும்", என்று அவருடைய தலையில் அக்ஷதைகளைப் போட்டு, நேர்த்தியான கந்தத்தை அவருடைய தேகத்தில் பூசி, பிரசித்தமான வீரியத்துடன் கூடின விசல்யகரணி என்ற மூலிகையை ரக்ஷையாகக் கையிற்கட்டி, அதற்குத் தகுந்த மந்திரங்களை ஜபித்தாள்.

மனத்தி மிகுந்த துக்கமிருந்தாலும் சந்தோஷித்தவளைப் போல் காட்டிக் கொண்டு, ராமனைத் தன் அருகில் அழைத்து உச்சி முகர்ந்து ஆலிங்கனம் செய்து தழதழத்த வார்த்தைகளால், "நீ உத்தேசித்த காரியத்தை நிறைவேற்ற சௌக்கியமாகப் போய் வா. உன் எண்ணங்கள் யாவற்றையும் பூர்த்தி செய்து நோயில்லாமல் மறுபடியும் அயோத்யைக்கு வந்து நீ நமது முன்னோர்கள் அனுஷ்டித்த க்ஷத்திரிய தர்மத்தைக் கைக்கொண்டு நீ சுகமாய் இருப்பதைப் பார்ப்பேன். காட்டில் என் மகனுக்கு என்ன நேருமோ என்ற கவலை தீர்ந்து, உன்னை மறுபடியும் பார்த்த சந்தோஷத்தால் முகம் மலர்ந்தவளாக, உதயமான பூர்ண சந்திரனைக் காண்பது போல் உன்னை மறுபடியும் காண்பேன். தந்தையின் வார்த்தையை நிறைவேற்றி, காட்டிலிருந்து வந்து, சிம்மாசனத்தில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதையும் பார்ப்பேன். வனவாசம் செய்து திரும்பி வந்து உன் பதவிக்குத் தகுந்த அலங்காரங்களுடன் எனக்கும் சீதைக்கும் சகல மனோரதங்களையும் பூர்த்தி செய். என்னால் பூஜிக்கப்பட்ட தேவதைகளும் சிவன் முதலியவர்களும், மஹரிஷிகளும் பூதங்களும் அஸூரர்களும் உரகர்களும் திக்குகளும் நீ வனத்திற்குப் போகும்பொழுது உனக்கு சகல மங்களங்களையும் கொடுக்கட்டும்," என்று கண்களில் நீர் ததும்ப விதிப்பிரகாரம் ஆசிர்வாதம் செய்து முடித்து, ராமனுக்கு ரக்ஷையாக அவரைப் பிரதிக்ஷணம் செய்து, மிகுந்த பிரீதியுடன் அடிக்கடி ஆலிங்கனம் செய்து கொண்டாள்.

ராமன் ஸ்வபாவத்திலேயே மஹாதேஜஸ்வி. கௌஸல்யையின் ஆசிர்வாதத்தாலும் ரக்ஷையினாலும் அவருடைய தேஜஸ் விருத்தியாயிற்று. பிறகு எந்த ஆபத்திலும் தர்மம் தவறாமல் நடந்து கொண்டதனால் மஹா கீர்த்தியை அடைந்த ராமன், தாயின் பாதங்களில் அடிக்கடி நமஸ்கரித்து, சீதைக்கு அந்த சமாசாரத்தைத் தெரிவிக்கத் தன் அந்தப் புரத்தை நோக்கி வந்தார்.

ததா து தேவ்யா ஸ க்ருத ப்ரதக்ஷிணோ
நீபீட்ய மாதுச்சரணௌ புந: புந: !
ஜகாம ஸீதாநிலயம் மஹாயஸா
ஸ ராகவ: ப்ரஜ்வலித: ஸ்வயா ஸ்ரியா !!




ஸர்க்கம் 25 நிறைவு பெற்றது.

ஸ்ரீமத் ராமயண பாராயணம் முடிந்த பிறகு, மங்கள சுலோகங்களை படித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.


(((((((((ஸ்ரீ ராம ராம ராம)))))))))

Friday, April 29, 2011

கௌசல்யை சம்மதித்தது ஸர்க்கம் 24

ஸர்க்கம் 24
கௌசல்யை சம்மதித்தது

தம் ஸ்மீக்ஷ்ய த்வவஹிதம் பிதுர் நிர்தேச பாலனே !
கௌஸல்யா பாஷ்பஸம்ருத்தா வசோ தர்மிஷ்ட மபரவீத் !!


"ராமன் தர்மத்திலிருந்து விலகமாட்டான். அவனுடைய தந்தையின் வார்த்தைப்படி நடப்பான் என்பதில் சந்தேகமில்லை," என்று கௌசல்யை நிச்சயமகத் தெரிந்து கொண்டு, அந்த சமயத்தில் கண்ணீர் விடுவது அபசகுனம் என்றெண்ணி அடக்கிக் கொண்டு, "எனக்கும் தசரதருக்கும் அருமைக் குழுந்தையாகப் பிறந்த நீ, இதுவரையில் துக்கத்தையே அறியாதவன்.காட்டிற்கு போய் அங்கே உதிர்ந்து கிடக்கும் நெல்லுகளை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கித் தின்று எப்படிப் பிழைப்பாய்?. உன் வேலைக்காரர்களும் பரிசாரர்களும் நேர்த்தியான அன்னத்தைப் புசித்து சுகமாக இருக்கிறார்களே. அவர்களுக்கு தலைவனான நீ, காட்டில் பழங்களையும் கிழங்குகளையும் தின்று எப்படிப் பிழைப்பாய்?. "ராமன் தசரதனுக்கு மூத்த புதல்வன். அவனிடத்தில் அவருக்கு எல்லையற்ற அன்பு. உத்தம குணங்கள் யாவும் பொருந்தியவன். அப்படியும் அவனை அவர் ராஜ்யத்திலிருந்து துரத்திவிட்டார்",என்று ஒருவன் கேட்டால் அதை அவன் நம்புவனா? அப்படியே நம்பினாலும், ராமனுக்கே ஆபத்து நேரும் பொழுது நமது கதி என்ன ஆகுமோ என்று திகிலடைய மாட்டானா? எல்லாப் பிராணிகளுக்கும் ஆனந்த்தத்தை உண்டுபண்ணும் நீயே காட்டிற்குப் போகும்படி நேர்ந்ததை நினைத்தால், எல்லோருக்கும் சுக துக்கங்களைக் கொடுக்கும் சக்தி தெய்வமே. அதை விட மேலானது ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது. உன்னை விட்டுப் பிரிவதால் உண்டாகும் சோகமென்ற நெருப்பு, கோடை காலத்தில் வனத்திலிருக்கும் புல் பூண்டுகளைக் காட்டுத் தீ எரிப்பது போல, என்னை எரிக்கிறது. அதற்கு என் தேகமே இருப்பிடம். உன்னைப் பார்க்காமல் இருப்பதென்ற காற்றால் அது அது வளர்க்கிறது. உன்னை நினைத்து பிரலாபித்ததால் உண்டாகும் துக்கமே அதைப் போஷிக்கும் ஸமித்துகள். ஆறாகப் பெருகும் கண்ணீரே அதில் ஹோமம் செய்யப்படும் ஆஹூதிகள். உன்னைப் பற்றி கவலையால் உஷ்ணமே இதிலிருந்து கிளம்பும் புகை. இவைகளைச் சேர்த்து வைக்கும் புருஷப் பிரயத்தினமே என் பெரு மூச்சுகள். அதை அணைக்கும் தண்ணீரைப் போன்றவனே நீ. அந்த தண்ணீரில்லாமல் இந்த பாழும் நெருப்பு வர வர வளர்ந்து என்னை நாசம் செய்யப் போகிறது. தன் கன்றையும் பசு பின் தொடர்வது ஆச்சரியமா? நீ எங்கே போகிறாயோ அங்கே நானும் வருவேன்", என்றாள்.


ராமன்,"அம்மா! தாங்கள் ஒன்றை யோசிக்கவேண்டும். நானும் காட்டிற்குஒ போய், தாங்களும் என்னுடன் வந்து, கைகேயியால் வஞ்சிக்கப்பட்ட என் தந்தையை கை விட்டால் அவர் பிழைக்க மாட்டார் என்பது நிச்சயம். சாதாரணமான பெண்களுக்கே பர்த்தாவைக் கை விடுவது வெகுக் குரூரமான செய்கை. தாங்களோ அதை மனதால் நினைப்பது பிசகு. என் தந்தையான சக்கரவர்த்தி உயிரோடுடிருக்கும் வரையில் தாங்கள் அவருக்கு பணிவிடை செய்யவேண்டும். இதுவே நமது முன்னோர்களின் நித்தியமான தர்மம்", என்றார்.


கௌசல்யை மஹா தர்ம சிந்தையுள்ளவள். ஆகையால் ராமனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அப்படியே செய்வதால் ஒப்புக் கொண்டாள். பிறகு அவர் அவளுடைய மனத்தில் குடி கொண்ட துக்கத்தை நீக்கி, புத்தியை ஸ்திரப் படுத்துவதற்காக "தாங்களும் நானும் மஹாராஜாவின் ஆணைக்குக் கீழ்படிய வேண்டியதால்லவா? அவர் நம்மை ஆளும் அரசன் . நம்மைக் காக்கும் பிரபு. நமக்கு தர்மத்தை உபதேசிக்கும் குரு. குணங்களால் எல்லோரைக் காட்டிலும் மேலானவர். எல்லோருக்கும் அதிபதி. பதினான்கு வருஷங்களை ஒரு கணத்தைப் போல காட்டில் விளையாட்டாகக் கழித்துவிட்டு, மறுபடியும் தங்களுடைய பாதங்களில் பணிவிடை செய்வேன்," என்றார்.


கௌசல்யை ராமனைக் காட்டிற்கு அனுப்புவதற்கும் தான் அயோத்யையில் இருப்பதற்கும் சம்மதித்தாள். ஆனால் அவரிடத்தில் தான் வைத்திருக்கும் அன்பையும் தன் சக்களத்திகளின் துஷ்ட ஸ்பாவத்தையும் நினைத்து நினைத்துக் கண்ணீர் பெருக, "ராமா! இந்த துஷ்ட ஸ்த்ரீகளின் நடுவில் நான் இருக்கவே மாட்டேன். காட்டிலிருக்கும் மிருகங்களைப் போல் உன்னுடன் ஆனந்தமாகக் காலம் கழிப்பேன். என்னால் உனக்குக் கொஞ்சம் கூடக் கஷ்டம் நேராது. உன் தந்தையின் உத்தரவுப்படி காட்டிற்குப் போகவேண்டுமென்று உனக்கு இஷ்டமிருந்தால் என்னையும் கூட்டிக் கொண்டு போ," என்றாள்.


பிறருக்கு ஏதாவது துக்கம் நேர்ந்தால் ராமனுடைய மனமும் துக்கத்தால் மிகவும் தவிக்கும். ஆனால் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதென்ற தர்மத்திற்கு எங்கே குறைவு வருமோ என்று பயந்து, கௌசல்யையின் துக்கத்தைப் பார்த்து தானும் துக்கப்படாமல், மனோதைரியத்தால் தன் துயரத்தை அடக்கிக் கொண்டார். அப்பொழுது தன் தாய் தான் வனத்திற்குப் போக சம்மதித்தவுடன் அவளுடைய துக்கத்தைச் சற்று ஆற்றுவதற்காகத் தன் துக்கத்தை வெளியிட்டு அழுது கொண்டு, "பெண்கள் பிழைத்திருக்கும் வரையில் கணவனே அவர்களுக்குதி தெய்வம். அவரே பிரபு. பூமண்டாலதியான அவர் நம்மை ரக்ஷிக்கும் பொழுது நாம் அனாதைகளல்ல. மேலும் சக்களத்திகள் தங்களுக்குக் கொஞ்சமாவது கெடுதி செய்ய நியாயமில்லை. எனக்குப் பதிலாக இந்த ராஜ்யத்தை ஆளப்போகிற பரதன் தர்மாத்மா. தர்மத்தை அனுஷ்டிப்பதிலேயே பிரியமுள்ளவன். எல்லோரிடத்திலும் பிரியமாகப் பேசுகிறவன். அப்படியிருக்க, தங்களிடத்தில் விசேஷ பக்தியுடன் பணிவு செய்வான். நான் காட்டிற்கு போன பிறகு மஹாராஜா என்னைவிட்டுப் பிரிந்த துக்கத்தால் கொஞ்சம்கூட வருத்தமடையாமல் இருக்கும்படி தாங்கள் வெகு ஜாக்கிரதையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவரோ வயது முதிர்ந்தவர். இந்தக் கொடிய சோகத்தால் அவர் இறந்து போகாதபடி எப்பொழுதும் வெகு ஜாக்கிரதையாகத் தாங்கள் நடந்து கொள்ள வேண்டும். பெண்கன் விரதங்களையும் உபவாசங்களையும் அனுஷ்டித்து மஹா புண்ணியங்களை சம்பாதித்தாலும், கணவனுக்கு பணிவிடை செய்யாவிட்டால், பாவிகளின் கதியை அடைவார்கள். தேவ பூஜைகளைச் செய்யாவிட்டாலும், பெரியோர்களை நஸ்கரிக்காமல் போனாலும், விரதங்கலை அனுஷ்டிக்காமல் இருந்தாலும் கணவருக்கு பணிவிடையைச் செய்து வந்தால், அவர்களுக்கு உத்தம லோகங்கள் கிடைக்கும். தங்களுடைய கணவனுக்கு பணிவிடை செய்வதே பெண்களுக்கு மேலான தர்மமென்று சுருதிகளும், ஸ்மிருதிகளும் உபதேசிப்பதற்கு இதுவே காரணம். முன்னோர்களின் ஆசாரமும் இதுவே.


"புத்தியைச் செலுத்த வேறு விஷயமில்லாமல் தாங்கள் சும்மா இருந்தால் துக்கம் மேலிடும். ஆகையால் பிராம்மண சிரேஷ்டர்களை முன்னிட்டு நான் நலமாய்ப் போய் வருவதற்காகச் சாந்தி ஹோமம், புஷ்டி ஹோமம் இன்னும் மற்ற மங்கள காரியங்களைச் செய்யுங்கள். சந்தனம், தாம்பூலம், புஷ்பம் முதலியவைகளால் தேவதைகளையும் பிராம்மணர்களையும் ஆராதியுங்கள். ஸ்னானம்,ஜபம்,உபவாஸம் முதலிய நியமங்களை அனுஷ்டித்துக் கொண்டு சுத்தமான அன்னத்தைப் புசித்து, தங்களுடைய நாதனுக்குப் பணிவிடை செய்வதில் கவனத்தைச் செலுத்துங்கள். நான் திரும்னி வருங்காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருங்கள். இப்படிச் செய்தால் தர்மாத்மாக்களில் சிரேஷ்டரான என் தந்தை பிழைத்திருப்பதையும், நான் இங்கே திரும்பி வருவதையும் பார்க்கும் பாக்கியத்தை அடைவீர்கள்", என்றார்.


புத்திரனை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற துக்கத்தால் கண்ணீர் பெருகக் கௌசல்யை, "காட்டிற்குப் போகவேண்டுமென்ற புத்தி உனக்கு உறுதியாக உண்டாயிருக்கிறது. என்னால் அதை மாற்ற முடியவில்லை. காலபலத்தை யாரால் ஜெயிக்க முடியும்? குழந்தாய், சாவதானமாகப் போய் வா. உனக்கு எப்பொழுதும் க்ஷேமமுண்டாகட்டும். ஜயமுண்டாகட்டும். நீ திரும்பி வந்தாலென்றி என் சோகம் தீராது. உன் தந்தையின் வார்த்தையை நிறைவேற்றி, உன் இஷ்டத்தையும் பூர்த்தி செய்து மஹா கீர்த்தியடைந்து நீ திரும்பி வந்த பிறகே நிகரற்ற சுகத்தை அனுபவிப்பேன். என் வார்த்தையையும் தள்ளிவிட்டுக் காட்டிற்குப் போகவேண்டுமென்று நீ ஒரே பிடிவாதமாக இருக்கும்படி உன்னைத் தூண்டிவிடும் விதியின் பலத்தை யாரால் அறிய முடியும்? மஹாபராக்கிரமசாலியே, க்ஷேமமாகப் போய் வா. சீக்கிரத்தில் திரும்பி வந்து மதுரமான வார்த்தைகளால் என் மனத்தை சந்தோஷப்படுத்து. ஒரு நிமிடம் கூட உன்னை விட்டுப் பிரிய என் மனம் சஹிக்கவில்லையே? நீ காட்டிலிருந்து மான் தோல்,மரவுரி ஜடைகளுடன் திரும்பி வரும் காலம் இந்த கணமாகவே இருக்கக் கூடாதா?" என்று சொல்லித்துக்கித்தாள். பிறகு ராமன் காட்டிற்குப் போகத் தீர்மானித்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டு, மிக்கப் பிரீதியுடன் அவருடைய க்ஷேமத்தை உத்தேசித்துச் செய்ய வேண்டிய மங்கள காரியங்களைச் செய்ய ஆரம்பித்தாள்.


ததா ஹி ராமம் வனனாஸ நிச்சிதம்
ஸமீக்ஷ்ய தேவீ பரமேண சேதஸா !
உவாச ராமம் ஸூப லக்ஷணம் வசோ
பபூவ ச ஸ்வஸ்த்யயநாபிகாங்க்ஷிணீ !!

ஸர்க்கம் 24  நிறைவு பெற்றது...

ஸ்ரீ ராம ராம ராம