Saturday, April 30, 2011

ஸர்க்கம் 25 கௌசல்யை ராமனுக்கு மங்கள ஆசீர்வாதம் செய்தது

ஸர்க்கம் 25
கௌசல்யை ராமனுக்கு மங்கள ஆசீர்வாதம் செய்தது

ஸாபநீய தமாயஸம் உபஸ்ப்ருச்ய ஜலம் ஸூசி: !
சகார மாதா ராமஸ்ய மங்களாநி மநஸ்விநீ: !!

தன் துக்கத்தை அடக்கிக்கொண்டு, தான் அதுவரையில் அழுது கொண்டிருந்ததால் உண்டாண அசுத்தத்தைப் போக்க ஆசமனம் செய்து சுத்தமாக இருந்து கொண்டு கௌசல்யை, "ரகுகுல திலக, காட்டிற்குப் போகாமல் உன்னைத் தடுக்க முடியவில்லையே. ஆகையால் போய் வா. பதிநான்கு வருஷங்களுக்குப் பிறகு திரும்பி வந்து முன்னோர்களின் ஆசாரப்படி ராஜ்யாபிஷேகம் செய்து கொள். எந்த தர்மத்தை நீ ப்ரீதியுடன் பூர்ணமாக அனுஷ்டிக்கிறாயோ, அந்த தர்மமே உன்னைக் காப்பாற்றட்டும். நாற்சந்திகளிலும் தேவாலயங்களிலும் நீ நமஸ்கரிக்கும் தேவதைகளும் மஹரிஷிகளும் காட்டில் உன்னை ரக்ஷிக்கட்டும். விசுவாமித்திர மஹரிஷியால் உனக்கு உபதேசிக்கப்பட்ட அஸ்திரங்கள் யாவும் உத்தம குணங்களுள்ள உன்னை எப்பொழுதும் காப்பாற்றட்டும். நீ பெற்றோர்களுக்குச் செய்யும் சிச்ரூஷையும் நீ பேசும் சத்தியமும் உன்னைக் காப்பாற்றட்டும். உனக்குத் தீர்க்காயுசைக் கொடுக்கட்டும். சமித்துகள், தர்பங்கள், அக்னி குண்டங்கள், தேவ பூஜாஸ்தானங்கள், குன்றுகள், மரங்கள், செடிகள், குட்டையான மரங்கள், மடுக்கள், பக்ஷிகள், சர்ப்பங்கள்,சிம்மங்கள் உன்னைக் காப்பாற்றட்டும். சாத்யர்கள், விச்வேதேவர்கள், மருத்துவர்கள், மஹரிஷிகள், தாதாவிதாதா பூஷா பகன் அர்யமா முதலிய பன்னிரண்டு ஆதித்யர்கள், இந்திரன், யமன், வருணன், குபேரன் முதலிய லோகபாலர்கள், பக்ஷங்கள், மாஸங்கள், ருதுக்கள், வருஷங்கள், பகல், ராத்திரி, முகூர்த்தங்கள் முதலியவைகளின் அதிஷ்டான தேவதைகளும் உனக்கு எப்பொழும் மனகளைச் செய்யட்டும். தியானமும் யோகமும் வேத சாஸ்த்திரங்களில் சொல்லப்படும் தர்மமும் உன்னை நான்கு புறங்களிலும் காப்பாற்றட்டும். சனத்குமாரரும் சோமனும் பிருஹஸ்பதியும் சப்த ரிஷிகளும் நாரதரும் உன்னை எப்பொழுதும் காப்பாற்றட்டும். மஹாப்பிரசித்தியுள்ள திக்பாலர்களும் நான் செய்யும் ஸ்தோத்திரத்தால் சந்தோஷித்து உன்னைக் காப்பாற்றட்டும். கடற்கரையில் இருக்கும் மலைகளும் சமுத்திரமும் குபேரனும் வருணனும் சொர்க்கமும் ஆகசமும் பூமியும் நதிகளும் நக்ஷத்திரங்களும் கிரஹங்களும் கிரஹதேவதைகளும் ராத்திரி பகல்களுக்கு அபிமானி தேவதைகளும் இரண்டு சந்தியா தேவதைகளும் உன்னைக் காப்பாற்றட்டும். ருதுக்கள், மாதங்கள், வருஷங்கள் கலைகள், காஷ்டைகளின் அதிஷ்டான தேவதைகள் உனக்கு ஷேமத்தைக் கொடுக்கட்டும். காட்டில் நீ தபஸ்வீயாக வசிக்கும் பொழுது ஆதித்யர்களும் சாத்யர்களும் உனக்குச் சுகத்தைக் கொடுக்கட்டும். ராக்ஷர்களாலும், பிசாசங்களாலும், குரூர நடத்தை உள்ளவர்களாலும், மாம்சத்தைப் புசிக்கும் ஜந்துக்களாலும் உனக்கு பயமுண்டாக வேண்டாம். வானரங்கள், தேள்கள், காட்டு ஈக்கள், கொசுக்கள், ஊரும் ஜந்துக்கள், புழுக்கள் காட்டில் உனக்குக் கெடுதி செய்யாமல் இருக்கட்டும். பெரிய யானைகள், சிம்மங்கள், புலிகள், கரடிகள், பன்றிகள், எருமைகள், பயங்கரமான காட்டுமாடுகள் இவை உனக்குத் தீங்கு செய்ய வேண்டாம். நரமாமிசத்தை தின்னும் மற்ற பிராணிகளும் நான் செய்யும் பூஜையால் திருப்தி அடைந்து உனக்குக் கெடுது செய்ய்யாமலிருக்கட்டும். நீ போகும் வழிகளில் உனக்கு க்ஷேமமுண்டாகட்டும். உன் பராக்கிரமம் வீணாகாமல் நீ உத்தேசித்த பிரயோஜனத்தை அடைவாய். நீ விரும்பும் சகல பொருள்களும் உனக்கு வனத்தில் கிடைக்கட்டும். பூமியிலும் ஆகாசத்திலும் உனக்கு உனக்கு விரோதிகளாக இருக்கும் தேவதைகளும் உனக்கு க்ஷேமத்தை உண்டாக்கட்டும். பிருஹஸ்பதி, சோமன், சுரியன், குபேரன், யமன், அக்னி,வாயு, ஹோமப்புகை, ரிஷிகளிடத்திலிருந்து நீ அப்ஸியத்த மந்திரங்கள் இவையெல்லாம் வனத்தில் நீ ஸ்*நானம் செய்யும் காலத்தில் உன்னைக் காப்பாற்றட்டும். சகல லோகத்திற்கும் பிரம்மாவும், சகல பிராணிகளையும் போஷிக்கும் நாராயணனும், மற்ற ரிஷிகளும் வனத்தி உன்னை ரக்ஷிக்கட்டும்," என்று சொன்னபின் மாலைகளாலும் கந்தங்களாலும், அவர்களுக்குத் தகுந்த ஸ்தோத்திரங்களாலும் தேவதைகளைப் பூஜித்தாள்.

பிறகு மஹாத்மாவான ஒரு பிராம்ணனால் அகியை மூட்டி ஹோமத்திற்காக நெய், சமித்துகள், வெள்ளைக் கடுகு, வெள்ளை மாலைகள் முதலியவைகளை சம்பாதித்து, ராமனுக்கு க்ஷேமம் உண்டாவதற்காக அதில் விதிப்படி ஹோமம் செய்தாள். உபாத்தியாயரும் ராமனுக்கு சகல உபத்திரவங்களும் நீங்கி ஆரோக்கியம் உண்டாக வேண்டுமென்று ஹோமம் செய்து, மிகுந்த ஹவிஸால் ஹோமகுண்டத்திற்கு வெளியில் லோகபாலர் முதலியவைகளுக்கு பலி வைத்தார். பிராம்மணர்களுக்குத் தேன், நெய், தயிர், அக்ஷதை முதலியவைகளைக் கொடுத்து, ராமனுக்கு வனத்தில் க்ஷேம உண்டாகும்படி ஸ்வஸ்தி வாசனம் செய்வித்தாள். பிறகு உபாத்தியாயருக்கு வேண்டியவரையில் தக்ஷிணையைக் கொடுத்துக் கௌசல்யை, "குழந்தாய், தேவந்திரன் விருத்ராஸூரனைக் கொன்று சகல தேவதைகளாலும் வணங்கப்பட்ட பொழுது, அவனுக்கு உண்டான க்ஷேமம் உனக்கும் உண்டாகட்டும். கருடன் அமிருதத்தைக் கொண்டு வரப் புறப்பட்ட பொழுது அவருடைய தாயான வினதை அவருக்கு எந்த க்ஷேமத்தைப் பிரார்தித்தாளோ அது உனக்கு உண்டாகட்டும். அமிருதத்திற்காக சமுத்திரத்தைக் கடையும்பொழுது தைத்யர்களை நாசம் செய்யும் பொருட்டு இந்திரனுக்கு அதிதி எந்த க்ஷேமத்தை அனுக்ரஹித்தாளோ அது உனக்கும் உண்டாகட்டும். அளவற்ற தேஜஸூள்ள மஹாவிஷ்ணு லோகங்களை மூன்றடியால் அளக்கப் போகையில் அவருக்கு நேர்ந்த க்ஷேமம் உனக்கும் உண்டாகட்டும். ருதுக்களும் சமுத்திரங்களும் உனக்குப் பரம மங்களத்தைச் செய்யட்டும்", என்று அவருடைய தலையில் அக்ஷதைகளைப் போட்டு, நேர்த்தியான கந்தத்தை அவருடைய தேகத்தில் பூசி, பிரசித்தமான வீரியத்துடன் கூடின விசல்யகரணி என்ற மூலிகையை ரக்ஷையாகக் கையிற்கட்டி, அதற்குத் தகுந்த மந்திரங்களை ஜபித்தாள்.

மனத்தி மிகுந்த துக்கமிருந்தாலும் சந்தோஷித்தவளைப் போல் காட்டிக் கொண்டு, ராமனைத் தன் அருகில் அழைத்து உச்சி முகர்ந்து ஆலிங்கனம் செய்து தழதழத்த வார்த்தைகளால், "நீ உத்தேசித்த காரியத்தை நிறைவேற்ற சௌக்கியமாகப் போய் வா. உன் எண்ணங்கள் யாவற்றையும் பூர்த்தி செய்து நோயில்லாமல் மறுபடியும் அயோத்யைக்கு வந்து நீ நமது முன்னோர்கள் அனுஷ்டித்த க்ஷத்திரிய தர்மத்தைக் கைக்கொண்டு நீ சுகமாய் இருப்பதைப் பார்ப்பேன். காட்டில் என் மகனுக்கு என்ன நேருமோ என்ற கவலை தீர்ந்து, உன்னை மறுபடியும் பார்த்த சந்தோஷத்தால் முகம் மலர்ந்தவளாக, உதயமான பூர்ண சந்திரனைக் காண்பது போல் உன்னை மறுபடியும் காண்பேன். தந்தையின் வார்த்தையை நிறைவேற்றி, காட்டிலிருந்து வந்து, சிம்மாசனத்தில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதையும் பார்ப்பேன். வனவாசம் செய்து திரும்பி வந்து உன் பதவிக்குத் தகுந்த அலங்காரங்களுடன் எனக்கும் சீதைக்கும் சகல மனோரதங்களையும் பூர்த்தி செய். என்னால் பூஜிக்கப்பட்ட தேவதைகளும் சிவன் முதலியவர்களும், மஹரிஷிகளும் பூதங்களும் அஸூரர்களும் உரகர்களும் திக்குகளும் நீ வனத்திற்குப் போகும்பொழுது உனக்கு சகல மங்களங்களையும் கொடுக்கட்டும்," என்று கண்களில் நீர் ததும்ப விதிப்பிரகாரம் ஆசிர்வாதம் செய்து முடித்து, ராமனுக்கு ரக்ஷையாக அவரைப் பிரதிக்ஷணம் செய்து, மிகுந்த பிரீதியுடன் அடிக்கடி ஆலிங்கனம் செய்து கொண்டாள்.

ராமன் ஸ்வபாவத்திலேயே மஹாதேஜஸ்வி. கௌஸல்யையின் ஆசிர்வாதத்தாலும் ரக்ஷையினாலும் அவருடைய தேஜஸ் விருத்தியாயிற்று. பிறகு எந்த ஆபத்திலும் தர்மம் தவறாமல் நடந்து கொண்டதனால் மஹா கீர்த்தியை அடைந்த ராமன், தாயின் பாதங்களில் அடிக்கடி நமஸ்கரித்து, சீதைக்கு அந்த சமாசாரத்தைத் தெரிவிக்கத் தன் அந்தப் புரத்தை நோக்கி வந்தார்.

ததா து தேவ்யா ஸ க்ருத ப்ரதக்ஷிணோ
நீபீட்ய மாதுச்சரணௌ புந: புந: !
ஜகாம ஸீதாநிலயம் மஹாயஸா
ஸ ராகவ: ப்ரஜ்வலித: ஸ்வயா ஸ்ரியா !!




ஸர்க்கம் 25 நிறைவு பெற்றது.

ஸ்ரீமத் ராமயண பாராயணம் முடிந்த பிறகு, மங்கள சுலோகங்களை படித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.


(((((((((ஸ்ரீ ராம ராம ராம)))))))))