Friday, April 29, 2011

கௌசல்யை சம்மதித்தது ஸர்க்கம் 24

ஸர்க்கம் 24
கௌசல்யை சம்மதித்தது

தம் ஸ்மீக்ஷ்ய த்வவஹிதம் பிதுர் நிர்தேச பாலனே !
கௌஸல்யா பாஷ்பஸம்ருத்தா வசோ தர்மிஷ்ட மபரவீத் !!


"ராமன் தர்மத்திலிருந்து விலகமாட்டான். அவனுடைய தந்தையின் வார்த்தைப்படி நடப்பான் என்பதில் சந்தேகமில்லை," என்று கௌசல்யை நிச்சயமகத் தெரிந்து கொண்டு, அந்த சமயத்தில் கண்ணீர் விடுவது அபசகுனம் என்றெண்ணி அடக்கிக் கொண்டு, "எனக்கும் தசரதருக்கும் அருமைக் குழுந்தையாகப் பிறந்த நீ, இதுவரையில் துக்கத்தையே அறியாதவன்.காட்டிற்கு போய் அங்கே உதிர்ந்து கிடக்கும் நெல்லுகளை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கித் தின்று எப்படிப் பிழைப்பாய்?. உன் வேலைக்காரர்களும் பரிசாரர்களும் நேர்த்தியான அன்னத்தைப் புசித்து சுகமாக இருக்கிறார்களே. அவர்களுக்கு தலைவனான நீ, காட்டில் பழங்களையும் கிழங்குகளையும் தின்று எப்படிப் பிழைப்பாய்?. "ராமன் தசரதனுக்கு மூத்த புதல்வன். அவனிடத்தில் அவருக்கு எல்லையற்ற அன்பு. உத்தம குணங்கள் யாவும் பொருந்தியவன். அப்படியும் அவனை அவர் ராஜ்யத்திலிருந்து துரத்திவிட்டார்",என்று ஒருவன் கேட்டால் அதை அவன் நம்புவனா? அப்படியே நம்பினாலும், ராமனுக்கே ஆபத்து நேரும் பொழுது நமது கதி என்ன ஆகுமோ என்று திகிலடைய மாட்டானா? எல்லாப் பிராணிகளுக்கும் ஆனந்த்தத்தை உண்டுபண்ணும் நீயே காட்டிற்குப் போகும்படி நேர்ந்ததை நினைத்தால், எல்லோருக்கும் சுக துக்கங்களைக் கொடுக்கும் சக்தி தெய்வமே. அதை விட மேலானது ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது. உன்னை விட்டுப் பிரிவதால் உண்டாகும் சோகமென்ற நெருப்பு, கோடை காலத்தில் வனத்திலிருக்கும் புல் பூண்டுகளைக் காட்டுத் தீ எரிப்பது போல, என்னை எரிக்கிறது. அதற்கு என் தேகமே இருப்பிடம். உன்னைப் பார்க்காமல் இருப்பதென்ற காற்றால் அது அது வளர்க்கிறது. உன்னை நினைத்து பிரலாபித்ததால் உண்டாகும் துக்கமே அதைப் போஷிக்கும் ஸமித்துகள். ஆறாகப் பெருகும் கண்ணீரே அதில் ஹோமம் செய்யப்படும் ஆஹூதிகள். உன்னைப் பற்றி கவலையால் உஷ்ணமே இதிலிருந்து கிளம்பும் புகை. இவைகளைச் சேர்த்து வைக்கும் புருஷப் பிரயத்தினமே என் பெரு மூச்சுகள். அதை அணைக்கும் தண்ணீரைப் போன்றவனே நீ. அந்த தண்ணீரில்லாமல் இந்த பாழும் நெருப்பு வர வர வளர்ந்து என்னை நாசம் செய்யப் போகிறது. தன் கன்றையும் பசு பின் தொடர்வது ஆச்சரியமா? நீ எங்கே போகிறாயோ அங்கே நானும் வருவேன்", என்றாள்.


ராமன்,"அம்மா! தாங்கள் ஒன்றை யோசிக்கவேண்டும். நானும் காட்டிற்குஒ போய், தாங்களும் என்னுடன் வந்து, கைகேயியால் வஞ்சிக்கப்பட்ட என் தந்தையை கை விட்டால் அவர் பிழைக்க மாட்டார் என்பது நிச்சயம். சாதாரணமான பெண்களுக்கே பர்த்தாவைக் கை விடுவது வெகுக் குரூரமான செய்கை. தாங்களோ அதை மனதால் நினைப்பது பிசகு. என் தந்தையான சக்கரவர்த்தி உயிரோடுடிருக்கும் வரையில் தாங்கள் அவருக்கு பணிவிடை செய்யவேண்டும். இதுவே நமது முன்னோர்களின் நித்தியமான தர்மம்", என்றார்.


கௌசல்யை மஹா தர்ம சிந்தையுள்ளவள். ஆகையால் ராமனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அப்படியே செய்வதால் ஒப்புக் கொண்டாள். பிறகு அவர் அவளுடைய மனத்தில் குடி கொண்ட துக்கத்தை நீக்கி, புத்தியை ஸ்திரப் படுத்துவதற்காக "தாங்களும் நானும் மஹாராஜாவின் ஆணைக்குக் கீழ்படிய வேண்டியதால்லவா? அவர் நம்மை ஆளும் அரசன் . நம்மைக் காக்கும் பிரபு. நமக்கு தர்மத்தை உபதேசிக்கும் குரு. குணங்களால் எல்லோரைக் காட்டிலும் மேலானவர். எல்லோருக்கும் அதிபதி. பதினான்கு வருஷங்களை ஒரு கணத்தைப் போல காட்டில் விளையாட்டாகக் கழித்துவிட்டு, மறுபடியும் தங்களுடைய பாதங்களில் பணிவிடை செய்வேன்," என்றார்.


கௌசல்யை ராமனைக் காட்டிற்கு அனுப்புவதற்கும் தான் அயோத்யையில் இருப்பதற்கும் சம்மதித்தாள். ஆனால் அவரிடத்தில் தான் வைத்திருக்கும் அன்பையும் தன் சக்களத்திகளின் துஷ்ட ஸ்பாவத்தையும் நினைத்து நினைத்துக் கண்ணீர் பெருக, "ராமா! இந்த துஷ்ட ஸ்த்ரீகளின் நடுவில் நான் இருக்கவே மாட்டேன். காட்டிலிருக்கும் மிருகங்களைப் போல் உன்னுடன் ஆனந்தமாகக் காலம் கழிப்பேன். என்னால் உனக்குக் கொஞ்சம் கூடக் கஷ்டம் நேராது. உன் தந்தையின் உத்தரவுப்படி காட்டிற்குப் போகவேண்டுமென்று உனக்கு இஷ்டமிருந்தால் என்னையும் கூட்டிக் கொண்டு போ," என்றாள்.


பிறருக்கு ஏதாவது துக்கம் நேர்ந்தால் ராமனுடைய மனமும் துக்கத்தால் மிகவும் தவிக்கும். ஆனால் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதென்ற தர்மத்திற்கு எங்கே குறைவு வருமோ என்று பயந்து, கௌசல்யையின் துக்கத்தைப் பார்த்து தானும் துக்கப்படாமல், மனோதைரியத்தால் தன் துயரத்தை அடக்கிக் கொண்டார். அப்பொழுது தன் தாய் தான் வனத்திற்குப் போக சம்மதித்தவுடன் அவளுடைய துக்கத்தைச் சற்று ஆற்றுவதற்காகத் தன் துக்கத்தை வெளியிட்டு அழுது கொண்டு, "பெண்கள் பிழைத்திருக்கும் வரையில் கணவனே அவர்களுக்குதி தெய்வம். அவரே பிரபு. பூமண்டாலதியான அவர் நம்மை ரக்ஷிக்கும் பொழுது நாம் அனாதைகளல்ல. மேலும் சக்களத்திகள் தங்களுக்குக் கொஞ்சமாவது கெடுதி செய்ய நியாயமில்லை. எனக்குப் பதிலாக இந்த ராஜ்யத்தை ஆளப்போகிற பரதன் தர்மாத்மா. தர்மத்தை அனுஷ்டிப்பதிலேயே பிரியமுள்ளவன். எல்லோரிடத்திலும் பிரியமாகப் பேசுகிறவன். அப்படியிருக்க, தங்களிடத்தில் விசேஷ பக்தியுடன் பணிவு செய்வான். நான் காட்டிற்கு போன பிறகு மஹாராஜா என்னைவிட்டுப் பிரிந்த துக்கத்தால் கொஞ்சம்கூட வருத்தமடையாமல் இருக்கும்படி தாங்கள் வெகு ஜாக்கிரதையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவரோ வயது முதிர்ந்தவர். இந்தக் கொடிய சோகத்தால் அவர் இறந்து போகாதபடி எப்பொழுதும் வெகு ஜாக்கிரதையாகத் தாங்கள் நடந்து கொள்ள வேண்டும். பெண்கன் விரதங்களையும் உபவாசங்களையும் அனுஷ்டித்து மஹா புண்ணியங்களை சம்பாதித்தாலும், கணவனுக்கு பணிவிடை செய்யாவிட்டால், பாவிகளின் கதியை அடைவார்கள். தேவ பூஜைகளைச் செய்யாவிட்டாலும், பெரியோர்களை நஸ்கரிக்காமல் போனாலும், விரதங்கலை அனுஷ்டிக்காமல் இருந்தாலும் கணவருக்கு பணிவிடையைச் செய்து வந்தால், அவர்களுக்கு உத்தம லோகங்கள் கிடைக்கும். தங்களுடைய கணவனுக்கு பணிவிடை செய்வதே பெண்களுக்கு மேலான தர்மமென்று சுருதிகளும், ஸ்மிருதிகளும் உபதேசிப்பதற்கு இதுவே காரணம். முன்னோர்களின் ஆசாரமும் இதுவே.


"புத்தியைச் செலுத்த வேறு விஷயமில்லாமல் தாங்கள் சும்மா இருந்தால் துக்கம் மேலிடும். ஆகையால் பிராம்மண சிரேஷ்டர்களை முன்னிட்டு நான் நலமாய்ப் போய் வருவதற்காகச் சாந்தி ஹோமம், புஷ்டி ஹோமம் இன்னும் மற்ற மங்கள காரியங்களைச் செய்யுங்கள். சந்தனம், தாம்பூலம், புஷ்பம் முதலியவைகளால் தேவதைகளையும் பிராம்மணர்களையும் ஆராதியுங்கள். ஸ்னானம்,ஜபம்,உபவாஸம் முதலிய நியமங்களை அனுஷ்டித்துக் கொண்டு சுத்தமான அன்னத்தைப் புசித்து, தங்களுடைய நாதனுக்குப் பணிவிடை செய்வதில் கவனத்தைச் செலுத்துங்கள். நான் திரும்னி வருங்காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருங்கள். இப்படிச் செய்தால் தர்மாத்மாக்களில் சிரேஷ்டரான என் தந்தை பிழைத்திருப்பதையும், நான் இங்கே திரும்பி வருவதையும் பார்க்கும் பாக்கியத்தை அடைவீர்கள்", என்றார்.


புத்திரனை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற துக்கத்தால் கண்ணீர் பெருகக் கௌசல்யை, "காட்டிற்குப் போகவேண்டுமென்ற புத்தி உனக்கு உறுதியாக உண்டாயிருக்கிறது. என்னால் அதை மாற்ற முடியவில்லை. காலபலத்தை யாரால் ஜெயிக்க முடியும்? குழந்தாய், சாவதானமாகப் போய் வா. உனக்கு எப்பொழுதும் க்ஷேமமுண்டாகட்டும். ஜயமுண்டாகட்டும். நீ திரும்பி வந்தாலென்றி என் சோகம் தீராது. உன் தந்தையின் வார்த்தையை நிறைவேற்றி, உன் இஷ்டத்தையும் பூர்த்தி செய்து மஹா கீர்த்தியடைந்து நீ திரும்பி வந்த பிறகே நிகரற்ற சுகத்தை அனுபவிப்பேன். என் வார்த்தையையும் தள்ளிவிட்டுக் காட்டிற்குப் போகவேண்டுமென்று நீ ஒரே பிடிவாதமாக இருக்கும்படி உன்னைத் தூண்டிவிடும் விதியின் பலத்தை யாரால் அறிய முடியும்? மஹாபராக்கிரமசாலியே, க்ஷேமமாகப் போய் வா. சீக்கிரத்தில் திரும்பி வந்து மதுரமான வார்த்தைகளால் என் மனத்தை சந்தோஷப்படுத்து. ஒரு நிமிடம் கூட உன்னை விட்டுப் பிரிய என் மனம் சஹிக்கவில்லையே? நீ காட்டிலிருந்து மான் தோல்,மரவுரி ஜடைகளுடன் திரும்பி வரும் காலம் இந்த கணமாகவே இருக்கக் கூடாதா?" என்று சொல்லித்துக்கித்தாள். பிறகு ராமன் காட்டிற்குப் போகத் தீர்மானித்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டு, மிக்கப் பிரீதியுடன் அவருடைய க்ஷேமத்தை உத்தேசித்துச் செய்ய வேண்டிய மங்கள காரியங்களைச் செய்ய ஆரம்பித்தாள்.


ததா ஹி ராமம் வனனாஸ நிச்சிதம்
ஸமீக்ஷ்ய தேவீ பரமேண சேதஸா !
உவாச ராமம் ஸூப லக்ஷணம் வசோ
பபூவ ச ஸ்வஸ்த்யயநாபிகாங்க்ஷிணீ !!

ஸர்க்கம் 24  நிறைவு பெற்றது...

ஸ்ரீ ராம ராம ராம