Tuesday, May 17, 2011

5.தீராத வியாதிகள் தீர


ஸ்ரீ ராமசந்த்ராய நம:

5.தீராத வியாதிகள் தீர

=========================================================

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

யுத்த காண்டம்: சர்க்கம் 59

=========================================================

உமா ஸம்ஹிதா

அபஸ்மார ச்வாஸ காஸ குஷ்டாதி கத சாந்தேயே !
ஆத்யே யுத்தே தஸாஸ்யஸ்ய மௌளிபங்கம் திநேதிநே !!
படேத் த்விவாரம் நைவேத்ய மாதௌ மத்வந்தத: பய: !!

கரும வியாதிகள் எனப்படுகின்ற காக்காய் வலி, மூர்ச்சை, பெருமூச்சு, காசம், க்ஷயரோகம், பெருவியாதி, குஷ்டம் போன்ற தீராத நோய்கள் நிவர்த்தியாவதற்கு "ராவண கிரீட பங்கம்" என்ற யுத்த காண்டம் 59-வது ஸர்க்கத்தை தினந்தோறும் இரண்டு தடவை (காலை ஒரு முறை, மாலை ஒரு முறை) பாராயணம் செய்ய வேண்டும்.

நிவேதனம்: ஆரம்பத்தில் தேன், முடிவில் பால்.

ஸங்கல்பம்
ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரதசத்ருக்ன ஹனுமத் ஸமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரஸாதேன ஸகலவித
ரோக சாந்த்யர்த்தம் "ராவணகிரீட பங்கா"
த்மக ஸ்ரீமத் ராமாயண கட்ட பாராயணம்
அஹம் கரிஷ்யே!!



ஸர்க்கம் 59

ராமன் ராவணனுடைய கிரீடத்தை உடைத்தது.

தஸ்மிந் ஹதே ராக்ஷஸ ஸைnயபாலே
ப்லவங்கமானா ம்ருஷபேண யுத்தே !
பீமாயுதம் ஸாகரதுல்யவேகம்
விதுத்ருவே ராக்ஷஸராஜஸைன்யம் !!

இப்படி வானரத் தலைவனால் ராக்ஷஸ சேனாதிபதி கொல்லப்பட்டவுடன், பயங்கரமான ஆயுதங்களையும் ஸமுத்திரத்தைப் போன்ற வேகத்தையுமுடைய அந்த ராக்ஷஸஸேனை முறிந்தோடி ராவணிடத்திற்குச் சென்று, அக்னி புத்திரனால் பிரஹஸ்தன் மடிந்ததைத் தெரிவித்தார்கள். அப்படி நடக்குமென்று தசமுகன் ஸ்வப்னத்திலும் நினைத்ததில்லை. ஆகையால் ஆச்சரியமும், சோகமும் கோபமும் மேலிட்டு, தேவேந்திரனைச் சூழ்ந்த அமரயுத்த வீரர்களைப் போல் தன் சமீபத்தில் நிற்கும் ராக்ஷஸ வீரர்களை நோக்கி, "பார்த்தீர்களா? நமது சேனாதிபத்ய்யான பிரஹஸ்தன் சாமன்யனா? இந்திரனையும் கதறச் செய்கிறவன். இப்பொழுது அவனும் அளவற்ற ராக்ஷஸ ஸைன்யமும் அல்பக் குரங்குகளால் மடிந்தார்கள். ஆகையால் சத்ருவை நாம் அலட்சியம் செய்யக்கூடாது. இனி நானே யுத்தத்திற்குச் சென்று ராமலட்சுமணர்களையும் வானரர்களையும் காட்டுத்தீ விருக்ஷங்களை எரிப்பது போல் என் பாணாக்னியால் கொளுத்தி ஜயசாலியாய்த் திரும்பி வருகிறேன்" என்று நெருப்புக் கொழுந்தைப் போல் பிரகாசிக்கும் ரதத்தில் ஏறினான். அதில் உத்தம ஜாதி அச்வங்கள் பூட்டியிருந்தன. காந்தியால் திக்குகளைப் பிரகாசிக்கச் செய்தன. அந்த ராக்ஷஸேச்வரன் யுத்தத்திற்குப் புறப்படும் பொழுது சங்கம், பேரிகை, துந்துபி, மிருதங்கம் முதலிய வாத்யங்களின் ஓசையும், யுத்த வீரர்கள் தோள் தட்டும் சப்தமும், வீரவாதங்களும், ஸிமஹ நாதங்களும், புண்யாஹவாச ஸ்தோத்திரங்களும் எங்கும் நிறைந்தன. பெரியோர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு, பிரஜைகளால் கொண்டாடப்பட்டு, லங்கேச்வரன் யுத்தத்திற்குப் புறப்பட்டான். பர்வதங்களைப் போல் கடினமான தேகங்களையும், மேகங்களைப்போல் நினைத்த மாத்திரத்தில் மாற்றக் கூடிய ரூபங்களையும் நெருப்புக் கொழுந்தைப் போல் பிரகாசிக்கும் நேத்திரங்களையுடைய ராக்ஷஸ வீரர்களால் சூழப்பட்ட தசமுகன், பூதகணங்களால் சூழப்பட்டு அஸூரர்களுக்குத் தலைவனான ருத்திரனைப்போல் விளங்கினான். "இவருடைய (சிவனுடைய) தாமஸ அம்சமே ருத்திரனெனப்படும்" என்று மைத்ராயணீய உப*நிஷத்தில் சொல்லியபடி, ருத்ரன் அஸூரர்களுக்கு அதிபதியென்றும் தெரிகிறது.

பிறகு அந்த மஹாதேஜஸ்வியான தசமுகன் லங்கைக்கு வெளியில் வந்து, வானரஸைன்யம் விருக்ஷங்களையும் மலைகளையும் எடுத்துக்கொண்டு, பார்க்கப் பயங்கரமாய் சமுத்திரத்தைப் போலும் மேகங்களை போலும் கர்ஜித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அசுர படை அதிகோபத்துடன் வருவதைக் கண்டு ராமனுக்கு யுத்த ஆவேசத்தால் புஜங்கள் நீண்டன. வீர லக்ஷ்மி விளங்கிற்று. எல்லையற்ற வானர படைகளால் சூழப்பட்டு நிற்கையில், விபீஷணன் போர்வீரர்களின் தாரதம்யத்தை நன்றாக அறிந்தவன். ஆகையால், ராமன் அவனை நோக்கி, "அனேக த்வஜங்களாலும், கொடிகளாலும், வில்லுகளாலும், சூலம் ஈட்டி முதலிய ஆயுதங்களாலும், மலைகளைப் போன்ற யானைகளாலும், பயமற்ற வீரர்களாலும் விளங்கும் இந்த படை யாருடையது? இது கலைக்கமுடியாதது" என்றார். அதற்கு இந்திரனைப் போன்ற வீரியமுடைய விபீஷணன், அசுர படையின் விவரத்தையும் அசுர வீரர்களுடைய பெருமைகளையும் விவரித்தான். "அதோ பெரிய சரீரத்துடன் இலஞ்ச்சூரியனைப் போன்ற சிவந்த முகத்துடனும் அந்த மதயானையின் தோளில் உட்கார்ந்து கொண்டு, தன் தேக பாரத்தால் அந்த யானையின் தலையை அதிரச் செய்கின்றவன் அகம்பனன். அதோ சிங்கக் கொடியையுடைய தேரில் இந்திர வில்லைப் போன்ற தன் வில்லைச் சுழற்றிக் கொண்டிருப்பவன், ராவணனுடைய மூத்த குமாரனான இந்திரஜித். தேகபலத்தில் மத யானையைப் போன்றவன். பயங்கரமாய் வெளியில் தெரியும் கோரைப் பற்களையுடையவன். பிரம்மாவால் கொடுக்கப்பட்ட வரங்களால் நினைத்த பொழுது மறையக்கூடியவன். அதோ, விந்தியம், மஹேந்திரம், அஸ்தகிரி முதலியவைகளைப்போல் எல்லையற்ற தேகத்தையுடையவன் அதிகாயன். அளவிற்கு மிஞ்சின ஒரு வில்லைச் சுற்றிக்கொண்டு, ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்பட்டத் தேரில் வருகிறான். மாயாபலமில்லாவிட்டாலும் இந்திரஜித்தை விட மேலான வீரன். அதோ இளஞ்சுரியனைப் போல் மின்னும் கண்களுடன் சிறந்த யானையின் மேலேறிக்கொண்டு, அதன் மணியின் சப்தத்தோடு தன் கர்ஜனையையும் சேரும்படி செய்கிறவன் மஹோதரன். அதோ தங்க ஆபரணங்களாலும் ஜேணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட குதிரை மீது ஏறிக்கொண்டு, கிரணங்கள் பாயும் எறியீட்டியைச் சுழற்றிக்கொண்டு வருகிறவன் பிசாசன். சந்தியா காலத்தில் மேகங்கள் நிறைந்த மலையைப் போல் பிரகாசிக்கும் அவனுடைய குதிரையையும், இடியைப்போல் அவன் வரும் வேகத்தையும் பாருங்கள். அதோ கூர்மயான முனையுடனும், மின்னலைப் போன்ற காந்தியுடனும், வஜ்ராயுதத்தை மிஞ்சின வேகத்துடனும் விளங்கும், சூலத்தை எடுத்துக் கொண்டு, மலையைப் போல் பிரகாசிக்கும் காளைமேல் வருகிறவன் திரிசரஸ் என்று பிரசித்தி பெற்றவன். அதோ மேகத்தைப் போன்ற ரூபத்துடனும் பருத்த அகன்று உயர்ந்த மார்புடனும் நாகக் கொடியுடனும் யுத்தத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு வில்லைச் சுழற்றுகிறவன் கும்பன். தங்கத்தாலும் வஜ்ரங்களாலும் அலங்கரிக்கப்பட்டுப் புகைகளுடன் பிரகாசிக்கும் இருப்புக் கட்டுத்தடியை எடுத்துக் கொண்டு அசுர படைகளுக்கு முக்கியமானவனாய் விளங்குகின்றவன், அற்புதமான கோரகிருத்தியங்களைச் செய்யும் நிகும்பன். அதோ வில், கத்தி, பாணங்கள் முதலிய ஆயுதங்களால் நிறைந்து, அழகான கொடியுடன் கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போல் பிரகாசிக்கும் தேரில் ஏறி வருகிறவன் நராந்தகன். இவனுடன் போர் புரிய யாரும் கிடைக்கததால் புஜங்களின் தினவு தீர்வதற்காக மலைகளுடன் போர் செய்து கொண்டிருப்பவன்.

"பலவகைக் கோர ரூபங்களோடும் புலி, ஒட்டகம், பாம்பு, மான், குதிரை முதலிய மிருகங்களைப் போன்ற முகங்களோடும் சுழலும் கண்களோடும் காணப்படும் பூதங்களால் சூழப்பட்டு, அதோ வருகிறவன், தேவர்களுடைய கர்வத்தை அடக்கினவன். அதோ வெள்ளைக்குடை சந்திரனைப் போல் அவன் தலைமேல் விளங்குகிறது. மெல்லிய கம்பிகளையுடைய அதன் கீழ் பூதகணங்களால் சூழப்பட்ட ருத்திரனைப் போல் வீற்றிருப்பவன். அசுராதிபதி. உத்தம கிரீடத்தாலும் குண்டலங்களாலும் பிரகாசிக்கும் முகத்துடன், ஹிமவான் விந்தியம் முதலிய மலைகளைப் போல் பருத்த தேகத்துடன் தோன்றுகிறவன், இந்திரன் யமன் முதலிய திக்பாலர்களுடைய மதத்தை அடக்கின லங்கேச்வரன். சுரியனைப் போல் தேஜசால் ஜொலிப்பதைப் பாருங்கள்" என்றான்.

அதைக்கேட்டு ராமன், "விபீஷண! என்ன காந்தி! அசுராதிபதியான ராவணன் மஹாப்ரதாவானென்று தோன்றுகிறது. மத்தியான காலத்தில் பூரண கிரணங்களுடன் ஜொலிக்கும் சூரியனைப் பார்ப்பது எப்படி அசாத்தியமோ அப்படி இவனைப் பார்க்கக் கண் கூசுகிறது. இவனுடைய தேகம் தேஜசால் சூழப்பட்டிருப்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. தேவதானவ வீரர்களுக்கும் இப்படிப்பட்ட தேக காந்தி கிடையாது. இவனுடைய படையில் ஒவ்வொருவனும் மலை போன்ற தேகத்தை உடையவன். மலைகளால் போர் செய்கிறவன். தீக்ஷ்ணமான ஆயுதங்களைத் தரித்தவன். கோரமுள்ள பூதங்களால் சூழப்பட்ட யமனைப் போல் பராக்கிரமசாலிகளான வீரர்களுடன் வருகிறான். இந்தப் பாபி இன்று என் கண்ணில் பட்டது நல்லது தான். சீதையை அபகரித்ததால் உண்டான கோபத்தை இதுவரையிலும் அடக்கி வந்தேன். இப்பொழுது அதை இவன்மேல் பிரயோகிக்கிறேன்" என்று சொல்லி ரகுவீரன் பிரசண்ட கோதண்டத்தை வளைத்து நாணோசை செய்து ஒரு சிரேஷ்டமான பாணத்தை சித்தம் செய்து, லட்சுமணனுடன் ராவணனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது தசமுகன் தன்னைச் சுற்றியிருந்த ராக்ஷஸர்களைப் பார்த்து, "நீங்கள் சகல கவலைகளையும் விட்டு லங்கையின் உட்கோட்டை வாசல்களையும் கோபுரங்களுக்குப் பக்கங்களில் படைகளுக்காகக் கட்டப்பட்டிருக்கும் வீடுகளையும் கோபுரங்களையும் ஜாக்கிரதையாகக் காத்துக் கொண்டிருங்கள். நீங்கள் என்னுடன் இங்கே வந்திருப்பதாய் நமது எதிரிகளுக்குத் தெரிந்தால், லங்கையில் நுழைந்து அங்குள்ளவர்களை ஜெயித்து அதைப் பிடித்து விடுவார்கள்" என்று அவர்களை அனுப்பிவிட்டு, ஒரு திமிங்கலம் கொந்தளிக்கும் கடலை அலட்சியமாகக் கிழித்துக்கொண்டு செல்வது போல், வானர படையை இருபுறத்திலும் பிளந்து தள்ளிக் கொண்டு சென்றான். ஜொலிக்கும் வில்லையும் பாணங்களையும் கையிலெடுத்துக் கொண்டு, வானர படையை நாசம் செய்வதற்குக் காலபாசத்தை ஏந்திவரும் யமனைப்போல்வரும் தசக்ரீவனைக் கண்டு, சுக்ரீவன் ஒரு மலைச் சிகரத்தைப் பெயர்த்து அவனை நோக்கி ஓடிவந்து அதை அவன் மேல் எறிந்தான். பெரிய மரங்களுடனும் மலையருவிகளுடனும் விளங்கும் அந்தச் சிகரம் தன்னை நோக்கி வருவதைக் கண்டு, தன்னுடைய பாணங்களால் தசக்ரீவன் அதைத் தூளாக்கி, பெரிய பாம்பினைப்போல் சீறிக்கொண்டு, மஹேந்திரனுடைய வஜ்ரத்தைப் போல் அதிவேகத்துடன், அந்தகனைப்போல் சகல வஸ்துகளையும் நாசம் செய்யக்கூடியதாய், நெருப்புப் பொறிகள் பறக்கும் அக்னியைப் போல் ஜொலிக்கும் பாணத்தை எடுத்து வானர ராஜனைக் கொல்வதற்காகப் பிரயோகித்தான்.சுப்ரஹ்மண்யரால் கிரௌஞ்ச பர்வதத்தின் மேல் பிரயோகிக்கபட்ட சக்தியைப்போல் அந்தப் பாணம் சுக்ரீவனுடைய தேகத்தைப் பிளந்து ஊடுருவி சென்றது. அந்த உபத்திரவத்தைப் பொறுக்காமல் வானரராஜன் புத்தி சிதறி அலறிக்கொண்டு பூமியில் விழுந்தான். அவன் பிரக்ஞையற்றுக் கிடந்ததைக் கண்டு ராக்ஷஸர்கள் சந்தோஷத்தால் கர்ஜித்தார்கள். உடனே கவாக்ஷன், கவயன், சுதம்ஷ்ட்ரன், ரிஷபன், ஜ்யோதிர்முகன், நளன் என்ற வானர வீரர்கள் மலைகளைப் பெயர்த்துக் கொண்டும், தேகங்களைப் பெருக்கிக் கொண்டும் தசக்ரீவனை எதிர்த்தார்கள். அவன் கூர்மையான பாணங்களால் அவர்களுடைய அடிகளை வீணாக்கி, விசித்திரமான தங்கக் கட்டுகளுடைய வேறு பாணங்களால் அவர்கலைப் பிளந்தான். அவர்கள் புத்தி சிதறி கைகால்களை உதறிக்கொண்டு பூமியில் விழ, ராவணன் வானர படையை அம்பு மழையால் மறைத்தான். தசக்ரீவனுடைய பாணங்களால் அடிபட்டு உபத்திரவத்தைத் தாங்காமல் சிலரும், பயமென்ற பாணங்களால் அடிபட்டுக் கதறும் சிலரும், ராக்ஷஸாதிபதியின் வேகத்தால் பூமியில் அடிபட்டு விழும் சிலரும், வனத்தில் சஞ்சரித்துக் கொண்டு அதுவரையில் அடி பட்ட சத்ருக்களையும் ஆயுதங்களையும்பார்க்காததால் மிரண்டு கூச்சலிடும் சிலரும் சர்வ லோகங்களும் சரணமடையும் ராமமூர்த்தியைக் கதியென்று அடைந்தார்கள். (நீக்க முடியாத துக்கமே சரணாகதிக்கு ஹேதுவாகும். தேசம், காலம், அதிகாரி, பலம், நியமம் முதலியவைகளை விசாரிக்க வேண்டியதில்லை.)

சரணாகதியின் தாரதம்யத்தை அறிந்த சரண்யன், உடனே வில்லை எடுத்து நாணெற்றி, ராவணனை எதிர்த்துச் சென்றார். ஆர்த்தப்பிரபத்திக்கு (அபாயத்திலிருந்தாவது கஷ்டத்திலிருந்தாவது தன்னை நீக்கும்படி சரணமடைவது) உடனே பலனைக் கொடுக்க வேண்டியதாகையால், ஒருவேளை லட்சுமணன் தம்மை கேட்காமலேயே போருக்குப் போய்விடுவானோ என்று தானே வில்லும் கையுமாகப் போகப் புறப்பட்டார். தன்னை ஆச்ரயித்தவர்களை ரக்ஷிப்பதற்கு அதி வேகமாகச் செல்லும் ராமனை, லட்சுமணன் கைகூப்பிப் போகும் வழியில் மறித்துப் பிரார்த்தித்தார். ராமனுக்கு சகலவித கைங்கர்யத்தையும் செய்வதாய் பிரதிக்ஞை செய்து, அதனால் கிடைத்த கைங்கர்ய லட்சுமியுடைய இளையபெருமாள், தன் பிரார்த்தனையை அங்கீகரிப்பதற்காகக் கைகூப்பினார். (சர்வசேஷியானா பகவானுடைய கைங்கரியமே சேஷ பூதர்கலான ஜீவர்களுக்குப் பரமப் பிரயோஜனம்.) "அண்ணா! தங்களுடைய பாரியையே அபகரிக்கத் துணிந்த இந்தத் துர் ஆத்மாவைத் தாங்களே கொல்லவேண்டியது. அது தங்களுக்கு ஒரு பொருட்டல்ல.ஆனால் அளவற்ற பலபராக்கிரமங்களால் விளங்கும் தாங்கள் இந்த அற்ப ராக்ஷஸனுடன் யுத்தம் செய்வது அழகல்ல. உத்திரவானால் நான் இவனை வதம் செய்கிறேன்" என்றார். (உனக்குச் சக்தியிருந்தால் போகக்கூடாதோ என்றால், சேஷபூதனான நான் சர்வசேஷியான தங்களுடைய உத்தரவில்லாமல் ஒரு காரியத்தைச் செய்வது என் பரதந்த்ர ஸ்வரூபத்திற்கு ஹானியை உண்டாக்கும்.) அதற்கு ராமன், "அப்படியானால் போ, எதிரியை அலட்சியம் செய்யாதே. யுத்தம் செய்வதற்கு ஆவல் கொண்டிருப்பதைப் போல் வெகு ஜாக்கிரதையாய் இரு.ராவணனோ மஹாவீரன். அற்புதமான பராக்கிரமத்தை உடையவன். ஓர் அஸ்த்திரத்தை எடுப்பவன் போலக் காட்டி வேறோன்றை எடுக்கிறான். அதைத் தொடுபவன் போல் காட்டி வேறொன்றை விடுக்கிறான். இவன் கோபம் கொண்டால் மூன்று லோகத்திலுள்ளவர்களும் இவனுக்கெதிரில் நிற்கமுடியாது. ஆகையால், அவனுடைய குறைகளை நன்றாகக் கவனித்தறிந்து உன் குறைகளை நீக்கிக்கொள். உன் வில்லாலும் பார்வையாலும் உன்னை ஜாக்கிரதையாகக் காப்பாற்றிகொள்" என்றார். லட்சுமணன் ரகுவீரனை ஆலிங்கனம் செய்து பிரதக்ஷிண நமஸ்காரங்களுடன் உத்திரவு பெற்றுக்கொண்டு யுத்தத்திற்குச் சென்றார். அங்கே ராவணன் காந்தியால் ஜொலிக்கும் வில்லை வளைத்துச் சரமாரிகளால் வானர படையை மறத்து, கண்டம்துண்டம் செய்வதைக் கண்டார்.

அதற்குள் ஆஞ்சனேயர் ஓடிவந்து, "இதென்ன அநியாயம்! சேவகனான நானிருக்கத் தாங்கள் இப்படி வரலாமா?" என்று முறையிட்டு, பாணக் கூட்டங்களைத் தடுத்து இராவணன்மேல் பாய்ந்தார். அவனுடைய தேரினருகில் சென்று வலது கையை ஓங்கி ராவணனைப் பயமுறுத்தி, "தேவ தானவ கந்தர்வ யக்ஷர்களை நீயும் உன் ராக்ஷஸர்களும் முறியடித்திர்கள். ஆனால் வானரர்களிடத்திலிருந்து உனக்கு மித்ருவென்பதை ஏன் அற்யாய்? இதுவரையிலும் உன்னைப் பிழைக்கும்படி விட்டதே தவறு. இதோ பார், ஐந்து கிளைகளுள்ள மஹா விருக்ஷத்தைப் போன்ற என் வலது கை உன் பிராணனை வாங்கப் போகிறது" என்றார். அதற்கு ராவணன், கோபத்தால் விழிகள் சிவந்து, நிகரற்ற பராக்கிரமத்தால் இடிபோல் சிரித்து, "அடே, குரங்கே! சீக்கிரமாய் அடி. தயங்காதே. ராவணனை எதிர்த்து அடித்தேனன்ற கீர்த்தியை அடைய விரும்புகிறாய். அதை ஏன் கெடுக்கவேண்டும்? அதனால் உன் பலத்தை அறிந்து அதற்கு தகுந்த பலத்தை உபயோகித்து உன்னைக் கொல்வேன்" என்றான்.அதற்கு மாருதி, "அடே, துஷ்டா, நீ என்னைக் கொல்வதிருக்கட்டும். உன் புத்திரனான அக்ஷனை நான் கொன்றது பொய்யல்லவே" என்றார். அதைக் கேட்டு மஹாதேஜஸ்வியான ராவணன் வாயுபுத்ரனுடைய மார்பில் ஓங்கி அறைந்தான். அதனால் ஹனுமான் பல தடவை நடுங்கி ஒரு முகூர்த்தம் அசைவற்று நின்றார். பிறகு மஹா புத்திமானாகையால் தைரியப்படுத்திக் கொண்டு, கடுங்கோபத்துடன் தசமுகனைக் கையால் அறைந்தார். அதனால் தசக்ரீவன் மலைகள் பூகம்பத்தால் நடுங்குவதுபோல் நடுங்கினான். அதைக்கண்டு ரிஷிகளும், வானரர்களும், சித்தர்களும், தேவர்களும், அசூரர்களும் சந்தோஷத்தால் கோஷித்தார்கள்.பிறகு ராவணன் கொஞ்சம் சிரமம் தீர்ந்து, "அடே, குரங்கே! நல்லது. உன் வீரியத்தை மெச்சினேன். நீ எனக்குத் தகுந்த சத்ருவே" என்றான். அதற்கு ஆஞ்சனேயர், "என் வீரியத்தை சுடவேண்டும். என்னிடம் அடிபட்டும் நீ இன்னும் பிழைத்திருக்கிறாயே! நான் கொடுத்த அடி உன்னைக் கொல்லாதபொழுது அதைப் புகழ்வது எப்படி? இன்னும் ஒரு தடவை அடி. பார்ப்போம். வீண்பெருமை பேசாதே. பிறகு இந்த முஷ்டியால் உன்னை யமலோகத்திற்கு அனுப்புகிறேன். துஷ்டா! முன்பு கொஞ்சம் கவனிக்காமல் இருந்ததால் நீ பிழைத்தாய். இப்பொழுது தப்பமாட்டாய்" என்றார். அந்த வார்த்தைகளைக் கேட்டு ராவணனுக்குக் கோபம் ஜொலித்தது. கண்கள் சிவக்க வலது கையை மடக்கிக்கொண்டு தன் பூர்ண பலத்துடன் மாருதியை மார்பில் குத்தினான். மறுபடியும் மார்பில் அடிக்கப்பட்டு ஹனுமான் கிடுகிடென்று நடுங்கினார். மஹா பலவானான ஆஞ்சனேயர் புத்தி கலங்கி நிற்பதை ராவணன் கண்டு, நீலனிருக்கும் இடத்திற்கு தேரினைச் செலுத்தினான்.

காலஸர்பங்களைப் போன்ற பாணங்களால் அவனுடைய உயிர் நிலைகளைப் பிளந்து, பிரதாப லங்கேசுவரன் வானர சேனாதிபதியை எதிர்த்தான். நீலன் மிகவும் வருத்தமடைந்து ஒரு கையால் பாணங்களைத் தடுத்து, மற்றொரு கையால் ஒரு பர்வத சிகரத்தைப் பிடுங்கி ராவணன் மேல் எறிந்தான். தேஜசிலும் புத்தியிலும் தைரியத்திலும் விஷேஷித்த ஹனுமான், அதற்குள் சிரமம் தீர்ந்து யுத்தம் செய்ய விரும்பி, நீலனுடன் ராவணன் யுத்தம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து ரோஷம் கொண்டு, "அடே ராக்ஷஸ! நீ வெறு ஒருவனுடன் யுத்தம் செய்து கொண்டிருப்பதால் உன்னை இந்தத் தடவை விட்டேன்" என்றார். தசமுகன், தன்மேல் விழும் பாறையை ஏழு கூர்மையான பாணங்களால் தூளாக்கினான். அதைக் கண்டு நீலன் பலவித புஷ்பித்த மரங்களை வேருடன் பிடுங்கித் தசக்ரீவனை அடித்தான். ராக்ஷஸாதிபதி அவைகளைப் பாணங்களால் துண்டித்து நீலனைக் கோரமான சரமாரியால் துளைத்தான். மேகங்கள் பொழியும் பர்வதத்தைப்போல் நீலன் அசைவற்று நின்று, தன் ரூபத்தைச் சுருக்கிக் கொண்டு ராவணனுடைய த்வஜத்தின் நுனியில் குதித்தான். அதைக் கண்டு ராவணன் கோபத்தால் ஜொலிக்க, நீலன் கர்ஜித்தான். தவஜத்தின் நுனியிலும் வில்லின் நுனியிலும், கிரிடத்தின் நுனியிலும் நீலன் அலட்சியமாய் சஞ்சரிப்பதைக் கண்டு, ராம லட்சுமணர்களும் மாருதியும் ஆச்சரியம் அடைந்தார்கள். ராவணன் அந்த வானர வீரனுடைய லாவகத்தையும் சாதுர்யத்தையும் மெச்சி, ஜொலிக்கும் ஓர் அற்புதமான ஆக்னேயாஸ்திரத்தை எடுத்தான். நீலனுடைய வேகத்தால் ராவணன் திகைத்திருப்பதைக் கண்டு வானரர்கள் சந்தோஷத்தால் கூச்சலிட்டார்கள். அதனால் தசமுகன் இன்னும் புத்தி சிதறி ஒன்றும் தோன்றாமல் இருந்தான். பிறகு ஒரு பாணத்தில் ஆக்னேய மந்திரத்தை ஜபித்து த்வஜத்தின் நுனியிலிருக்கும் நீலனைப் பார்த்து, "குரங்கே! உன்னுடைய வேகத்தாலும் லாவகத்தாலும் மாயையால் பல ரூபங்களை எடுப்பவன் போல் காட்டுகிறாய். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீ செய்யும் தந்திரங்கல் வீணாகும். இதோ என் கையிலிருக்கும் பாணம் உன் உயிரை வாங்கப் போகிறது. சக்தி இருந்தால் உன்னைக் காப்பாற்றிக்கொள்" என்று அதட்டி, அந்த ராக்ஷஸ வீரசிகாமணி நீலன்மேல் ஆக்னேயாஸ்திரத்தைப் பிரயோகித்தான். வானர சேனாதிபதி அஸ்த்திரத்தால் மார்பில் அடிபட்டு, தேகமெங்கும் எரிக்கப்பட்டு பதைபதைத்து பூமியில் சாய்ந்தான். தான் மஹா தேஜஸ்வியானதாலும் தன் பிதாவான அக்னி பகவானுடைய கிருபையாலும் மரனமடையாமல் பூமியில் முழங்காலை ஊன்றிக்கொண்டு விழுந்தான்.

நீலன் பிரக்ஞையற்றுக் கிடப்பதைக் கண்டு ராவணன் யுத்த ஆவேசம் கொண்டு, காளமேகங்களைப் போல் கர்ஜிக்கும் ரதத்தை லட்சுமணன் இருக்கும் இடத்திற்குச் செலுத்தினான். சுக்ரீவன் முதலிய வானர வீரர்கலை விலக்கிக் கொண்டு, ஸைன்யத்திற்கு நடுவில் ஜொலித்துக் கொண்டு, வில்லைச் சுழற்றி வளைத்து நாண் ஏற்றிப் பூமி நடுங்கும்படி டங்காரம் செய்தான். அபார சத்வமுள்ள லட்சுமணன் அதைக் கண்டு, ராக்ஷஸ ராஜனே! இந்த வானரர்கள் உன்னுடன் யுத்தம் செய்யத் தகாதவர்கள். என்னிடத்தில் வா. வேறெங்கும் போகாதே" என்றார். அந்த வார்த்தைகளையும் அவருடைய சிம்ம நாதத்தையும் உக்கிரமான நாணோசையையும் கேட்டு, தசானன் லட்சுமணனைக் கிட்டிக் கோபாம் தாளாமல், "புத்தி மயங்கி மரணத்தை விரும்பி இன்று என் கண்ணில் பட்டாய். நல்லது இதோ என் பாணங்களால் உன்னைத் துண்டித்து யமலோகத்திற்கு அனுப்புகிறேன், பார்" என்றான். வெண்மையான கோரப்பற்கள் தெரியும்படி கர்ஜிக்கும் அந்த ராக்ஷஸ வீரசிரேஷ்டனைப் பார்த்து லட்சுமணன் கொஞ்சம்கூட கலங்காமல், "ராக்ஷஸ ராஜனே! விசேஷ ப்ரதாபமுள்ளவர்கள் தங்களைப் புகழார்கள். நீ மஹா பாபியானதால் வீண் பெருமை பேசி கர்ஜிக்கிறாய். உன் வீரியத்தையும் பலத்தையும் பராக்கிரமத்தையும் நானறியனோ? ஒருவரும் இல்லாத பொழுது சன்யாசி வேஷம் பூண்டு சீதையை அபகரித்த மஹா வீரனல்லவா! இதோ வில்லும் கையுமாய் எதிரில் வந்திருக்கிறேன். என்ன செய்யப்போகிறாய், பார்ப்போம். வீணாய்ப் பிதற்றாதே" என்றார். அதனால் கோபம் கொண்டு தசமுகன் ஏழு கூரான பாணங்களால் லட்சுமணனை அடிக்க அவர் அவைகளைத் துண்டித்தார். அதனால் அதிக கோபங்கொண்டு கூர்மையான வேறு பாணங்களைப் பிரயோகித்தான்.லட்சுமணனும் உக்கிரமாய்ச் சரமாரி பொழிந்து அர்த்தசந்திரம், பல்லம், கற்னி முதலிய பாணங்களால் ராவணனுடைய சரங்களை அறுத்தார். அதைக் கண்டு லங்காதிபதி லட்சுமணனுடைய லாவகத்தை மெச்சி வேற் பாணங்களைப் பிரயோகித்தான். லட்சுமணன் கூர்மையாயும் வஜ்ராயுதத்தைஒ போன்ற வேகமுடையவைகளாயும் நெருப்பைப் போல் காந்தி உடையவைகளாயும் இருக்கும் உத்தமமான பாணங்களை வில்லிற் பூட்டித் தசமுகனைக் கொல்வதற்காக விடுத்தார். ராவணன் அவைகளைத் துண்டித்து, பிரம்மா தனக்குக் கொடுத்த ஒரு காலாக்னியைப் போன்ற காந்தியுள்ள பாணத்தால் இளையபெருமாளை நெற்றியில் அடித்தான். அதனால் வில்லை நழுவவிட்டு நடுங்கினார். பிறகு பிரக்ஞை தெளிந்து, ராவணனுடைய வில்லை ஒடித்து மூன்று பாணங்களால் அவனை அடித்தார். தசமுகன் அந்த வேகத்தால் வருந்தி நடுங்கிப் பிறகு பிரக்ஞை யை அடைந்தான். இப்படி வில்லிழந்து, பாணங்களால் துளைக்கப்பட்டு, தேகமெங்கும் கொழுப்பும் ரத்தமும் பெருக திறமை வாய்ந்த லங்கேச்வரன், தனக்கு முன்பு பிரம்மாவால் கொடுக்கப்பட்ட சக்தியென்ற ஆயுதத்தைக் கையிலெடுத்தான். வானரப் படை அதைக்கண்டு நடுங்கிற்று. புகையற்ற நெருப்பைப் போல் ஜொலிக்கும் அந்த ஆயுதத்தை ராவணன் லட்சுமணனைக் கொல்ல உத்தேசித்துப் பிரயோகித்தான். ராமானுஜன் அதைக் கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போன்ற அனேக பாணங்களால் அடித்தார். அப்படியும் அவருடைய விசாலமான மார்பில் அது ஊடுருவிச் சென்றது. அபார சக்தியுள்ள இளையபெருமாள் ராவணனுடைய சக்தி ஆயுதத்தால் அடிக்கப்பட்டு, நெருப்பு ஜ்வாலைகளால் சூழப்பட்டு பிரக்ஞையற்று அசைந்தார். உடனே ராவணன் பாய்ந்து இருபது கைகளாலும் அவரைத் தூக்கி எடுக்கப் பார்த்தான்.

லோகத்தில் தைரியதிற்கு உபமானமாய்ச் சொல்லப்படும் ஹிமய பர்வதத்தைத் தூக்கி எடுக்கலாம். ராவணன் அதில் ஒரு பாகமான கைலாஸத்தைப் பெயர்த்திருக்கிறான் அல்லவா? சமுத்திரங்களுக்கு பிரதானமான க்ஷீராப்தியைக் கடைவதற்குத் தகுந்ததென்று நினைக்கப்பட்ட மந்த்ர பர்வதத்தையும் புஜங்களால் எடுக்கலாம். அதைக் கடைந்த தேவ அசூரர்களையும் பல தடவை லங்காதிபதி ஜெயித்திருக்கிறான் அல்லவா? சகல குலபர்வதங்களுக்கும் நடு நாயகமான மேருவைப் பெயர்த்து எடுக்க முடியும். வாயு பகவான் அதன் சிகரத்தை அடித்து லங்கையை சூழ்ந்த சமுத்திரத்த்ல் தள்ளிவிட்டாரல்லவா? அந்த வாயு பகவான் ராவணனுக்குப் பயந்திருக்கிறார். ஐம்பது கோடி விஸ்தீரணமுள்ள மூன்று லோகத்தையும் பெயர்த்தெடுக்க முடியும்.அதில் ஒரு பாகமான பூமியைக் கும்பகர்ணனுடைய முன் பிறப்பான ஹிரண்யாக்ஷன் புஜத்தின் கீழ் வைத்துக் கொண்டு போகவில்லையா? மூன்று லோகங்களையும் ஆலும் தேவர்களுடன் அவைகலைத் தூக்கவும் முடியும். அவர்களுக்கு அதிபதியான இந்திரனைத் தன்னுடைய புத்திரனே ஜெயித்துச் சிறையில் வைத்திருக்கிறான். ஆனால், ராமனுடைய தம்பியான பரதனுக்குத் தம்பியாய், விஷ்ணுவின் நாலிலொரு அம்சமான இளையபெருமாளைத் தூக்கி எடுக்கவாவது அசைக்கவாவது ராவணனனால் முடியவில்லை. இரண்டு புஜங்களால் கைலாசத்தை அசைத்த ராவணன் இருபது கைகளாலும் லட்சுமணனை அசைக்க முடியவில்லை. தசமுகனும் அவனுடைய பரிவாரங்களும் ஒன்று சேர்ந்தும் முடியவில்லை.

பிரம்மாவால் அனுக்ரஹிக்கப்பட்ட சக்தியால் மார்பில் லட்சுமணன் அடிக்கப்பட்டு, தன் மனதிற்கெட்டாத விஷ்ணுவின் அம்சமான ஸ்வரூபத்தை ஞாபகப்படுத்திக் கொண்டார்.

தானவர்களுடைய கொழுப்பையடைக்கும் ராமானுஜனை ராவணன் புஜங்களால் நெடு நேரம் புரட்டிப் பார்த்தும் அசைக்க முடியவில்லை. மனுஷ்ய தேகத்தில் அவதாரம் செய்த விஷ்ணுவின் அம்சமல்லவா? (அவயவமில்லாத விஷ்ணு ஸ்வரூபத்திற்கு அம்சமுண்டோ என்றால், ஸ்வரூபத்திற்கு அப்படி இல்லாவிட்டாலும், குணங்கள் வெளிப்படுவதில் விளங்கும் தாரதம்யத்தால் அம்சங்களின் பேதம் இருப்பது போல் காணப்படுகிறது)

பிறகு ஆஞ்சனேயர் கோபம் கொண்டு ராவணன் மேல் பாய்ந்து வஜ்ரத்தைப் போன்ற முஷ்டியால் தசமுகனுடைய மார்பில் குத்தினார். அந்த வேகத்தால் ராக்ஷஸதிபதி தேர்த்தட்டில் முழங்காலை ஊன்றிக் கொண்டு கிடுகிடென்று நடுங்கி விழுந்தான். வாயாலும், நேத்திரங்களாலும், செவிகளாலும் ரத்தம் பெருகிற்று. கொஞ்ச காலம் பிரமித்தாற்போல் இருந்து அசைவற்று தேர்த்தட்டில் சாய்ந்தான். பிறகு பிரக்ஞையற்று மூர்ச்சை அடைந்தான். சற்றுத் தெளிந்தும் ஸ்திரமாய் நிற்க முடியவில்லை. பயங்கரமான பராக்ரமுள்ள ராவணன் யுத்தத்தில் பிரக்ஞையற்றதைக் கண்ட ரிஷிகளும், வானரர்கலும், தேவர்களும், இந்திரனும் சந்தோஷத்தால் கூச்சலிட்டார்கள். ராவணனால் உபத்திரவத்தை அடைந்த லட்சுமணனை மஹா தேஜஸ்வியான ஆஞ்சனேயர் புஜங்களால் தூக்கியெடுத்து ராகவன் இடத்தில் கொண்டு போய் வைத்தார். ராவணனுக்கும் அவனுடைய பரிவாரங்களுக்கும் அசையாத ராமானுஜன், ஆஞ்சனேயருடைய அனுகூலமான ஹிருதயத்தாலும் எல்லையற்ற பக்தியாலும் ஒரு குரங்கிற்கு வசப்பட்டு அதிக லேசானார். (லட்சுமணன் மூர்ச்சை அடைந்திருந்தும் அவருக்கு ஞானமும் சக்தியும் குறைவில்லை என்பதால், ராம லட்சுமணர்கள் அந்தந்த சமயங்களில் அக்க்னானத்தாலும் அசக்தியாலும் வருந்துகிறவர்கள் போல் காணப்படுவதும் பேசுவதும் மனுஷ்யபாவனையை அனுசரித்துச் செய்தவையென்று நினைக்கவேண்டியது. பகவான் கேவலம் ராக்ஷஸ வதத்திற்காகவே மனித அவதாரம் செய்ததல்ல. லோகத்தார்க்கு தர்மங்களை அனுஷ்டித்துக் காட்டுவதற்காகவும் ஏற்பட்டது.இல்லாவிட்டால் சர்வக்ஞனும் சர்வேச்வரனும் ஆனந்த சொரூபியான பகவானுக்கு சீதையையும் லட்சுமணனையும் விட்டுப் பிரிந்ததால் துக்கம் ஏது?- சுகர்) அந்த சதி ஆயுதமும் லட்சுமணன் யுத்தத்தில் ஜெயிக்க முடியாதவர் என்று கண்டு அவரை விட்டு ராவணனுடைய தேரில் தான் இருக்குமிடத்திற்குப் போய்ச் சேர்ந்தது. சகல விரோதிகளையும் இடையூறுகளையும் நாசம் செய்யும் சுபாவமுள்ள விஷ்ணுவின் மனத்திற்கெட்டாத அம்சமான தன் சொரூபத்தை ஞாபகப்படுத்திக் கொண்டதால் லட்சுமணன் பிடக்*ஞை தெளிந்து, காயம் ஆறி முன் போலானார்.

மஹாதேஜஸ்வியான ராவணனும், மூர்ச்சை தெளிந்து, வில்லை வளைத்துக் கூர்மையான பாணங்களால் வானரர்கலை உபத்திரவித்தான். வானர வீரர்கள் மடிவதையும் படை மூலைக்கு மூலை ஓடுவதையும் ராகவன் கண்டு ராவணனை நோக்கி ஓடி வந்தார். அப்பொழுது ஹனுமான் அவரை நமஸ்கரித்து, "சுவாமி! என் முதுகின் மேலேறிக் கொண்டு, மஹாவிஷ்ணு எல்லையற்ற பகவானான கருடன் மேலேறி அசூரர்களை ஸம்ஹரித்தது போல ராக்ஷஸர்களுடன் யுத்தம் செய்யுங்கள்" என்று பிரார்த்தித்தார். ரகுவீரனும் அப்படியே செய்து, ராவணன் தேரில் இறுமாந்து உட்கார்ந்து இருப்பதைக் கண்டு கோபப் பரவசராய், பூர்வத்தில் மஹாவிஷ்ணு பலியை ஸம்ஹரிக்க வந்தது போல், கோதண்டத்தை வளைத்து இடிபோல் நாணோசை செய்து, லங்கேசுவரனை நெருங்கி வெகு கம்பீரமாய், "ராக்ஷஸ வீர சிரேஷ்டனே! நில், நில், ஓடாதே. என் பிரிய பாரியையான சீதையை அபகரித்து என் கோபத்திற்காளான பிறகு, எங்கே போய் தப்புவாய்? இந்திரன், யமன், சூரியன், பிரம்மா, அக்னி, சங்கரன் முதலியவர்களை அண்டினாலும் பத்துத் திக்குகளிலும் ஓடி ஒளிந்தாலும் என் கண்ணில் பட்ட பிறகு உன் உயிர் தப்புமா? உனக்கும் உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் மித்ருவைப் போன்ற என் தம்பி இதோ வந்துவிட்டான். நீ அவனைச் சக்தியால் அடித்துக் கொல்லப் பார்த்தாயோ? அவனை மூர்ச்சை அடையும்படி செய்தோமென்று துள்ளாதே. லட்சுமணன் என்னை அடிக்க முடியவில்லையே, உன்னால் ஆகுமா? என்றால் இதோ இருக்கும் அற்புதமான பாணங்களால் ஜனஸ்தானத்தில் வசித்த பதிநான்காயிரம் ராக்ஷஸ வீரர்களையும் கரன், தூஷனன், த்ரிசிரஸ் முதலியவர்களையும் ஒரு முகூர்த்தத்தில் சம்*ஹரித்ததை அறியாயோ?" என்றார். அதைக்கேட்டு லங்கேச்வரன் மஹாவீரியவானான ஆஞ்சனேயரைக் காலாக்னியின் கொழுந்துகளைப் போன்ற கூர்மையான பாணங்களால் அடித்தான். தன்னைக் குத்தித் தள்ளிவிட்டு ராமனைச் சுமந்து வருகிறானென்று கோபம் கொண்டு ராவணன் பாணங்களால் மாருதியைத் துளைக்க துளைக்க, அவருடைய சுபாவமான தேஜஸ் விருத்தியாயிற்று. தசமுகனால் தேகமெங்கும் காயம்பட வாயுபுத்திரனைப் பார்த்து ராமனுக்கு அடங்காத கோபமுண்டாயிற்று. உடனே ராவணனுடைய ரதத்தையும், சக்கரங்களையும், த்வஜத்தையும், குடையையும், கொடிகளையும், ஸாரதியையும், ஆயுதங்களையும், பாணங்களால் நாசம் செய்தார். இந்திரன் வஜ்ராயுதத்தால் மேருபர்வதத்தை இடிப்பது போல், ரகுனாதன் வஜ்ரத்தையும் இடியையும் போன்ற ஒரு பாணத்தால் ராவணனுடைய அகன்ற அழகான மார்பில் அதிவேகமாய் அடித்தார். முன்பு வஜ்ரத்தாலும் இடியாலும் கலங்காமல் அசையாமல் இருந்த தசக்ரீவன், ராம பாணத்தால் அடி பட்டு மிகவும் வருந்தி, நடுங்கி, வில்லை நழுவ விட்டான். அவன் மூர்ச்சை அடைவதைக் கண்டு, ராமன் ஓர் அர்த்த சந்திர பாணத்தைப் பிரயோகித்து, சூரியனைப் போல் ஜொலிக்கும் அவனுடைய கிரீடத்தை அறுத்துத் தள்ளினார். (தன்னை அதுவரையில் ரக்ஷித்து வந்த வில்லை எறிந்து, தானே தன்னை ரக்ஷிக்க முடியுமென்ற அகம்பாவத்தைவிட்டு, ரகுனாதனே தன்னை ரக்ஷிக்க வேண்டும் என்றும் தனக்கு வேறு அடைக்கலமில்லை என்றும் ராவணன் நினைப்பதை அவனுடைய ஸ்திதியால் பகவான் அறிந்து கொண்டார். அவன் அப்படி வார்த்தைகளால் சொல்லவில்லை. ஆகையால் பரம தயாளுவான ஜகதீசன் அவன் உயிரை வாங்காமல் மானபங்கத்தை மாத்திரம் செய்து விட்டார். தலைக்கு வந்தது, தலப்பாகையுடன் போயிற்றென்ற வசனம் சரியாயிற்று. ஒருவன் தன்னை ரக்ஷித்துக் கொள்வதற்கு யாதொரு பிரயத்தனமும் செய்யாமல் பகவானை நம்பி இருப்பதே அவர் அவனை ரக்ஷிப்பதற்கு ஹேதுவாகும்.) விஷமற்ற சர்ப்பத்தைப் போலும் அணைந்த நெருப்பைப் போலும் வில்லை விட்டு எறிந்து, அணைந்த கிரணங்களையுடைய சூரியனைப் போல் பிரகாசமற்று, லட்சுமியின் களையற்று, கிரீடம் அறுபட்டுத் தீனமாய் நிற்கும் ராவணனைப் பார்த்து ராமன், "ராவண! நீ இன்று பிறரால் செய்ய முடியாத வீர செயல்களைச் செய்திருக்கிறாய். பல வானர சிரேஷ்டர்களையும் என் தம்பியையும் அடித்துத் தள்ளியிருக்கிறாய். ஆகையால் ஆயுதங்களைத் தரித்து யுத்தம் செய்வதற்கு முடியாமல் கொஞ்சம் கலைத்திருக்கிறாய் என்று எண்ணுகிறேன். நெடு நேரம் யுத்தம் செய்து களைத்தவனைக் கொன்றாய் என்ற அபவாதத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பதற்கே இப்பொழுது உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். 'சத்துரு எதிரில் நிற்கையில் நான் எப்படிப் போவேன்' என்றால், நான் சம்மதித்து உனக்கு உத்திரவு கொடுக்கிறேன். கபட யுத்தம் செய்பவனே! உன் மாயை எல்லாம் தர்ம யுத்தம் செய்யும் என்னிடத்தில் பலிக்கவில்லையே. ராவன! யுத்தம் செய்து களைத்திருக்கிற நீ இலங்கையில் போய் இளைப்பாறி, வேறு ரதத்தையும் ஆயுதங்களையும் சம்பாதித்துக் கொண்டு நாளைக்கு வா" என்றார். அதைகேட்டு ராவணன் கர்வமும் சந்தோஷமுமற்று, வில்லொடிந்து, குதிரைகளும் சாரதியும் மடிந்து, பாணங்களால் துளைக்கப் பட்டு, கிரீடம் பிளக்கப்பட்டு, அதிவேகமாய் லங்கையில் பிரவேசித்தான்.

தேவாசுரர்களுள் பயங்கரனும் நிகரற்ற பலவானுமான தசமுகன் போன பிறகு, தேவர்களும், தானவர்களும் சந்தோஷித்துக் கொண்டாடினார்கள். பிறகு, ராமன் லட்சுமணன் மேலும், வானரர்கள் மேலும் பாய்ந்திருக்கும் பாணங்களை எடுத்துக் காயங்களை ஆற்றி சேனையை வேறிடத்திற்கு நடத்திக் கொண்டு போனார். தேவர்களுக்கு நித்ய சத்ருவான தசாணன் முறிபட்டு ஓடுவதைப் பார்த்து, தேவர்கள், பூதங்கள், திக்பாலர்கள், ஜலத்தில் வசிப்பவர்கள், ரிஷிகள், உரகர்கள் மற்றும் பூமியில் வசிப்பவர்கள் முதலிய யாவரும் கவலையற்று "மஹாபாபியான ராவணன் ராமனால் தோல்வி அடைந்தான். இனி அவனுக்கு மரணமும், நமது கஷ்டங்கள் தீரும் காலமும் சமீபித்துவிட்டது" என்று ஆனந்தித்தார்கள்.

தஸ்மிந்த் ப்ரபிந்நே த்ரிதசெந்த்ர சத்ரௌ
ஸூராஸூரா பூதகணா திசச்ச
ஸஸாகரா: ஸர்ஷி மஹோரகாச்ச
ததைவ பூம்யம்பு சராச்ச
ததைவ பூம்யபு சராச்ச ஹ்ருஷ்டா: !!

யுத்த காண்டம் சர்க்கம்  59   நிறைவு பெற்றது.


(((((((((((((((((((((((((((( ஸ்ரீ ராம ராம ராம ))))))))))))))))))))))))))) 

Friday, May 6, 2011

3.கல்யாணம் ஆகாதவர்களுக்குக் கல்யாணம் நடக்க

ஸ்ரீ ராமசந்த்ராய நம:
3.கல்யாணம் ஆகாதவர்களுக்குக் கல்யாணம் நடக்க


=================================================================
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
பாலகாண்டம்: ஸர்க்கம் 73
=================================================================


உமா ஸம்ஹிதா

கன்யார்தீ ச வடு: கன்யாப்யனுருப வரார்த்தி நீ !
ஸீதாவிவாஹ ஸர்கம் து படேத் ப்ராத: ப்ரயத்னத: !!
கவ்யம் நிவேதயேத் க்ஷிரம் ஸத்யோ துக்தம் ஸீசிஸ்தலே!




கல்யாணமாகாமலிருப்பது, கல்யாணமான தம்பதிகள் மனக்கசப்பினால் பிரிந்திருப்பது, நியாயமான முறையில் வாழ்க்கைக்கு இன்றியமையாத சில சுகண்கள் கிட்டாமற்போவது போன்றவை நீங்கி, தம் கோரிக்கை பூர்த்தியாவதற்கு, 'ஸீதா கல்யாண' கட்டமுள்ள பால காண்டம் 73-வது ஸர்க்கத்தைக் காலையில் பாராயணம் செய்யவேண்டும்.


நிவேதனம்: அப்போது கறந்த பசும்பால்.


ஸங்கல்பம்
ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரதசத்ருக்ன ஹனுமத்ஸமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரஸாதேன
...நாம்ன்யா:கன்யாயா: ...நாம்ன: வரஸ்ய
சீக்ரமேவ விவாஹஸித்யர்த்தம் ஸ்ரீ ஸீதா
விவாஹாத்மக ஸ்ரீமத் ராமாயண கட்ட
பாராயணம் அஹம் கரிஷ்யே!


ஸர்க்கம் 73
ஸீதா விவாஹம்


யஸ்மிம்ஸ்து திவஸே ராஜா சக்ரே கோதானமுத்தமம்!
தஸ்மிமஸ்து திவஸே ஸூரோ யுதாஜித் ஸமுபேயிவாந்!!


எந்தத் தினத்தில் தசரதர் தன் புத்திரர்களுக்கு விரத ஸமாவர்த்தனம் செய்தாரோ அன்று கேகய ராஜபுத்திரனும் பரதனுக்கு மாமனுமான யுதாஜித் மிதிலைக்கு வந்து தசரதரைக் கண்டு க்ஷேமம் விசாரித்து, "மஹாராஜா! தாமும் இன்னும் யாருடைய க்ஷேமத்தைக் கோருகின்றிர்களோ அவர்களும் சௌக்கியமென்று கேகயாதிபதி வெகுப்பிரீதியுடன் தெரிவிக்கிறார். என் சகோதரியின் மகனைப் பார்க்கவிரும்பி அயோத்யைக்கு வந்தேன். நீங்களெல்லோரும் விவாஹ காரியமாய் மிதிலைக்கு போனதாகக் கேள்விப்பட்டு இங்கே மிக வேகமாக வந்தேன்" என்றார். தனக்கு வெகு பிரியமான தன் மைத்துனனைக் கண்டு தசரதர் சந்தோஷித்துத் தகுந்தபடி உபசரித்தார்.


மறு நாள் காலையில் அவர் நித்திய கர்மங்களை முடித்துக் கொண்டு பந்து பரிவார மந்திரவர்க்கங்களுடன் மஹரிஷிகளை முன்னிட்டுக் கொண்டு யாகசாலைக்கு சமீபத்திலுள்ள விவாஹ மண்டபத்திற்கு போனார். அவருடைய குமாரர்கள் விவாஹத்திற்குப் பூர்வாங்கமான வைதிக லௌகிக காரியங்களை முடித்து வஸ்திராபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, வசிஷ்டர் முதலிய மஹரிஷிகளை முன்னிட்டுத் தசரதருடைய சமீபத்தில் உட்கார்ந்தார்கள். பிறகு வசிஷ்டர் ஜனகரிடத்தில் வந்து, "ராஜசிரேஷ்ட! அயோத்யாதிபதி தன் புத்திரர்களுக்கு சகல விவாஹ பூர்வாங்கங்களை முடித்து, கன்யாதானம் செய்யும் உமது சௌகரியத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். கொடுக்கிறவரும் பெற்றுக்கொள்ளுகிறவரும் எவ்விதத்திலும் உத்தமமானவர்களாகையால் சகல க்ஷேமங்களும் உண்டாகும். இந்த சிலாக்யமான விவாஹத்தைச் செய்து உமது வார்த்தையை நிறைவேற்றும்" என்றார். உத்தம தர்மங்களை அறிந்தவரும், வெகு கம்பீர சுபாவமுள்ளவருமான ஜனகர் அதைகேட்டு, "என் அரண்மனை வாசலில் தங்களைத் தடுக்கும் காவளாளி யார்? இங்கே வருவதற்கு யாருடைய உத்தரவைக் கேட்கவேண்டும்? தங்களுடைய கிருஹத்தில் இஷ்டப்படி சஞ்சரிக்க தடையென்ன? அயோத்யை உங்களுக்கு எவ்வளவு ஸ்வாதீனமோ அவ்வளவு இந்த மிதிலையும் ஸ்வாதீனமல்லவா? விவாஹ சம்பந்தமான சகல மங்கள காரியங்களையும் என் புத்திரிகளுக்குச் செய்து முடித்தேன். கொழுந்து விட்டெரியும் அக்னி ஜ்வாலைகளைப்போல், அவர்கள் சகல வஸ்திராபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு மங்கள வேஷத்துடன் அக்னி வேதிக்கு சமீபத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். நான் சித்தமாக இருக்கிறேன். உங்களுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அரண்மனையின் வாசலில் ஏன் தங்கவேண்டும்? காலதாமதமில்லாமல் வந்து விவாஹத்தை நடத்த வேண்டும்" என்றார். தசரதர் புத்திரமித்திர பந்து மந்திரி புரோகித மஹரிஷி பரிவாரங்களுடன் விவாஹ மண்டபத்தில் பிரவேசித்தார்.


ஜனகர் அவர்களுக்குத் தகுந்தபடி மரியாதை செய்து ஆஸனம் கொடுத்து, வஸிஷ்ட மஹரிஷியே! சகல லோகங்களுக்கும் பரமானந்தத்தைக் கொடுக்கும் ராமனுடைய விவாஹ மஹோத்சவத்தை தர்ம ஸ்வரூபியான தாங்களும் மற்ற ரிஷிகளும் நடத்தும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்" என்றார். வஸிஷ்டர் அப்படியே ஆகட்டுமென்று, விசுவாமித்திரரையும், சதானந்தையும் மற்ற மஹரிஷிகளையும் முன்னிட்டுக் கொண்டு விவாஹ மண்டபத்தின் நடுவில் விதிப்படி வேதியை அமைத்து, அதைச் சந்தனம், புஷ்பம், தங்கப் பாலிகைகள், கிண்டிகள், சங்கப்பாத்திரங்கள், முளைத்த விதைகளுள்ள மடக்குகள், தூபத்தால் நிறைந்த பாத்திரங்கள், ஸ்ருக், ஸ்ருவம், மஞ்சள் கலந்த அக்ஷதைகள், நெல் பொரிகளும் அர்க்கிய ஜலமும் நிறைந்த பாத்திரங்கள் முதலியவைகளால் அலங்கரித்தார். பிறகு அதன்மேல் ஒரே அளவுள்ள  தர்பங்களைப் பரப்பி மந்திரங்களுடன் அக்னிப் பிரதிஷ்டை செய்து தம்பதிகளின் க்ஷேமத்திற்காக ஹோமம் செய்தார்.


பிறகு ஜனக மஹாராஜா சர்வாபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சீதையை அக்னிக்கு சமீபத்தில் ராமனுக்கெதிரில் நிறுத்தி, கௌசல்யையின் ஆனந்தத்தை விருத்தி செயும் ரகுவீரனைப் பார்த்து, "இவள் பூமியிலிருந்து கிடைத்ததால் சீதை என்று பெயருள்ளவள். நான் வெகுப் பிரீதியுடன் இவளை என் பெண்ணாக வளர்த்து, சகல தர்மங்களையும் உபதேசித்திருக்கிறேன். நீ எந்த தர்மத்தை அனுஷ்டிக்க விரும்புகிறாயோ அதைத் தானும் கூட இருந்து அனுஷ்டிப்பாள். இவளை நான் உனக்குப் பார்யையாகக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள். உனக்கு சகல மங்களங்களும் உண்டாகட்டும். உன் கையால் இவளுடைய கையைப் பிடி. இவள் மஹா பதிவிரதையாக இருப்பாள். மஹா பாக்யசாலி: உன் நிழலைப் போல் உன்னை விட்டு பிரியாதவள்" என்று மந்திரங்களால் பரிசுத்தமான ஜலத்தை அவருடைய கையில் வார்த்தார். அப்பொழுது தேவர்களும் மஹரிஷிகளும் 'நல்லது, நல்லது' என்று கொண்டாடினார்கள். தேவதுந்துபி முதலிய வாத்தியங்கள் முழங்கின. ஆகாசத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தது.


பிறகு ஜனக, "லக்ஷ்மண! என்னால் கொடுக்கப்படும் ஊர்மிளையைக் காலதாமதமில்லாமல் பாணிக்கிரஹணம் செய். உனக்கு சகல மங்களங்களும் உண்டாகட்டும்" என்றார். பிறகு சத்ருக்கனனைப் பார்த்து, "பராக்கிரமசாலியே! சுருதகீர்த்தியைப் பாணிக்கிரஹணம் செய். நீங்களெல்லோரும் பிரம்மச்சரிய விரதத்தைப் பூர்ணமாய் அனுஷ்டித்தவர்கள். மதுரமான சுபாவமுள்ளவர்கள். கிருஹஸ்தாசிரமத்தை அனுஷ்டியுங்கள். காலதாமதம் வேண்டாம்" என்றார்.


உடனே அந்த நான்கு ராஜ புத்திரர்களும் வசிஷ்டருடைய அனுமதியால் அந்த நான்கு ராஜ புத்திரிகளைப் பாணிக்கிரஹணம் செய்தார்கள். பிறகு அவர்கள் அக்னியையும் ஜனகரையும் ரிஷிகளையும் பிரதக்ஷினம் செய்து தங்களுடைய ஸூத்திரப்படி தனியாய் அக்னிப் பிரதிஷ்டை செய்து விவாஹ ஹோமத்தை நடத்தினார்கள். அந்த சமயத்தில் தேவதைகள் புஷ்பமாரி பெய்தார்கள். துந்துபி முதலிய வாத்தியங்களை முழங்கினார்கள். கந்தர்வகளும் அப்ஸரஸ்களும் மதுரமாய்ப் பாடினார்கள். மங்கள  வாத்தியங்களை வாசித்தார்கள். ஆனந்தமாய் நர்த்தனம் செய்தார்கள். ரகுகுல சிரேஷ்டர்களான அந்த ராஜகுமாரர்களுடைய விவாஹ காலத்தில் இவ்விதமான ஆச்சர்யங்கள் நடந்தன. இப்படி வாத்திய கோஷங்களுடன் ராஜபுத்திரர்கள் அக்னியை மூன்று தடவை பிரதக்ஷிணம் செய்து விவாஹ ஹோமத்தை முடித்து, பத்தினிகளுடன் தங்களுடைய அரண்மனைக்குப் போனார்கள். தசரத மஹாராஜா தன் பரிவாரங்களோடும் மஹரிஷிகளோடும் அவர்களைப் பார்த்துக் கொண்டே ஆனந்தப் பரவசராய்ப் பின் சென்றார்.


அதோகார்யம் ஜக்முஸ்தே ஸபார்யா ரகுனந்தனா: !
ராஜாப்யனுயௌ பச்யந் ஸர்ஷிஸங்க: ஸபாந்தவ: !!




பாலகாண்டம்: ஸர்க்கம் 73 நிறைவுபெற்றது.


மங்கள சுலோகத்தைக்கூறி நிறைவு செய்யவும்


ஸ்ரீராம ராம ராம

Monday, May 2, 2011

2. செய்தொழிலில் தனலாபம் உண்டாக



ஸ்ரீ ராமசந்த்ராய நம:
2. செய்தொழிலில் தனலாபம் உண்டாக
=======================================================================
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்



அயோத்யா காண்டம்: சர்க்கம் 32


=======================================================================
உமா ஸம்ஹிதா
அர்தகாம: படேத் ஸர்கம் யாத்ரா தான கதாம்சகம்
    ராமஸ்யாரண்ய கமன ஸமயே து த்ரிஸந்த்யகம் !!


தாம் எதிர்பார்த்த பணம் அல்லது பொருள் தனக்குக் கை கூடாமை, உத்தியோகத்தால் சம்பள உயர்வு ஏற்படாமை, கொடுக்கல் வாங்கல்களில் தகராறு முதலிய பணக்கஷ்டங்கள் நிவர்த்தி ஆவதற்கும் பொதுவாக மேன்மேலும் பணம் விருத்தியாவதற்கும் ஸ்ரீ ராமன் காட்டிற்குப் போகுமுன் செய்த "யாத்ரா தானத்தை" விவரிக்கும் அயோத்யா காண்டம் 32-வது சர்க்கத்தை தினம் மூன்று காலங்களிலும் பாராயணம் செய்ய வேண்டும்.



நிவேதனம் : ஐந்து வாழைப்பழங்கள்.


ஸங்கல்பம்


ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் சமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரசாதன, அஸ்ம
து பாத்தேஷூ அர்த்த பரேஷூ கர்மஸூ
புஷ்கல தநாவாப்யர்த்தம் "யாத்ராதான"
த்மக ஸ்ரீமத் ராமாயண கட்ட பாராயணம்
அஹம் கரிஷ்யே1

ஸ்ரீ வால்மீகி நம:
ஸ்ரீ ஹனுமான் நம:
ஸ்ரீ ராமன் நம:

ஸர்க்கம் 32
யாத்ராதானம்


தத: சாஸநமாஜ்ஞாய ப்ராது: ஸூபதரம் ப்ரியம் !
கத்வா ஸ ப்ரவிவேஷாஸூ ஸூயஜ்ஞஸ்ய நிவேஷனம் !!


ராமன் பிராம்மணர்களுக்குத் தானம் கொடுக்கிறார் என்ற புண்ணியகரமான வார்த்தையைக் கேட்டு லட்சுமணன், தன்னை அழைத்துப் போக ராமன் சம்மதித்ததைப் பற்றி அடங்காத ஆனந்தமடைந்தார். பிறகு அவருடைய உத்திரவுப்படி ஸூயக்ஞருடைய வீட்டிற்குப் போய் அக்னிஹோத்திர சாலையில் அவரைக்கண்டு நமஸ்காரம் செய்து," மித்திரரே! வாரும். உலகத்தில் ஒருவரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்த என் தமையனுடைய வீட்டிற்கு வந்து பாரும்," என்று அழத்தார். ஸூயக்ஞர் காலையில் செய்ய வேண்டிய அக்னிஹோத்திரத்தை முடித்துவிட்டு சகல லக்ஷ்மியும் விளங்கும் ராமனுடைய அந்தப்புரத்திற்கு லட்சுமணனுடன் வேகமாகப் போனார்.


மஹா ஞானியான ஸூயக்ஞரைக் கண்டு ராமனும் சீதையும் பரபரப்புடன் எழுந்து கைகூப்பி, ஹோம அக்னியை உபசரிப்பது போல வலம் வந்து வணங்கினார்கள். உத்தமமான தங்கத் தோள் வளைகளையும், தங்கச் சரட்டில் சேர்க்கபட்ட நவரத்தினங்களையும், குண்டலங்களையும், கைவளைகளையும், புஜகீர்த்திகளையும் இன்னும் பல அபூர்வமான ரத்தினங்களையும்  ராமன் ஸூயக்ஞருக்குக் கொடுத்து உபசரித்தார். பிறகு சீதை நினைவுபடுத்தியபின் "மித்திர!, இந்த ஹாரத்தையும் தங்கக் கொடியையும் ஒட்டியாணத்தையும் தங்களுடைய பாரியைக்கு சீதை கொடுக்க விரும்புகிறாள். அதை அங்கீகரிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். மேலும், தான் வனத்திற்குப் போகும் சமயத்தில் விசித்திரமாய் வேலை செய்யப்பட்ட இந்தக் கேயுரங்களையும் தோள் வளைகளையும் தங்களுடைய பத்தினிக்குக் கொடுக்கும்படி பிரார்த்திக்கிறாள். பலவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு விலையுயர்ந்த விரிப்புடைய இந்தக் கட்டிலைத் தாங்கள் அங்கீகரிக்கவேண்டும் என்று விரும்புகிறாள். என் மாமா எனக்குக் கொடுத்த சத்ருஞ்ச்ஜயனென்ற  யானையையும் இன்னும் ஆயிரம் யானைகளையும் தங்களுக்குக் கொடுக்கிறேன்," என்றார். ஸூயக்ஞர் யானைகளை பெற்றுக்கொண்டு ராம லட்சுமணனையும் சீதையையும் ஆசிர்வதித்தார்.


பிறகு பிரம்மா தேவராஜனைக் கட்டளை இடுவது போல் ராமன் மிகுந்தப் பிரியத்துடன், "லட்சுமண, அகஸ்த்தியருடைய புத்திரரையும் விவாமித்திரருடைய புத்திரரையும் இங்கே வருவித்து, லோகத்தில் பயிர்களை ஜலத்தால் போஷித்து வளர்ப்பது  போல், அந்தப் பிராம்மண உத்தமர்களுக்கு ரத்தினங்களைக் கொடுத்துத் திருப்தி செய். அனேகமாயிரம் பசுக்களையும், தங்கம், வெள்ளி, நவரத்தினங்களையும் வேண்டியவரையில் கொடு.


"யஜூர்வேத தைத்ரீய சாகையை அத்யயனம் செய்பவர்களுக்கு ஆசாரியரான ஒரு பிராம்மணோத்தமர் ஒவ்வொரு நாளும் என் தாயின் வீட்டிற்கு வந்து, மிகுந்த பக்தியுடன் அவளுக்கு ஆசிர்வாதம் செய்துகொண்டிருக்கிறார். அவர் மஹாவித்துவான். வேதங்களின் ரகசியங்களை அறிந்தவர். வாகனங்கள், பட்டுகள், போர்வைகள், வேலைக்காரர்கள் முதலியவைகளை வேண்டியவரையில் அவர்க்குக் கொடு. நமது வீட்டில் வெகுநாளாகப் பழகிக்கொண்டிருக்கும் நமது மந்திரியும் சாரதியுமான சித்ரரதரென்பவருக்கு எண்ணிறந்த ஆடுகளையும் ஆயிரம் மாடுகளையும் ரத்தினங்களையும் வஸ்த்திரங்களையும் தான்யங்களையும் கொடுத்துத் திருப்தி செய். வேதத்தில் கடம் காலாபமென்ற பாகங்களை அத்யயனம் செய்துகொண்டு பலாச தண்டத்தைத் தரிக்கும் பல பிரம்மசாரிகள் என்னால் ஆதரிக்கப்பட்டிருக்கிறார்கள். எப்பொழுதும் வேதாத்யனம் செய்து கொண்டிருப்பதால் ஆகாரம் தேட அவர்களுக்குப் பொழுதில்லை. இயற்கையாகவே சுறுசுறுப்பு இல்லாதவர்கள். ருசியான பதார்த்தங்களில் விருப்பமுள்ளவர்கள். ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட எண்பது வாகனங்களையும், தான்யங்களைச் சுமக்க ஆயிரம் எருதுகளையும், நிலங்களை உழுவதற்கு இருநூறு மாடுகளையும், பால் தயிர் இவைகளுக்காக ஆயிரம் பசுக்களையும் அவர்களுக்குக் கொடு. மேகலையென்ற அரைநூல் மாலையைத் தரிக்கும் அனேக பிரம்மசாரிகள் தங்களுக்கு விவாகம் செய்யவேண்டுமென்று என் தாயை அண்டியிருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பசுக்களைக் கொடு. அதனால் கௌசல்யை திருப்தி அடையட்டும்," என்று கட்டளையிட்டார். ராமனால் குறிபிடப்பட்ட தனம் முதலியவைகளை அந்தப் பிராம்மணர்களுக்கு லட்சுமணன் குபேரனைப் போல தானே  கொடுத்தார்.


பிறகு தாரைதாரையாகக் கண்ணீர்ப் பெருக்கிக்கொண்டு நிற்கும் பரிவாரங்களில் ஒவ்வொருவருக்கும் சௌக்கியாகப் பிழைப்பதற்குப் போதுமான தனத்தை ராமன் தானே கொடுத்து, " நாங்கள் திரும்பி  வரும்  வருவரையில் என் அரண்மனையையும் லட்சுமணனுடைய வீட்டையும் சூன்யமாக வைக்காமல் நீங்கள் அங்கிருந்து பாதுகாக்க வேண்டும்", என்றார். பிறகு தன் பொக்கிஷத் தலைவனைத் தருவித்தும், "என் ஐசுவரியம் முழுவதையும் இங்கே கொண்டு வா" என்று உத்தரவு செய்தார். அவைகளை, வேலைக்காரர்கள் குப்பல்களாகக் குவித்தார்கள். பிறகு ராமலட்சுமணர்கள் அவைகளைப் பிராம்மணச் சிறுவர்களுக்கும் கிழவர்களுக்கும் ஏழைகளுக்கும் போதுமான வரையில் கொடுத்தார்கள்.


அப்போது கர்க்கரிஷியின் வம்சத்தில் பிறந்த ஒரு ஏழை பிராம்மணன் அங்கே வந்தார். அவருக்குத் திரிஜடரென்று பெயர். ஏழ்மைத் தனத்தால் தேகம் முழுவதும் மஞ்சள் வர்ணம் படர்ந்திருந்தது. வயல்களில் சிந்திக் கிடக்கும் நெல்லை ஒவ்வொன்றாகப் பொறுக்கி ஜீவனம் செய்கிறவர். மிகவும் வயது சென்றவர். தன் மனைவி மக்களுடன் காட்டில் வசிப்பவர்.


இளம் பெண்ணான அவருடைய மனைவி,  குழந்தைகளை அவருக்குக் காட்டி, "ஸ்வாமி, நாம் ஏழ்மைத்தனத்தை எவ்வளவு காலம் பொறுக்க முடியும்?. தங்கள் கையிலுள்ள கோடாலி, கலப்பை, மண்வெட்டி முதலியவற்றை எறிந்துவிட்டு நான் சொல்லுகிறபடி கேளுங்கள். தங்களுக்கு ஏதாவது திரவியம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால் தர்மமே அவதாரம் எடுத்திருக்கும் ராமனைத் தரிசனம் செய்யுங்கள்", என்றாள். அவர் தன் பத்தினியின் வார்த்தையை ஒப்புக் கொண்டு தன் கந்தை வஸ்த்திரத்தை மறைத்துக் கொண்டு ராமனுடைய அந்தப்புரத்திற்குப் போகும் வழியால் அங்கே வந்து சேர்ந்தார். பிறகு அங்கிரஸ் முதலிய மஹரிஷிகளுக்கு சமமான தேஜசுள்ள அந்தப் பிராம்மணரை ஐந்தாவது கட்டுவரையில் ஒருவரும் தடுக்கவில்லை. அவர் ராமனுக்கு அருகில் போய், " ராஜபுத்திர! இந்த உலகம் முழுவதையும் உன் கீர்த்தி வியாபித்திருக்கிறது. நான் பெரிய குடும்பி. அவர்களை  போஷிக்க என்னிடத்தில் வேண்டிய தனமில்லை. காட்டில் உதிர்ந்த நெல்லுகளைப் பொறுக்கி ஒவ்வொரு நாளும் ஜீவனம் செய்கிறேன். ஆகையால் என்னிடத்தில் கிருபை செய்யவேண்டும்" என்றார்.


இந்தப் பிராம்மணன் பெரிய குடும்பி, மஹாதரித்திரன். இவருக்குத் தனத்தில் எவ்வளவு ஆசை இருக்கிறதென்று பரீக்ஷிக்க விரும்பிப் புன்சிரிப்புடன் வேடிக்கையாக , "ஸ்வாமி!, எண்ணிறந்த என் பசுக்களில் ஒரு ஆயிரம் கூட இன்னும் தானம் கொடுக்கப்படவில்லையே. தங்கள் கையிலிருக்கும் கழியை சுழற்றி எறியுங்கள். அது எங்கே விழுகிறதோ அதுவரையில் இருக்கும் பசுக்கள் தங்களுடையத்" என்றார்.


உடனே அந்தப் பிராம்மணன் வெகு பரபரப்புடன் தன் வஸ்த்திரத்தை இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு, முழு பலத்துடன் கழியைச் சுழற்றி எறிந்தார். அது சரயு நதிக்கு அக்கரையில் அனேகமாயிரம் பசுக்களுக்கு நடுவில் விழுந்தது. அப்பொழுது ராமன் அந்தப் பிராம்மணரை மிகுந்தப் பிரியத்துடன் ஆலிங்கனம் செய்து, சரயு நதிக்கரையிலிருந்து அந்த மாட்டு மந்தைகள் யாவற்றையும் திரிஜடருடைய வீட்டிற்கு ஒட்டிக் கொண்டு போய்ச் சேர்க்கும்படி இடையர்களுக்கு உத்தரவு செய்து, "ஸ்வாமி!, தாங்கள் என்னிடத்தில் கோபிக்காமலிருக்கப் பிரார்த்திக்கிறேன். தங்களுடைய ஒப்பற்ற பலத்தை அறிய  விரும்பியே கழியைச் சுழற்றி எறியும்படி தங்களைச் சொன்னேன். வேடிக்கையாகச் செய்ததே தவிர வேறல்ல. இன்னும் ஏதாவது வேண்டியிருந்தால் கேட்கும்படி பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு யாதொரு தடையும் வேண்டியதில்லை. பிராம்மணர்களுடைய உபயோகத்திற்காகவே என் ஐசுவரியம் முழுவதையும் சம்பாதித்து  இருக்கிறேன். தங்களைப் போன்ற மஹான்களுக்கு அது உபயோகப்பட்டால் அது எனக்கு அளவற்ற கீர்த்தியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்", என்று அவரை சமாதானம் செய்தார். திரிஜடரும் அவருடைய மனைவியும்  அந்த மாட்டு மந்தைகளைப் பெற்றுக் கொண்டு அளவற்ற ஆனந்தமடைந்து கீர்த்தி, பலம், பிரீதி, சுகம் முதலிய மங்களங்கள் குறைவில்லாமல் விருத்தியாக வேண்டுமென்று மனப்பூர்வமாக ராமனை ஆசீர்வதித்தார்கள்.


பிறகு ராமன் தன் பராக்கிரமத்தால் தர்மமாக சம்பாதிக்கப்பட்ட அளவற்ற ஐசுவரியத்தைத் தன் மித்திரர்களுக்கும் பரிவாரங்களுக்கும் தகுந்த உபசாரத்துடனும் மரியாதையுடனும் கொடுத்தார். அங்கிருந்த பிராம்மணர்களும், மித்திரர்களும், வேலைக்காரர்களும், தரித்திரர்களும், பிச்சைக்காரர்களும் ஆக எல்லோரும் தங்களுடைய யோக்கியதைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி ராமனால் கொடுக்கப்பட்ட தானத்தால் திருப்தி அடைந்தார்கள். திருப்தி அடையாதவர்கள் ஒருவரும் இல்லை.


த்விஜ; ஸூஹ்ருத் ப்ருத்யஜனோதவா ததா
தரித்ர பிக்ஷாசரணச்ச யோ பவேத் !
ந தத்ர கச்சிந் ந பபூவ தர்பிதோ
யதார்ஹ ஸம்மாநந தான ஸம்ப்ரமை: !!
ஸர்க்கம் 32
யாத்ரா தானம் நிறைவு பெற்றது.


மங்கள ஸ்லோகங்கள் கூறி  நிறைவு செய்யவும்.

((((((((((((((((((((((((((((((((ஸ்ரீ ராம ராம ராம))))))))))))))))))))))))))))))))

மங்கள சுலோகங்கள்

ஸ்ரீமத் ராமயண பாராயணம் முடிந்த பிறகு,கீழ் காணும் சுலோகங்களை படிக்க வேண்டும்.

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய : பரிபாலயந்தாம்
ந்யாய்யேன மார்கேணமஹீம் மஹீசா : I
கோப்ராஹ்மணேப்ய : சுபமஸ்து நித்யம்
லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸூகினோ பவந்து II

காலே வர்ஷது பர்ஜந்ய : ப்ருதிவீ ஸஸ்யசாலிநீ I
தேசோயம் க்ஷோபரஹித : பராஹ்மணாஸ்ஸந்து நிர்ப்பயா : II
மங்களம் கோஸலேந்த்த்ராய மஹநீய குணாப்தயே I
சக்ரவர்த்தி த நூஜாய ஸார்வபௌமாய மங்களம் II
வேத வேதாந்த வேத்யாய மேக ச்யாமள மூர்த்தயே I
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ச்லோகாய மங்களம் II
விச்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீ பதே :
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம் I
பித்ரு பக்தாய ஸ்ததம் ப்ராத்ருபிஸ்ஸஹ ஸீதயா II
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம் II
த்யக்த ஸாகேத வாஸாய சித்ரகூட விஹாரிணே I
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம் II
ஸௌமித்ரிணா ச ஜானக்யா சாபபாணாஸி தாரிணே I
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம் I
தண்டகாரண்யவாஸாய கண்டிதாமர சத்ரவே I
க்ருத்ர ராஜாய பக்தாயா முக்திதாயாஸ்து மங்களாம் II
ஸாதரம் சபரீ தத்த பலமூலா பிலாஷிணே I
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் II
ஹநுமத் ஸமவேதாய ஹரீசாபீஷ்ட தாயிநே I
வாலி ப்ரமதநாயஸ்து மஹா தீராய மங்களாம் II
ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூல்லங்கித ஸிந்தவே இ

சித்த ராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம் II
ஆஸாத்ய நகரீம் திவ்யாம் அபிஷிக்தாய ஸீதயா  I
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம் II
மங்களாசாஸந பரை : மதாசார்ய புரோகமை : I
ஸர்வைச்ச பூர்வைராசார்யை : ஸத்க்ருதாயாஸ்து மங்களம் II