Saturday, June 25, 2011

6.பேய் பிசாசு பில்லி சூனியம் நீங்க.


ஸ்ரீ ராமசந்த்ராய நம:

6.பேய் பிசாசு பில்லி சூனியம் நீங்க.



==================================================
ஸ்ரீமத் வால்மீகி  ராமாயணம்
சுந்தர காண்டம்: சர்க்கம் 3
==================================================


உமா ஸம்ஹிதா

பூதவேதாள பீட சேத் லங்காவிஜய சர்க்கம் !
ஆதௌகுடாந்தம் நைவேத்யம் க்ருத்வா ஸாயம் படேத்யத: !!
விமார்க ஸர்வத்ரேதி பத்யஸ்யாந்தே நீராஜநார்ப்பணம் !
க்ருத்வாத ப்ரணமேத் பூமௌ ஆஞ்சனேயம் ஹ்ருதாஸ்மரந் !!

வீட்டில் யாருக்காவது பேய் பிசாசு பில்லி சூனியம் முதலியவைகளால் பீடை உண்டாகில், "ஆஞ்சனேயர் லங்கா விஜயம்" செய்த சுந்தர காண்டம் 3 வது சர்க்கத்தை மாலையில் பாராயணம் செய்யவேண்டும். "விமார்க்க ஸர்வத்ர" என்று கடைசி சுலோகம் முடிந்ததும் கற்பூர ஹாரத்தி செய்து, ஆஞ்சனேயரைத் தியானம் செய்து நமஸ்கரிக்கவேண்டும்.

நிவேதனம்: ஆரம்பத்தில் மாத்திரம் சர்க்கரைப் பொங்கல்.

ஸங்கல்பம்
ஸ்ரீ சீதாலக்ஷ்மண பரதசத்ருக்ந ஹனுமத் ஸமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரஸாத்ந பூம்யந்தரிஷ
சர பூதவேதாளதிக்ருத பீடாநிவ்ருத்யர்த்தம்
'லங்காதேவதா விஜயாத்மக ஸ்ரீமத் ராமாயண'
கட்ட பாராயணம் அஹம் கரிஷ்யே1

ஸர்க்கம் 3

மாருதி லங்காதேவதையை ஜெயித்தது

ஸ லம்பசிகரே லம்பே லம்பே தோயத ஸந்ன்நிபே !
ஸத்வமாஸ்தாய மேதாவீ ஹனுமாந் மாருதாத்மஜ: !!

நீருண்ட மேகம் ஆகச வீதியில் தொங்குவது போலத் தோன்றும் லம்பமென்ற பெயர் பெற்ற சூவேல மலையின் மேலிருந்து மஹா புத்திமானான ஹனுமான், லங்கைடில் பிரவேசித்துத் தேடுவதற்கு வேண்டிய திறமையை அடைந்து, ராத்திரி காலத்தில் அந்த நகரத்தில் புகுந்தார். அது அழகிய பூஞ்சோலைகள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து, சரத்காலத்து மேகங்களையொத்த வீடுகளால் விளங்கிற்று.மக்களுடைய கூச்சல்கள் கடல் கொந்தளிப்பது போன்றிருந்தது. கடற்காற்று சுகமாய் வீசிக் கொண்டிருந்தது. குபேரனுடைய அளகாபுரியைப் போல நன்றாக அமைக்கப்பெற்ற சதுரங்க பலத்தை உடையது. அழகிய தோரண வாசல்களில் மதயானைகள் கட்டப்பட்டிருந்தன. வெண்மையான தோரண வாசல்கள் அமைக்கப்பட்டிருந்தன.ஸர்ப்பங்களுடைய ராஜதானியான போகவதியைப்போல் நன்றாய்ப் போஷிக்கப்பட்ட சதுர்வதியைபோல் நன்றாக ரக்ஷிக்கப்பட்டது. உயர்ந்த வீடுகளின் உச்சியில் மின்னற் கொடிகள் கொண்ட மேகங்கள் இருந்தன. அவை நக்ஷத்திர மண்டலத்தை அளாவி இருந்தனவன்றோ? காற்று மிருதுவாயும் சுகமாகவும் வீசிக் கொண்டிருந்தது.இந்திரனுடைய அமராவதியோ என்று மலைக்கும்படி இருந்தது. பொன்னால் செய்த பெரிய மதில் சுவரால் சூழப்பட்டிருந்தது. கொடிகளிலும் த்வஜங்களிலும் கட்டபட்டிருந்த கிங்கிணிகள் மதுரமாய் சப்தித்துக் கொண்டிருந்தன. இவைகளைப் பார்த்து அடங்காத ஆச்சரியம் கொண்டு ஹனுமான் தங்கப் பிரகாரத்திற்கு அருகில் சென்றார். தங்கமயமான கதவுகளும்  வைடூரியங்களிழைத்த மேடைகளும், நவரத்தினங்களாலும் ஸ்படிகத்தாலும் முத்துக்களாலும் விசித்திரமாய் வேலை செய்யப்பட்ட தரைகளும் உருக்கி ஓடவிட்ட தங்கத்தால் அமைக்கப்பட்ட மத யானைகளும் வைடூரியப் படிக்கட்டுக்களுடனும் ஸ்படிகத்தினால் புழுதியற்று பிரகாசிக்கும் வெள்ளியால் செய்யப்பட்ட மேல் மாடங்களும் ஆகாசத்தையளாவும் அழகிய சபைகளும் கிரௌஞ்சம், மயில், ராஜ ஹம்சம் முதலிய பக்ஷிகளும், வாத்தியங்களும் பாட்டும் ஆபரணங்களும் இனிமையாக சப்திப்பதும் அமராவதியோ என்று பார்ப்பவர்கள் மயங்கும்படி ஆகாசத்தில் பறந்து போவதுபோல் இருப்பதுமான அந்த நகரம் ஆஞ்சனேயருக்கு மேலும் சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் விருத்தி செய்தது.
விரும்பக்கூடிய சகல ஐசுவரியத்தாலும் விளங்கும் அந்த ராக்ஷச ராஜதானியைப் பார்த்து, "என்ன ஆச்சரியம்! இந்த லங்கையை எந்த எதிரியாவது கண்ணெடுத்துப் பார்க்கக் கூடுமோ? எக்காலத்திலும் ஆயுதபாணிகளாக இதை ரக்ஷிக்கும் ராவண படைகள் சாதரணமா? குமுதன், அங்கதன், சூசேணன், மைந்தன்,த்விவிதன் இவர்களுக்கே இந்த நகரம் தெரிந்திருக்கும். ஆனால் சுக்ரீவனும், குசபவர்வனும், கேதுமாலனும், நானுமே இதில் பிரவேசிக்க முடியும்" என்று கவலை கொண்டார். பிறகு ராமனுடைய பராக்கிரமத்தையும் லட்சுமணனுடைய வீரியத்தையும் நினைத்து அளவற்ற சந்தோஷமடைந்தார். லங்கை என்ற ஸ்த்ரீக்கு ரத்தினங்கள் இழைத்த பிரகாரமே வஸ்த்திரம். யானை, குதிரை, பசுக்களிருக்கும் சாலைகளே செவிக்கு ஆபரணங்கள். மதில்களிலுள்ள ஆயுத சாலைகளே ஸ்தனங்கள். அந்த நகரத்தில் ரத்தின தீபங்களாலும்,ஜொலிக்கும் வீடுகளாலும் இருட்டென்பதே தெரியாது.
இப்படி அனேக அற்புதமான காட்சிகளைப் பார்த்துக் கொண்டு மாருதி செல்கையில், அந்த நகரத்தைக் காக்கும் தேவதை, ஹனுமான் அந்த நகரத்தில் பிரவேசிக்க முயலுவதைக் கவனித்து, விகாரமான ஸ்த்ரீ ரூபத்துடன் அவருக்கெதிரே தோன்றிக் கோரமான குரலுடன் "நீ யார்? காட்டில் வசிக்கும் குரங்கு இங்கே வந்த காரணமென்ன? உன் பிராணன் போவதற்கு முன் உண்மையைச் சொல், மூடா! குரூர ராக்ஷசர்கள் இடைவிடாமல் இதைக் காத்து வருகிறார்கள். ராவணேசுவரன் இதைத் தன் உயிரைப் போல் ரக்ஷிக்கிறான். நானே இந்த நகரத்தை காக்கும் தேவதை; நீ இதற்குள் சுலபமாகப் பிரவேசிக்கலாம் என்று வந்தாயோ?' என்று அதட்டினாள். அதற்கு மாருதி, "பெண்ணே! நீ கேட்டதற்கு நிஜமான மறுமொழி  சொல்கிறேன். ஆனால் நீ யார்? விகார ரூபத்துடன் இந்த நகரத்து வாசலில் நின்று கொண்டு என்னைத் தடுத்து ஏன் அதட்டுகிறாய்?" என்றார். லங்காதேவதை தான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் தன்னை எதிர்த்துக் கேட்ட ஹனுமானிடத்தில் கோபம் கொண்டு,"கேளடா குரங்கே! ராக்ஷஸ ராவணேசுவரனுடைய கட்டளைப்படி இந்த நகரத்தை ரக்ஷித்து வருகிறேன். என்னை ஒருவரும் எதிர்க்க முடியாது. என்னை அலட்சியம் செய்து நீ இந்த நகரத்தில் செல்ல முடியுமோ? இதோ உன் உயிரை வாங்குகிறேன் பார். நானே லங்காபுரி. எந்த திக்கிலும் இதைக் காத்து வருகிறேன்," என்றாள். அதைக்கேட்டு, ஹனுமான் அவளை ஜெயிப்பதற்கு வெண்டிய சக்தியை மேற்கொண்டு மஹாபர்வதத்தைப்போல் அசையாமல் நின்று விகாரமான பெண் உருவம் கொண்ட அந்த தேவதையை நோக்கி, "இந்த லங்காபுரியையும் இதிலுள்ள வீடுகளையும் அரண்மனைகளையும் கோட்டைகளையும் வனங்களையும் தோட்டங்களையும் சோலைகளயும் நன்றாகப் பார்க்க வேண்டுமென்று எனக்கு மிக்க ஆசை உண்டு. அப்படியே என் இஷ்டப்படி சகல ஆச்சரியங்களையும் பார்க்க வந்திருக்கிறேன்" என்று மறுமொழி சொன்னார்.உடனே லங்கா தேவதை, "மூடா! என்னை ஜெயித்தால் அல்லவா நீ இந்த பட்டணத்தில் புக முடியும்?" என்று கடுமையாக அதட்டினாள். அதற்கு ஹனுமான், "பெண்ணே! இருக்கட்டும். இந்த நகரத்தை நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிப் போக நிச்சயித்திருக்கிறேன்," என்று சாந்தமாக பதில் சொன்னார்.
உடனே அந்த நகர தேவதை பயங்கரமாய் கர்ஜித்து, ஆஞ்சனேயரை ஓங்கி அறைந்தாள். அந்த வானர வீரன் கோபம் கொண்டு, இடிபோல் சிரித்து, ஒரு பெண்ணை வலது கையால் அடிப்பது தனக்கு குறைவாகையால், இடது கை விரல்களை மடக்கி அவளைக் குத்தினார். அதே காரணத்தால் அவளிடத்தில் மிகவும் கோபிக்கவில்லை. அந்தக் குத்தைத் தாங்கமுடியாமல் அந்த ராக்ஷஸி தேகம் கலங்கி, விகாரமான முகத்தையும், கண்களையும் உடையவளாய்ப் பூமியில் விழுந்தாள். அதைப் பார்த்து ஹனுமான் அவள் பெண் என்பதை நினைத்து இரக்கம் கொண்டார். அப்பொழுது லங்கா தேவதை பயத்தால் நடுங்கி வார்த்தைகள் குளர கர்வமழிந்து, "வானர சிரேஷ்டா! கிருபை செய்யும். மகா  அனுபவா! என்னைக் காப்பாற்றும். தைரியம் பலம் முதலிய உத்த்ம குணங்களுடைய வீரர்கள் பெண்களைக் கொல்வதில்லை.நானே லங்காபுரி. உமது பராக்கிரமத்தால் இன்று ஜெயிக்கப்பட்டேன். வேறோரு விஷயம் சொல்லுகிறேன், கேளும். இது சத்தியம். முன் காலத்தில் பிரம்ம தேவர் என்னைப் பார்த்து, 'எந்தவேளையில் ஒரு வானரன் உன்னை பராக்கிரமத்தால் ஜெயிப்பானோ அப்பொழுது ராக்ஷஸ குலத்திற்குப் பெரிய பயம் நேரும்' என்று வரம் கொடுத்திருக்கிறார். இன்று உம்மைப் பார்த்தால் அந்த சமயம் வந்து விட்டதென்று தோன்றுகிறது. பிரம்மாவின் வார்த்தைக்கு இரண்டுண்டோ? துர் ஆத்மாவான ராவணனும், ஸமஸ்த ராக்ஷஸர்களும் சீதையின் பொருட்டு மடியும் காலம் நெருங்கி விட்டது. வானர உத்தம! ராவணனால் ரக்ஷிக்கப்பட்ட இந்த லங்கையில் உமது இஷ்டப்படிப் பிரவேசித்து, வேண்டிய காரியங்களைச் செய்யும். அனேக சாபங்களால் கொளுத்தப்பட்ட இந்த நகரில் பிரவேசியும். இந்த ராக்ஷஸ ராஜதானியில் உமது இஷ்டப்படி சகல இடங்களிலும் சீதையைத் தேடும்' என்றாள்.

ப்ரவிச்ய சாபோபஹதாம் ஹரீச்வர:
புரீம்ஷூபாம் ராக்ஷ்ஸ ராஜபாலிதாம்!
யத்ருச்சயா த்வம் ஜனகாத்மஜாம் ஸதீம்
விமார்க ஸர்வத்ர கதோ யதாஸூகம்!!
மங்கள சுலோகங்கள் கூறி பூஜையை நிறைவு செய்யவும்.

சுந்தர காண்டம் 3  வது சர்க்கம் முற்றிற்று


மங்கள சுலோகங்கள் கூறி நிறைவு செய்யவும்.
ஸ்ரீ ராம ராம ராம