Friday, May 6, 2011

3.கல்யாணம் ஆகாதவர்களுக்குக் கல்யாணம் நடக்க

ஸ்ரீ ராமசந்த்ராய நம:
3.கல்யாணம் ஆகாதவர்களுக்குக் கல்யாணம் நடக்க


=================================================================
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
பாலகாண்டம்: ஸர்க்கம் 73
=================================================================


உமா ஸம்ஹிதா

கன்யார்தீ ச வடு: கன்யாப்யனுருப வரார்த்தி நீ !
ஸீதாவிவாஹ ஸர்கம் து படேத் ப்ராத: ப்ரயத்னத: !!
கவ்யம் நிவேதயேத் க்ஷிரம் ஸத்யோ துக்தம் ஸீசிஸ்தலே!




கல்யாணமாகாமலிருப்பது, கல்யாணமான தம்பதிகள் மனக்கசப்பினால் பிரிந்திருப்பது, நியாயமான முறையில் வாழ்க்கைக்கு இன்றியமையாத சில சுகண்கள் கிட்டாமற்போவது போன்றவை நீங்கி, தம் கோரிக்கை பூர்த்தியாவதற்கு, 'ஸீதா கல்யாண' கட்டமுள்ள பால காண்டம் 73-வது ஸர்க்கத்தைக் காலையில் பாராயணம் செய்யவேண்டும்.


நிவேதனம்: அப்போது கறந்த பசும்பால்.


ஸங்கல்பம்
ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரதசத்ருக்ன ஹனுமத்ஸமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரஸாதேன
...நாம்ன்யா:கன்யாயா: ...நாம்ன: வரஸ்ய
சீக்ரமேவ விவாஹஸித்யர்த்தம் ஸ்ரீ ஸீதா
விவாஹாத்மக ஸ்ரீமத் ராமாயண கட்ட
பாராயணம் அஹம் கரிஷ்யே!


ஸர்க்கம் 73
ஸீதா விவாஹம்


யஸ்மிம்ஸ்து திவஸே ராஜா சக்ரே கோதானமுத்தமம்!
தஸ்மிமஸ்து திவஸே ஸூரோ யுதாஜித் ஸமுபேயிவாந்!!


எந்தத் தினத்தில் தசரதர் தன் புத்திரர்களுக்கு விரத ஸமாவர்த்தனம் செய்தாரோ அன்று கேகய ராஜபுத்திரனும் பரதனுக்கு மாமனுமான யுதாஜித் மிதிலைக்கு வந்து தசரதரைக் கண்டு க்ஷேமம் விசாரித்து, "மஹாராஜா! தாமும் இன்னும் யாருடைய க்ஷேமத்தைக் கோருகின்றிர்களோ அவர்களும் சௌக்கியமென்று கேகயாதிபதி வெகுப்பிரீதியுடன் தெரிவிக்கிறார். என் சகோதரியின் மகனைப் பார்க்கவிரும்பி அயோத்யைக்கு வந்தேன். நீங்களெல்லோரும் விவாஹ காரியமாய் மிதிலைக்கு போனதாகக் கேள்விப்பட்டு இங்கே மிக வேகமாக வந்தேன்" என்றார். தனக்கு வெகு பிரியமான தன் மைத்துனனைக் கண்டு தசரதர் சந்தோஷித்துத் தகுந்தபடி உபசரித்தார்.


மறு நாள் காலையில் அவர் நித்திய கர்மங்களை முடித்துக் கொண்டு பந்து பரிவார மந்திரவர்க்கங்களுடன் மஹரிஷிகளை முன்னிட்டுக் கொண்டு யாகசாலைக்கு சமீபத்திலுள்ள விவாஹ மண்டபத்திற்கு போனார். அவருடைய குமாரர்கள் விவாஹத்திற்குப் பூர்வாங்கமான வைதிக லௌகிக காரியங்களை முடித்து வஸ்திராபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, வசிஷ்டர் முதலிய மஹரிஷிகளை முன்னிட்டுத் தசரதருடைய சமீபத்தில் உட்கார்ந்தார்கள். பிறகு வசிஷ்டர் ஜனகரிடத்தில் வந்து, "ராஜசிரேஷ்ட! அயோத்யாதிபதி தன் புத்திரர்களுக்கு சகல விவாஹ பூர்வாங்கங்களை முடித்து, கன்யாதானம் செய்யும் உமது சௌகரியத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். கொடுக்கிறவரும் பெற்றுக்கொள்ளுகிறவரும் எவ்விதத்திலும் உத்தமமானவர்களாகையால் சகல க்ஷேமங்களும் உண்டாகும். இந்த சிலாக்யமான விவாஹத்தைச் செய்து உமது வார்த்தையை நிறைவேற்றும்" என்றார். உத்தம தர்மங்களை அறிந்தவரும், வெகு கம்பீர சுபாவமுள்ளவருமான ஜனகர் அதைகேட்டு, "என் அரண்மனை வாசலில் தங்களைத் தடுக்கும் காவளாளி யார்? இங்கே வருவதற்கு யாருடைய உத்தரவைக் கேட்கவேண்டும்? தங்களுடைய கிருஹத்தில் இஷ்டப்படி சஞ்சரிக்க தடையென்ன? அயோத்யை உங்களுக்கு எவ்வளவு ஸ்வாதீனமோ அவ்வளவு இந்த மிதிலையும் ஸ்வாதீனமல்லவா? விவாஹ சம்பந்தமான சகல மங்கள காரியங்களையும் என் புத்திரிகளுக்குச் செய்து முடித்தேன். கொழுந்து விட்டெரியும் அக்னி ஜ்வாலைகளைப்போல், அவர்கள் சகல வஸ்திராபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு மங்கள வேஷத்துடன் அக்னி வேதிக்கு சமீபத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். நான் சித்தமாக இருக்கிறேன். உங்களுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அரண்மனையின் வாசலில் ஏன் தங்கவேண்டும்? காலதாமதமில்லாமல் வந்து விவாஹத்தை நடத்த வேண்டும்" என்றார். தசரதர் புத்திரமித்திர பந்து மந்திரி புரோகித மஹரிஷி பரிவாரங்களுடன் விவாஹ மண்டபத்தில் பிரவேசித்தார்.


ஜனகர் அவர்களுக்குத் தகுந்தபடி மரியாதை செய்து ஆஸனம் கொடுத்து, வஸிஷ்ட மஹரிஷியே! சகல லோகங்களுக்கும் பரமானந்தத்தைக் கொடுக்கும் ராமனுடைய விவாஹ மஹோத்சவத்தை தர்ம ஸ்வரூபியான தாங்களும் மற்ற ரிஷிகளும் நடத்தும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்" என்றார். வஸிஷ்டர் அப்படியே ஆகட்டுமென்று, விசுவாமித்திரரையும், சதானந்தையும் மற்ற மஹரிஷிகளையும் முன்னிட்டுக் கொண்டு விவாஹ மண்டபத்தின் நடுவில் விதிப்படி வேதியை அமைத்து, அதைச் சந்தனம், புஷ்பம், தங்கப் பாலிகைகள், கிண்டிகள், சங்கப்பாத்திரங்கள், முளைத்த விதைகளுள்ள மடக்குகள், தூபத்தால் நிறைந்த பாத்திரங்கள், ஸ்ருக், ஸ்ருவம், மஞ்சள் கலந்த அக்ஷதைகள், நெல் பொரிகளும் அர்க்கிய ஜலமும் நிறைந்த பாத்திரங்கள் முதலியவைகளால் அலங்கரித்தார். பிறகு அதன்மேல் ஒரே அளவுள்ள  தர்பங்களைப் பரப்பி மந்திரங்களுடன் அக்னிப் பிரதிஷ்டை செய்து தம்பதிகளின் க்ஷேமத்திற்காக ஹோமம் செய்தார்.


பிறகு ஜனக மஹாராஜா சர்வாபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சீதையை அக்னிக்கு சமீபத்தில் ராமனுக்கெதிரில் நிறுத்தி, கௌசல்யையின் ஆனந்தத்தை விருத்தி செயும் ரகுவீரனைப் பார்த்து, "இவள் பூமியிலிருந்து கிடைத்ததால் சீதை என்று பெயருள்ளவள். நான் வெகுப் பிரீதியுடன் இவளை என் பெண்ணாக வளர்த்து, சகல தர்மங்களையும் உபதேசித்திருக்கிறேன். நீ எந்த தர்மத்தை அனுஷ்டிக்க விரும்புகிறாயோ அதைத் தானும் கூட இருந்து அனுஷ்டிப்பாள். இவளை நான் உனக்குப் பார்யையாகக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள். உனக்கு சகல மங்களங்களும் உண்டாகட்டும். உன் கையால் இவளுடைய கையைப் பிடி. இவள் மஹா பதிவிரதையாக இருப்பாள். மஹா பாக்யசாலி: உன் நிழலைப் போல் உன்னை விட்டு பிரியாதவள்" என்று மந்திரங்களால் பரிசுத்தமான ஜலத்தை அவருடைய கையில் வார்த்தார். அப்பொழுது தேவர்களும் மஹரிஷிகளும் 'நல்லது, நல்லது' என்று கொண்டாடினார்கள். தேவதுந்துபி முதலிய வாத்தியங்கள் முழங்கின. ஆகாசத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தது.


பிறகு ஜனக, "லக்ஷ்மண! என்னால் கொடுக்கப்படும் ஊர்மிளையைக் காலதாமதமில்லாமல் பாணிக்கிரஹணம் செய். உனக்கு சகல மங்களங்களும் உண்டாகட்டும்" என்றார். பிறகு சத்ருக்கனனைப் பார்த்து, "பராக்கிரமசாலியே! சுருதகீர்த்தியைப் பாணிக்கிரஹணம் செய். நீங்களெல்லோரும் பிரம்மச்சரிய விரதத்தைப் பூர்ணமாய் அனுஷ்டித்தவர்கள். மதுரமான சுபாவமுள்ளவர்கள். கிருஹஸ்தாசிரமத்தை அனுஷ்டியுங்கள். காலதாமதம் வேண்டாம்" என்றார்.


உடனே அந்த நான்கு ராஜ புத்திரர்களும் வசிஷ்டருடைய அனுமதியால் அந்த நான்கு ராஜ புத்திரிகளைப் பாணிக்கிரஹணம் செய்தார்கள். பிறகு அவர்கள் அக்னியையும் ஜனகரையும் ரிஷிகளையும் பிரதக்ஷினம் செய்து தங்களுடைய ஸூத்திரப்படி தனியாய் அக்னிப் பிரதிஷ்டை செய்து விவாஹ ஹோமத்தை நடத்தினார்கள். அந்த சமயத்தில் தேவதைகள் புஷ்பமாரி பெய்தார்கள். துந்துபி முதலிய வாத்தியங்களை முழங்கினார்கள். கந்தர்வகளும் அப்ஸரஸ்களும் மதுரமாய்ப் பாடினார்கள். மங்கள  வாத்தியங்களை வாசித்தார்கள். ஆனந்தமாய் நர்த்தனம் செய்தார்கள். ரகுகுல சிரேஷ்டர்களான அந்த ராஜகுமாரர்களுடைய விவாஹ காலத்தில் இவ்விதமான ஆச்சர்யங்கள் நடந்தன. இப்படி வாத்திய கோஷங்களுடன் ராஜபுத்திரர்கள் அக்னியை மூன்று தடவை பிரதக்ஷிணம் செய்து விவாஹ ஹோமத்தை முடித்து, பத்தினிகளுடன் தங்களுடைய அரண்மனைக்குப் போனார்கள். தசரத மஹாராஜா தன் பரிவாரங்களோடும் மஹரிஷிகளோடும் அவர்களைப் பார்த்துக் கொண்டே ஆனந்தப் பரவசராய்ப் பின் சென்றார்.


அதோகார்யம் ஜக்முஸ்தே ஸபார்யா ரகுனந்தனா: !
ராஜாப்யனுயௌ பச்யந் ஸர்ஷிஸங்க: ஸபாந்தவ: !!




பாலகாண்டம்: ஸர்க்கம் 73 நிறைவுபெற்றது.


மங்கள சுலோகத்தைக்கூறி நிறைவு செய்யவும்


ஸ்ரீராம ராம ராம

No comments:

Post a Comment