Tuesday, April 26, 2011

22:எடுத்த தர்ம காரியம் நிறைவேற (ஸ்ரீமத் ராமாயணம் ஸர்க்கம் 22)

ஸர்க்கம் 22
ராமன் லட்சுமணனை சமாதானம் செய்தது

அத தம் வ்யதயா தீநம் ஸவிஷேச மமர்ஷிதம் !
ச்வசந்தமிவ நாகேந்த்ரம் க்ரோத விஸ்பாரிதேக்ஷணம் !!


ராமனுடைய மனம் அவருக்கு வசப்பட்டது. சகல பிராணிகளிடத்திலும் அவர் செலுத்தும் சக்தி அந்த சமயத்தில் அவருடைய வார்த்தைகளால் வெளிப்பட்டது. லட்சுமணன் ராமனுக்கு அந்தரங்கமானவர்களில் மேலானவர். அதிகப் பொறுமையில்லாதவர். கோபத்தால் அவருடைய கண்கள் பரந்து இருந்தன. அப்படியிருந்தும் தனக்கு மித்திரனும் தம்பியும் பிரியமானவனுமான காரணத்தால் ராமன் எல்லாவற்றையும் மறந்து அவருக்கெதிரில் நின்று கொண்டு, லட்சுமணா!, நீ சுபாவத்தில் அதிக தைரியசாலி அல்லவா? அரசனிடத்திலுள்ள கோபத்தையும் என்னைப் பற்றின வருத்தத்தையும் உனக்குள் அடக்கு. அபிஷேகத்திற்காக எல்லாம் தயாராயிற்றே, இப்பொழுது அது நடக்காவிட்டால் நமக்கு அவமானமல்லவா என்றால் அது நமது பலவீனத்தால் ஏற்படவில்லையே. மேலும், நமது தந்தை செய்த பிரதிக் ஞையை நிறைவேற்றி அவர் உத்தம கதியை அடையும்படி செய்கிறோம் என்று மிகவும் சந்தோஷப்பட வேண்டும். ஆகையால் என் அபிஷேகத்திற்காகச் செய்யப் பட்ட ஏற்பாடுகளை நிறுத்தி விட்டு , நமது தந்தையின் வார்த்தையை நிறைவேற்றுவதற்கு வேண்டிய காரியங்களைச் செய். எனக்கு அபிஷேகம் நடக்கவில்லையே என்று என் தாய்க்கு மிகுந்த வருத்தம். நான் திரும்பி வருவேனா, வரமட்டேனா என்ற பெரிய சந்தேகம். ராமன் தந்தையின் கட்டளையை வெகு சுலபமாக நிறைவேற்றி அதி சீக்கிரத்தில் வனத்திலிருந்து திரும்பி வருவான். இதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாமென்று நீ அவளுக்குச் சொல்லி அவள் வருத்தப்படாமல் செய்ய வேண்டும். இந்த சந்தேகத்தால் அவள் துக்கப் படுவதை ஒரு கணம்கூட நான் பார்க்கப் பொறுக்கமாட்டேன்.

நான் இதுவரையில் தெரிந்தாவது தெரியாமலாவது என் தாய்களுக்கும் தந்தைக்கும் எந்த விஷயத்திலும் பிரியமில்லாமல் நடந்தது இல்லை. நமது தந்தை எப்பொழுதும் உண்மையை பேசுகிறவர். கொடுத்த வாக்கினை தவறாதவர். வீணாகாத பராக்கிரமம் உடையவர். இப்பொழுது தமக்கு உத்தம கதி கிடைக்காதோ என்ற பயம் அவருக்கில்லாமல் நாம் செய்ய வேண்டும். இந்த அபிஷேகம் தடுக்கப்படாமலிருந்தால் தான் கொடுத்த வரங்கள் வீணாகுமே என்று அவருடைய மனம் தவிக்கும். அதைப் பார்த்து நானும் தவிப்பேன். ஆகையால், என் அபிஷேகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை நிறுத்தி இப்பொழுதே காட்டுக்குப் போகிறேன்.

கேகய ராஜருடைய புத்திரி தன் எண்ணம் நிறைவேறித் தன் புதல்வனான பரதனை யாதொரு கவலையுமில்லாமல் அபிஷேகம் செய்யட்டும். நான் மான் தோல், மரவுரி, ஜடை முதலியவைகளைத் தரித்துக் கொண்டு வனத்திற்குப் போனால் கைகேயியின் மனம் சந்தோஷப்படும். ராஜ்யத்தை விட்டு வனத்திற்குச் செல்லவேண்டும் என்கிற புத்தி எனக்கு உறுதியாக ஏற்பட்டிருக்கிறது. அதை மாற்ற முடியாது. ஆகையால் நீ என்னை வருத்தப்படுத்துவது சரியல்ல. நான் வனத்திற்குப் போகிறேன். தாமதம் செய்யாதே.

நான் இப்படி செய்வதற்கு தர்மமே முக்கிய காரணமென்று இதுவரையில் சொன்னேன். ஆனால் அதைவிட மேலான காரணம் ஒன்றுண்டு.நான் காட்டிற்குப் போவதற்கும் பெற்ற ராஜ்யத்தை இழப்பதற்கும் காரணம் ஈஸ்வரனே. கைகேயி அல்ல. வீணாக அவளைத்தூற்றுவதில் லாபமென்ன? கைகேயிக்கு இவ்விதமான எண்ணம் உண்டானதற்குக் காரணமும் ஈஸ்வரனே. இல்லாவிட்டால் நீ எண்ணுகிறபடி அவளுக்கு என்னை நோகடிக்க வேண்டுமென்ற புத்தி ஏன் உண்டாக வேண்டும்? எனக்கு என் தாய்களிடத்தில் எந்த பேத பாகுபாடும் இல்லை என்று உனக்குத் தெரியாதா? அதே போன்றுதான் கைகேயிக்கு என்னிடத்திலும் பரதனிடத்திலும் பேத பாகுபாடு பார்க்கும் புத்தியில்லை என்று உனக்கே தெரியுமே? அப்படியிருக்க என் அபிஷேகத்தை நிறுத்த வேண்டும் என்றும், என்னை காட்டிற்கு அனுப்ப வெண்டுமென்றும் வெகு குரூரமான கொடிய வார்த்தைகளை அவள் சொல்வதை யோசித்தால் ஈசுவரனால் அவளுடைய புத்தி மாற்றப்பட்டிருக்கிறதென்ற காரணத்தைத் தவிர வேறு எனக்குத் தோன்றவில்லை. அவளோ, நல்ல சுபாவமுள்ளவள். உத்தமமான ராஜகுலத்தில் பிறந்தவள். அதற்குத் தகுந்த தயை, பெருந்தன்மை முதலிய சிரேஷ்டமான குணங்களை உடையவள். அப்படிப்பட்ட கைகேயி கெட்ட சுபாவத்தைக் கொண்டு, தாழ்ந்த குலத்தில் பிறந்து, நற்குணங்கள் ஏதுமில்லாத அற்ப பெண்போல் ஏன் நடக்க வேண்டும்?. வேறு யாரிடத்திலாவது சொன்னாலும் பாதகமில்லை. தன் கண்வனிடத்திலேயே ஏன் சொல்ல வேண்டும்?, தோழிகளிடத்தில் சொல்லி அனுப்பினால் பாதகமில்லை. தானே ஏன் நேரில் சொல்லவேண்டும்?. அந்த கணம் வரையில் தானும் மஹாராஜாவும் எல்லையற்ற பிரீதி வைத்திருந்த எனக்கு மிகுந்த கஷ்டத்தை உண்டாக்கும் வார்த்தைகளைச் சொல்லுவாளா?. ஜாடையாகச் சொல்லவும் இல்லை. நேரிடையாகப் பல தடவை சொல்லியிருக்கிறாள். இந்த விஷயங்களை யோசித்தால் இவ்வளவும் ஈசுவரனுடைய செயல் என்றே நிச்சயமாகிறது. எண்ண முடியாத சக்தியுள்ள ஈசுவரனுடைய சங்கல்பத்தை எந்தப் பிராணியும் தடுக்க முடியாதென்பதில் சந்தேகமில்லை. என் கையில் கிடைத்த ராஜ்யம் தவறிப் போனதும், என்னிடத்தில் அவளுக்கு இதுவரையிலிருந்த பிரியம் முற்றிலும் மாறினதும் இந்தக் காரணத்தாலேயே.

ஆனால், தெய்வச் செயலை மனித முயற்சியால் வெல்லமுடியாதோ என்றால், அது கொடுக்கும் பயன் களால் அதன் சொரூபத்தை அறியவேண்டுமே தவிர, அதை நேரில் பார்த்தவர்கள் உண்டா?. எவனாவது தெய்வத்தை எதிர்க்க முடியுமா? சுகம்,துக்கம்,சாந்தி,கோபம்,லாபம்,நஷ்டம்,உற்பத்தி,நாசம் முதலிய காரணம் தெரியாத யாவற்றிற்கும் தெய்வமே காரணம். கடுமையான தவம் செய்து கொண்டிருந்த விசுவாமித்திரர் முதலிய ரிஷிகளும் தெய்வத்தால் பீடிக்கப்பட்டுக் காமகுரோதங்களை அடக்க முடியாமல் சமாதி குலைந்து தங்களுடைய மேன்மையான பதவியிலிருந்து நழுவியிருக்கிறார்கள். நாம் ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் பொழுது அதைத் தடுத்து நாம் எண்ணாத வேறோரு காரியத்தை நடத்தி வைப்பது தெய்வச் செயலே. இந்த நிச்சயத்தை உடையனாய் எனக்கு எது நேர்ந்தாலும் மனம் கலங்காமலிருப்பதால் இப்பொழுது இந்த அபிஷேகம் தடைப்பட்டாலும் அதனால் எனக்குக் கொஞ்சம் கூட வருத்தம் உண்டாகவில்லை.

நீயும் வருத்தப்படாமல் என்னைப்போல நடந்து கொண்டு என் அபிஷேகக் காரியங்களை நிறுத்து. அதற்காகக் கொண்டு வந்திருக்கும் குடங்களிலுள்ள நீரால் நான் தபஸ்வீயாவதற்கு முந்திச் செய்ய வேண்டிய விரத ஸ் நானம் நடக்கட்டும். வேண்டாம்,ஒருவேளை நான் இந்த ராஜ்யத்திற்காக ஆசைப்பட்டுக் கபடமாக அபிஷேகம் ஏய்து கொண்டேன் என்று கைகேயிக்குத் தோன்றினாலும் தோன்றலாம். ஆகையால் அபிஷேகத்திற்காகக் கொண்டு வரப்பட்ட ராஜத்திரவியம் எனக்கு அவசியமில்லை. நானே நதியிலிருந்து நீர் கொண்டு வந்து ஸ் நானம் செய்கிறேன்.

லட்சுமணா,நமக்கு ராஜ்யம் கிடைக்கவில்லையே, ஐஸ்வர்யத்தை   இழந்தோமே என்று கொஞ்சம்கூட வருத்தப்படாதே. ராஜ்யத்தை ஆளுவதும் காட்டிலிருப்பதும் எனக்கு ஒன்றே. அப்படியுமல்ல, யோசித்துப் பார்த்தால் ராஜ்ய பரிபாலனத்தால் உண்டாகும் கவலையும் கஷ்டமும் பாபமும் வனவாசத்தில் இல்லை. இதுவரையில் பார்க்காத பொருள்களைப் பார்க்கலாம். ஆகையால் அரசாட்சியைக் காட்டிலும் வனவாசமே மேலானது.

லட்சுமணா, ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேள். தெய்வத்தின் சக்தி எல்லையற்றதென்று உனக்குத் தெரியுமே. அந்த தெய்வத்தால் ஏவப்பட்டிருப்பதால் கைகேயி நமக்கு இதமில்லாத வார்த்தைகளைச் சொல்லுகிறாள். அப்படியிருக்க என் அபிஷேகத்தை அவள் தடுத்தாளென்று நாம் சந்தேகப்படுவது நியாயமில்லை, என்றார்.

ந லக்ஷ்மணாஸ்மிந் கலு கர்மவிக்நே
மாதா யவீயஸ் யதிசங்கிதவ்யா !
தைவாபிபந்நா ஹி வதத்யநிஷ்டம்
ஜாநாஸி தைவம் ச ததாப்ரபாவம் !!

ஸர்க்கம் 22 நிறைவு.

No comments:

Post a Comment