Wednesday, April 27, 2011

லக்ஷ்மணன் ராமனைத் தடுத்தது ஸர்க்கம் 23

ஸ்ரீ ராமசந்த்ராய நம:
ஸர்க்கம் 23
லட்சுமணன் ராமனைத் தடுத்தது
இதி ப்ருவதி ராமே து லக்ஷ்மணோ தஷிரா முஹூ: !
ச்ருத்வா மத்யம் ஜகாமேவ மநஸா துக்க ஹர்ஷயோ: !!


ராமன் இப்படிச் சொல்ல லட்சுமணன், தான் அதற்கு சம்மதிக்காததற்கு அடையாளாமாகத் தலையைக் கீழே குனிந்து கொண்டு "நமது தமையன் தர்மத்தை அனுஷ்டிப்பதில் உறுதியாய் இருக்கிறாரே" என்று சந்தோஷத்தையும், ராஜ்யத்தை விட்டுப் போகிறாரே என்று துக்கத்தையும் அடைந்தார். ஆனால், அந்த அபிப்பிராயத்தை வார்த்தையால் தெரிவிக்கவில்லை. அந்த எண்ணமும் அடுத்த கணத்தில் மாறிவிட்டது. அதிக கோபம் கொண்ட சிங்கம் புருவத்தை நெறிப்பது போல தன் புருவங்களை நெறித்துப் பெட்டியில் அகப்பட்ட சர்ப்பத்தைப் போல சீறிக் கொண்டு மனத்திலுள்ள கோபத்திற்கு அடையாளமாகத் தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டு , யானையின் துதிக்கை போன்ற தன் கையை ஆட்டிக் கொண்டு, குறுக்குப் பார்வையாக ராமனைப் பார்த்து , "தந்தையின் வார்த்தையை நிறைவேற்றாவிட்டால் தர்மத்திற்குக் குறைவு நேரும். நான் தர்மத்தை அனுஷ்டிக்காவிட்டால் பிறரும் அதைக் கைவிடுவார்கள். தந்தையின் கட்டளையை நிறைவேற்றாதவன், நம்மை காப்பாற்றுவானோ என்று மக்கள், என்னிடத்தில் சந்தேகப்படுவார்கள் என்று நினைத்துக் காட்டிற்குப் போவதில் தாங்கள் இவ்வளவு பரபரப்புடன் இருப்பது சரியல்ல. வீரீயம் இல்லாதவர்களும் சித்தபிரமை உள்ளவர்களும் ஷத்திரியர்களில் கீழ்பட்டவர்களுமே உண்மையில் சக்தியற்ற விதியை அனுசரித்து அதற்குக் கட்டுபடுவார்கள். தாங்கள் சத்திரிய சிரேஷ்டர். விதியை விலக்கும் சக்தியை இயற்கையாகவே உடையவர். கலங்காத புத்தி உடையவர். இப்படியிருக்க விதியை ஒருவராலும் வெல்ல முடியாது என்று, அந்த கையாலாகாத பதார்த்தத்தை மெச்சுவது நியாயமல்ல. மனோபலமில்லாதவர்களுக்கு விதி என்பது பிழைப்புக்கு வழியென்று பிருஹஸ்பதி சொல்லிருக்கிறார். ஆகையால், கையாலாகாதர்களே விதியை அனுசரிக்க வேண்டும். புருஷப்பிரயத்தனத்தை விதி வெல்லாது. அதை கொண்டாடலாமா?

"தந்தையின் வார்த்தயை நிறைவேற்றாமலிருந்தால் அதர்மம் நேருமென்று பயப்படுகிறீர்கள். தங்களுக்கு துரோகம் நினைத்த அந்தப் பாவிகளான கைகேயி, தசரதர் இவர்களிடத்தில் தங்களுக்கு ஏன் சந்தேகம் உண்டாகவில்லை?. அவர்கள் தர்மத்தை அனுஷ்டிக்கவில்லையா என்றால், தர்ம அனுஷ்டானமென்ற வேஷத்தால் தங்களுடைய துர்குணங்களையும், கெட்ட நடத்தைகளையும் மறைத்துக் கொள்ளும் சாமர்த்தியமுள்ள எவ்வளவோ மக்கள் இவ்வுலகத்தில் உள்ளார்கள். தாங்கள் தர்மாத்மாவானதால் அவர்களித்தில் தங்களுக்கு சந்தேகம் உண்டாகவில்லை. அவர்களைத் தங்களைப் போல் நினைக்கிறீர்கள். தங்களுடய அபிஷேகத்தைத் தடுக்க அவர்கள் நன்றாக யோசித்து, அவர்கள் இப்படி நடக்கிறார்களென்று தங்களூக்கு ஏன் தெரியவில்லை?. வெகு காலத்திற்கு முன்பாகவே அவர்களிப்படிக் கலந்து யோசனை செய்யாவிட்டால் எப்பொழுதோ கொடுத்த வரங்களைக் கைகேயி இதுவரையில் மறந்து கேட்காமலிருப்பாளா? ராமன் எனக்கு மூத்த புதல்வன். இந்த ராஜ்யம் அவனுக்கு நியாயமாகக் கிடைக்க வெண்டியது. ஆனால், எனக்கு, உன் புதல்வனனான பரதனுக்குக் கொடுக்க வேண்டுமென்ற விருப்பம். அவன் ராமனுக்கு இளையவன். ஆகையால் அப்படிச் செய்ய மக்கள் சம்மதிக்கமாட்டார்கள். ஆகையால், அதற்கு ஒரு உபாயம் செய்வோம். ராமனுக்கு அபிஷேகம் செய்வதாக எல்லா மக்களுக்கும் மத்தியில் நான் அறிவிக்கை செய்கிறேன். பிறகு நீ முன் காலத்தில் கொடுத்த வரங்களைப் பூர்த்தி செய்யும்படி என்னைக் கட்டாயப்படுத்து. நான் அதற்கு இஷ்டமில்லாதவன் போலும், நிர்ப்பந்தத்தின் பேரில் ஒப்புக்கொள்வதாகக் காட்டிக் கொண்டு சம்மதிக்கிறேன். அப்பொழுது ராமனைப் பல வருஷங்கள் வரையில் காட்டிற்கு அனுப்பி, நமது குழந்தை பரதனுக்கு அபிஷேகம் செய்வோம்," என்று நமது தந்தை கைகேயியுடன் கலந்து துரோகமாகச் செய்த யோசனை என்று தங்களுக்கு ஏன் இன்னும் தோன்றவில்லை?. மூத்த புதல்வனிருக்கையில் இளையவனுக்கு அபிஷேகம் செய்வது இவ்வுலகத்தில் எவனுக்காவது இஷ்டமாகுமா? அதிலும் நான் சம்மதிப்பேனா? பொறுத்துக் கொண்டிருக்கமாட்டேன். தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

"தாங்கள் மஹா புத்திமானல்லவா? தர்ம அனுஷ்டானமென்ற ஒரு காரணத்தால், அபிஷேகம் செய்து கொள்ள மாட்டேன். வனத்திற்கே போவேன். அப்படிச் செய்யாவிட்டால் மஹாபாவம் நேரும்" என்று பிசகான அபிப்பிராயம் கொண்டிருக்கிரீர்கள்.அந்தத் தர்மம் எனக்கு விரோதி. கைகேயியின் வார்த்தைக்குக் கட்டுபட்டு தர்ம விரோதமாயும் அனைத்து மக்களும் நிந்திக்கும் வார்த்தைகளை, நமது தந்தை சொல்லவும், ஒருவராலும் தடுக்கக் கூடாத சக்தியையுடைய தாங்கள் அவைகளை நிறைவேற்றுவதாக நிச்சயிப்பதும் எப்பொழுதாவது நேருமா?ஆகையால் தங்களுக்குச் புத்தி கலங்கியிருக்கிறதென்றி வேறல்ல. அவர்கள் கபடமாகத் தங்களுடைய அபிஷேகத்தை நிறுத்துவதற்காகச் செய்த ஏற்பாட்டை, உண்மை என்றெண்ணி மோசம் போகிறீர்கள் என்பதை நினைக்க நினைக்க எனக்குத் துக்கம் மேலிடுகிறது. தர்மத்தை இப்படி அனுஷ்டிப்பதில் இவ்வுலகத்தில் ஒருவருக்கும் சம்மதம் இருக்காது. அவர்கள் பெயருக்கு மட்டுமே நமக்கு தாய் தந்தையர்களே ஒழிய வேறல்ல. சத்ருக்கள் என்பதே உண்மை. நமக்கு கெடுதியைத் தேடுகிறவர்கள் காமத்திற்கு அடிமைகள். ஆகையால் அவர்களுடைய கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென்று எவனாவது நினைப்பானா?

"அவர்களுடய இப்படிப்பட்ட புத்தி தோன்றியது விதியால் நேர்ந்தது. கைகேயியின் குற்றமல்லவே" என்று சொன்னால் அந்த சமாதானத்தை ஒப்புக் கொள்ள முடியுமா? எனக்கும் சரியாகத் தோன்றவில்லை. பயந்தவர்களும் வீரியமில்லாதவர்களுமே தெய்வத்தைப் பின் பற்றுவார்கள். வீரர்களும் மன உறுதியுள்ளவர்களும் அதை லட்சியம் செய்யமாட்டார்கள். தன் பலத்தால் விதியை வெல்லக் கூடியவனிடத்தில் அதன் ஆட்டம் கொஞ்சமேனும் பலிக்காது. அவனுக்கு ஆகவேண்டிய காரியத்தையும் அது கெடுக்காது. விதியைக் காட்டிலும் புருஷப் பிரயத்தனம் பலமுள்ளதென்பதைக் காட்ட இன்று பிரத்யக்ஷமாக ஓர் உதாரணத்தைப் பாருங்கள். விதியின் பலமும் புருஷப்பிரயத்தனத்தின் பலமும் இன்று நன்றாக விளங்கும். அவைகளுக்குள்ள பேதத்தையும் தாரதம்யத்தையும் எல்லோரும் தெளிவாக அறிவார்கள். விதியே தங்களுடைய அபிஷேகத்தைத் தடுத்ததென்று தாங்களும் இன்னும் பலரும் மக்களும் எண்ணி கொண்டிருக்கிறீர்கள். அந்தத் தெய்வம் என் பலத்தால் இன்று ஜயிக்கப்பட்டு என்ன பாடுபடுமென்பதை எல்லோரும் பார்ப்பீர்கள். மதம் பிடித்துச் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு மாவெட்டியால் குத்துவதையும் லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படி ஓடும் யானையைப் போல், தடையில்லாமல் செல்லும் தெய்வத்தை, என் புத்தி என்ற பாசத்தால் அடக்கித் திருப்பிக்கொண்டு வருகிறேன். லோகபாலர்கள் ஒன்று சேர்ந்தாலும், இந்த மூன்று லோகங்களில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்தாலும், தங்களுடைய அபிஷேகத்தைத் தடுக்க முடியாது. அப்படியிருக்க, தமது தந்தை தடுக்கப் போகின்றாரோ? தங்களுடைய அபிஷேகத்தைத் தடுத்து, தங்களைக் காட்டிற்கு அனுப்பவேண்டுமென்று ரகசியமாக யோசனை செய்தவர்களையே இந்த ராஜ்யத்திலிருந்து துரத்தி அந்தக் காட்டில் பதி நான்கு வருஷங்கள் வசிக்கும்படி செய்கிறேன். தங்களுடைய அபிஷேகத்தை நிறுத்த வேண்டுமென்றும் அவர்களுடைய புத்திரனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என்றும் அவர்கள் கொண்டிருக்கும் ஆசையை இன்று வேரறுக்கிறேன். தெய்வத்துடன் விரோதிதுக் கொண்டு ஒருவன் தப்பினாலும் தப்பலாம். என்னை விரோதித்துக் கொண்டு உயிரோடு இருக்கமுடியுமா?

"தாங்கள் வனத்திற்கா போகவேண்டும்? போவது நிச்சயமே. ஆனால் இப்பொழுது அல்ல. இந்தக் காரணத்திற்காக அல்ல. நமது முன்னோர்களான ராஜரிஷிகள் வெகுகாலம் வரையில் ராஜ்யத்தை ஆண்டு, வயது சென்ற பிறகு வானப்பிரஸ்தாசிரமத்தைக் கைகொண்டு ராஜ்யத்தைப் புத்திரர்களிடத்தில் ஒப்புவித்து, "நமது குடிகளை உன் குழந்தையைப் போல் பரிபாலிக்க வேண்டும்", என்று கட்டளையிட்டு, வனத்திற்குப் போய்த் தவம் செய்வது வழக்கம். அப்படியே தாங்களும் அனேகமாயிரம் வருஷங்கள் வரையில் ராஜ்ய பரிபாலனம் செய்து விட்டுப் பிறகு வனத்திற்குப் போவீர்கள். அப்பொழுது தங்களூடைய புத்திரர்கள் ராஜ்யத்தை ஆள்வார்கள்."

நமது தந்தை நிலையான சிந்தனை உடையவர் அல்ல. ராஜ்யம் அடிக்கடி மாறுமென்று தங்களுக்கு சந்தேகமுண்டாகி, தங்களுக்கு ராஜ்யம் வேண்டாமென்றால், கடலை அதன் கரை காப்பது போல நான் இந்த ராஜ்யத்தைக் காப்பாற்றுவேன். இப்படியே பிரதிக்ஞை செய்வேன். தவறினால் வீரர்கள் அடையவேண்டிய சொர்க்கம் கிடைக்காமல் போகட்டும்.

ஆகையால், இப்பொழுது தயாராயிருக்கும் பதார்த்தங்களால் அபிஷேகம் செய்து கொள்ளும் விஷயத்தில் தங்கள் மனத்தைச் செலுத்த வேண்டும். அதைத் தடுக்கும் அரசர்களை நெருங்க விடாமல் துரத்த நான் ஒருவனே போதும். இந்தக் கைகள் வெறும் அழகுக்கோ? என் வில்லும் இடுப்பில் கட்டியிருக்கும் கத்தியும் என் அம்பறையில் நிறைந்திருக்கும் பாணங்களும் வெற்ம் அலங்காரத்திற்கோ? விளையாடவோ அல்லது பெருமைக்கோ? இந்த நான்கும் நமது சத்ருக்களை வேரறுக்க போதுமானவையல்லவா? எனக்குச் சத்ருவென்று ஒருவன் ஏற்பட்டால் அவன் உயிரோடுருக்கப் பொறுக்கமாட்டேன். அவன் வஜ்ராயுதத்தைத் தரித்த இந்திரனாயிருந்தாலும் சரி, மின்னலைப் போல் பிரகாசிக்கும் என் கத்தியால் அவனுடைய பிராணனை வாங்கி விடுவேன். பாருங்கள், இன்றைக்கு என் கையால் வெட்டப்பட்ட யானைகள், குதிரைகள், மனிதர்களுடைய கைகால்கள், தலைகள் பூமியில் விழுந்து, அடர்ந்த காட்டைப் போல் சஞ்ச்சரிக்க முடியாமல் செய்து விடும். என் கத்தியால் வெட்டித் தள்ளப்பட்ட யானைகள்,கொஃஸுந்து விட்டெரியும் மலைகளைப் போலவும், மின்னல்களுடன் கூடிய மேகங்களைப் போலவும், பூமியில் விழும். நான் கையில் வில்லை எடுத்து யுத்தம் செய்ய நின்றால் இந்த உலகத்திலுள்ள புருஷர்களுக்குள் எவனாவது தன்னைச் சூரனென்றும் ஆண்பிள்ளை என்றும் சொல்லிக் கொள்ள துணிவானா? எல்லோரும் பெண்களைப் போல் ஓடி ஒளிந்து கொள்வார்களல்லவா? ஒரே சமயத்தில் ஒரே பாணத்தால் அல்ப வீரியமுள்ள பல சத்ருக்களை அடிப்பேன். இப்படி யானைகளையும் குதிரைகளையும் வீரர்களையும் மர்ம ஸ்தானங்களில் பாணங்களால் துளைப்பேன். "நீ ஒருவனாய்ப் பலரை எப்படி ஜெய்ப்பாய்?", என்றுத் தங்களுக்கு சந்தேகம் வேண்டாம். நான் உபதேசம் பெற்ற அஸ்த்திரங்களின் மஹிமை இன்று வெளிப்படும். நமது தந்தையின் அதிகாரத்தைப் பிடிங்கித் தங்களுக்கு கொடுக்கப் போகிறேன். என் இரண்டு கைகளும் சந்தனம் பூசிக் கொள்ளவும், ஆபரணங்களைத் தரிக்கவும், தானங்களைக் கொடுக்கவும், மித்திரர்களைக் காப்பாற்றவும் இதுவரையில் உபயோகப்பட்டன. அவை இன்றைக்குத் தங்களுடைய அபிஷேகத்திற்குத் தடை செய்கிறவர்களை அழிப்பதில் உபயோகப்படும். ஆகையால், தங்களுடைய விரோதியான எவனுடைய உயிரையும்,கீர்த்தியையும்,மித்திரர்களியயும் நாசம் செய்ய வேண்டும்?. நான் தங்களுடைய ஊழியன். தங்களுடைய உத்திரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பூமண்டலம் தங்களுடைய ஆளுகைக்குள் வருவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?." என்றார்.

ரகுகுலத் திலகன்,"குழந்தாய், நமது பெற்றோர்கள் பிழைத்திருக்கும் வரையில் அவர்களுடைய கட்ட்ளைப்படி நடக்க வேண்டும். அவர்கள் இறந்த பிறகு ஒவ்வொரு வருஷத்திலும் அதே திதியில் பல பேர்களுக்கு அன்னம் இடவேண்டும். கயாஷேத்திரத்தில் அவர்களை உத்தேசித்துப் பிண்டம் போட வேண்டும். இம்மூன்று காரியங்களைச் செய்வதால் ஒருவனுக்குப் புத்திரனென்று பெயர் கிடைக்கிறது. ஸ்மிருதிகள் இதையே உபதேசிக்கின்றன. ஆகையால், நமது தந்தையின் வார்த்தையை மீறமாட்டேன். எப்படியானாலும் அதை நிறைவேற்றப் போகிறேன். உலகத்தில் சாதுக்கள் அனுஷ்டிக்கும் மார்க்கம் இதுவே", என்று தான் முன்பு விஸ்தாரமாக உபதேசித்த தர்மத்தை இப்பொழுது சுருக்கமாகச் சொல்லி, லட்சுமணனுடைய கண்ணீரைத் துடைத்து, அடிக்கடி சமாதானம் செய்தார்.

விம்ருஜ்ய பாஷ்பம் பரி ஸாந்த்வ்ய சாஸக்ருத்
ஸ லக்ஷ்மணம் ராகவ வம்ஷவர்தன:!
உவாச பித்ர்யே வசனே வ்யவஸ்திதம்
நிபோத மாமேவ ஹி சௌம்ய ஸத்பதே !!

லக்ஷ்மணன் ராமனைத் தடுத்தது சர்க்கம் 23  நிறைவு பெற்றது.

ஸ்ரீ ராம ராம ராம